Tuesday, September 23, 2025

நண்பகல் நேரத்து மயக்கம் (2023)

 



கடைசி விவசாயிக்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல சினிமா. ஜேம்ஸ் எப்படி சுந்தரமாக மாறினான் என்பதற்கு அறிவியல் சார்ந்த விளக்கங்கள் எதையும் 'ஸ்பூன் ஃபீட்' செய்யாமல், அதற்கான விளக்கங்களை மைக்ராஸ்கோப் பார்வைகளில் பார்வையாளனைத் தள்ளாமல், காட்சிகளின் வாயிலாக, இயக்குநர் நம்மை வெறும் கண்களாலேயே புரிந்து கொள்ள வைத்தது மலைக்க வைக்கிறது. பின்னணி இசை என்று எதார்த்த வாழ்வில் ஒன்று இருந்ததே இல்லை. வெறும் சப்தங்களும், ரேடியோ மற்றும் டெலிவிசன் வசனங்களாலும், பாடல்களாலும்தான் அது நிரம்பியிருக்கும். போலவே காட்சிகளை மெருகூட்டியிருந்தது மிகவும் தேர்ந்த மெனக்கெடல். அந்த லேயருக்காகவே இயக்குநர் தனிப்பட்ட முறையில் உழைத்திருக்கிறார். 'ஆடிய ஆட்டமென்ன' பாடல் பின்னணியில் ஒலித்தபோது நிச்சயம் பார்வையாளர்களின் கண்களில் நீர் துளிர்த்திருக்கும். சுந்தரத்தை நமக்கு உருவமாகக் காட்டாமல், ஜேம்ஸின் உடல் மொழியிலேயே சுந்தரத்தைக் கொண்டு வந்திருந்தார் மம்மூட்டி. கடைசி விவசாயியிலும் இதே போன்றதொரு மாய உருவம் இருக்கும். அது ஒன்றல்ல. இரண்டு. ஒன்று விஜய் சேதுபதியின் அத்தை மகள். மற்றொன்று முருகப் பெருமான். அதே போல நண்பகல் நேரத்து மயக்கத்திலும் ஒரு மாய உருவம் நம்மை சுந்தரமாக பின் தொடர்ந்து கொண்டிருக்கும். கூடவே சுந்தரத்தின் குடும்பத்தாரின் அங்கீகரிப்பும் தவிப்பும் நம்மை உள்ளுக்குள் ஏதோ செய்யும். ஜேம்ஸை சுந்தரமாக அவர்கள் ஏற்றுக் கொள்வதும், அவன் போக்கிலேயே அவனை அங்கீகரித்துக் கொள்வதும், பிறகு எப்படியிருந்தாலும் அவன் மீண்டும் ஜேம்ஸாக மாறி சென்று விடுவான் என்று தெரிந்தே தவிப்பதும் தவிர்க்க முடியாத மென்சோகங்கள். இறுதியில் ரம்யா பாண்டியன், மம்மூட்டி செல்வதை பார்த்துக் கொண்டு நின்று அவன் தெரு முக்கில் மறைகையில், அந்த முகம் நமக்கு ஒரு வெறுமையை அவளது வாழ்க்கையைப் போலவே விட்டுச் செல்லும்.
யாருமே தன்னை அந்த ஊரில் ஏற்றுக் கொள்ளவே இல்லை எனத் தெரிந்த பின்னர், சுந்தரம் பாட்டிக்கு பாக்கு எடுத்துக் கொடுத்து விட்டு அந்த ஹாலை விட்டு வெளியேறும் போது சுந்தரத்தின் நிழல் அந்த வீட்டிலேயே தங்கும் நிமிடம் யாரும் எதிர்பாராதது.
ஏன், எதற்கு, எப்படி என்கிற காரணங்களை அலசாமல் அதன் போக்கிலேயே நