Tuesday, September 23, 2025

ரோமாஞ்சம் (2023) - மலையாளம்

 



ரோமாஞ்சம் (2023)

மலையாளம்
ஆத்மாவே வா...
ஆத்மாவே வா...
ஆத்மாவே வா...
2007இல் பெங்களூரில் ஒரு காலனியில் உள்ள ஒரு வீட்டில் ஏழு கேரள நண்பர்கள், ஒன்றாகத் தங்கி அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறார்கள். ஆனால், படம் முழுக்க அந்த வீடு மட்டும்தான் லொக்கேசன்.
அவர்களது அன்றாட வாழ்வில், யார் வீட்டை சுத்தம் செய்வது, யார் சமைப்பது, யார் மளிகைக் கடையில் சாமான்கள் வாங்கி வருவது என்பது போல அவர்களுக்குள்ளேயே இணக்கமில்லாமல் இருந்தாலும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது பொழுதுபோக்கு, வாலிபால் ஆடுவது. கேரள மக்களைப் பொறுத்தவரையில், கால்பந்தும் கைப்பந்தும் அவர்களது வாழ்வில் ஒரு அங்கம். கிரிக்கெட்டெல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சம்தான். அதிலும் ஒருவனுக்கு வாலிபாலில் விருப்பம் இல்லாததால், அந்தப் பந்தை யாருக்கும் தெரியாமல் குத்திக் கிழித்து எறிந்து விட, அது தெரிந்த நண்பர்கள், அவனை மசா பந்து எனும் ஆட்டத்தில் (மசா பந்து என்பது, ஒருவனை டார்கெட் செய்து அவனை மற்றவர்கள் எல்லாரும் சேர்ந்து பந்தால் எறிந்து அடிக்கும் விளையாட்டு) அடித்து காயப்படுத்த, அவன் அவனது வேலை சார்ந்த நண்பர்களது அறைக்குச் செல்ல, அங்கே நான்கு பேர்ந்து ஓஜா போர்டை வைத்து பேயுடன் பேச முயற்சிப்பதைப் பார்க்கிறான்.
அதையே தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட அட்டையில் ஓஜா போர்டு வரைந்து முயற்சிக்க அது தோல்வியில் முடிகிறது. பிறிதொரு சமயத்தில் அவன் ஒரு விசயத்தைக் கண்டு கொள்கிறான். ஓஜா போர்டாக உபயோகிக்க கேரம் போர்டை உபயோகிக்கிறான். அது நல்ல பலன் தருகிறது. மற்ற நண்பகளுக்கும் இந்த விளையாட்டு பிடித்துப் போகிறது.
அதன் பிறகு நடக்கும் களேபரங்களும் பின்விளைவுகளுமே ரோமாஞ்சம் திரைப்படம்.
அடுத்து இது 2007இல் நடக்கும் கதை என்பதற்காக படக் குழுவினர் பெரிதாக மெனக்கெடவெல்லாம் இல்லை. உடை, ஹேர்ஸ்டைல், பைக் மாடல், மொபைல் மாடல், என்பதோடு முடித்துக் கொண்டார்கள். மற்றபடி நம் கண்ணுக்கு புதிய வகை லேய்ஸ் பாக்கெட்டோ, குர்குரே பாக்கெட்டோ கண்களுக்குத் தெரிந்தால், அது பட்ஜெட் காரணமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு குறையாக நிச்சயமாய்த் தெரியவேயில்லை. குறை சொல்ல வேண்டுமென்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றித் தேடினால், நிச்சயமாய் நான்கைந்து தேறும். ஆனால், கதையில் ஒன்றிணைய அதைவிட பல காரணங்களுள்ளது.
வீட்டிலுள்ள ஏழு பேரும் ஏழு ரகம். ஹான்ஸ் வைத்து அடக்கிக் கொண்டு திரியும் நண்பன், தந்தையைப் போல எல்லோரையும் அடக்கிக் கன்ரோல் செய்யும் நண்பன், ஏரியா பெண்ணைக் காதலிக்கும் நண்பன், பேய் பிசாசு விசயங்களை வீட்டிற்குள் ஏற்க அனுமதிக்காத நண்பன், இருமலுக்கு டானிக் குடிக்கும் நண்பன் என்று ஆளுக்கொரு வகை குணாதிசயங்கள் உள்ளவர்கள். இதில், எட்டாவதாக ஒருவன் வீட்டில் இணைவான். அவனது குணாதிசயம் நமக்கே சிரிப்பை வரவழைக்கும். வீட்டில் யாரைப் பார்த்தாலும், சுப்ரமணியபுரம் ஜெய் போல ஒரு தலையாட்டல் ஹாய் சொல்லும் பழக்கமுள்ளவனவன். புருவங்களால், ஹாய் சொல்லி, தலையை ஆட்டி ‘சரி’ நான் வேலையைப் பார்க்கிறேன் என்று சிரித்த முகமாக செல்பவன். இவன் வந்த பிறகு தியேட்டரே சிரிப்பலையில் அதிர்ந்தது.
படத்தை இயக்கிய ஜித்து மாதவனுக்கு இதுதான் முதல் படமாம். நிச்சயம் இவர் முதல் படத்தை இயக்கியிருக்கிறார் என்பதை சத்தியமாய் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வெங்கட் பிரபுவிற்கு சென்னை 600028 தான் முதல் படம் என்பதைப் போல.
அதேபோல படத்தை எடுத்து, மொத்தமாக எடிட் செய்து விட்டுத்தான் இசையமைப்பாளர் சுஸின் ஷ்யாமை அணுகியிருக்கிறார் இயக்குநர். அதன் பிறகு அவர் இசையமைத்ததுதான் இந்தப் படத்திற்கான பாடல்களும் பின்னணி இசையும். உண்மையில் நான் அவ்வளவாக மலையாளப் பாடல்களை ரசித்ததில்லை. படம் பார்த்த பிறகு இப்போது வரை இந்தப் படத்தின் பாடல்களைத்தான் ரிப்பீட்டில் சுழல விட்டுக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு இனிமையாக நம்மை இந்தப் படத்தோடு இணைய வைக்கின்றன. இத்தனைக்கும், இயக்குநர் ஜித்து மாதவனின் மாண்டேஜ் எடிட் காட்சிகளுக்கு மட்டுமே இசையமைப்பாளர் சிஸின் ஷ்யாம் இசையமைத்திருக்கிறார். ஆத்மாவே போ, ஆதராஞ்சலி, தலதெறிச்சவர் எல்லாமே ரிங்டோன் ரகம். பாடல்களின் ப்ளேலிஸ்ட் கமெண்டில் கொடுத்திருக்கிறேன்.
உண்மையில் பேயைத் திரையில் காட்டியிருந்தால் கூட இவ்வளவு மிரட்டலாக இருந்திருக்காது. இந்தப் படத்தின் வெற்றியே அதில்தான் அடங்கியிருக்கிறது. சில அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு காரணமோ விடையோ தேடினால், பயமே பதிலாய் மிஞ்சும். அதுதான் இந்தப் படத்தின் ரோமாஞ்சத்திற்குக் காரணம். ரோமாஞ்சம் என்றால் மயிர்கூச்செரிதல் என்று அர்த்தம்.
மயிர்க்கூச்செரிய நமக்குப் பெரிதாகவெல்லாம் ஒன்றும் நடக்க வேண்டாம். திரையில் இறுதியாக வரும் போஸ்ட் கிரெடிட் சீன் ஒன்று போதும்.
நாம் எல்லோரும் எப்படியும் வேலைக்கு என வேறொரு ஊருக்குச் சென்று அங்கே தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகளைப் போல ஒன்றாய் ஒரே வீட்டில் தங்கியோ, படிக்கும் போது, ஹாஸ்டல் போல வீடெடுத்து ஏழெட்டு பேர் ஒன்றாகத் தங்கி இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்போம். நான் வாழ்ந்திருந்தேன். எனக்குக் கனவுகளும் அதைத் தொடர்ந்த அமானுஷ்ய நிகழ்வுகளும் இப்போதுவரை நிறைய நடந்து கொண்டுதானிருக்கிறது. அதனாலோ என்னவோ இந்த ரோமாஞ்சம் எனக்கு மிகவும் நெருக்கமாக உணர வைக்கிறது.
இந்தப் போஸ்டர் கூட ஒரு காரணமாகத்தான் பதியப்பட்டிருக்கிறது.
ஆத்மாவே போ...
ஆத்மாவே போ...
ஆத்மாவே போ...

No comments:

Post a Comment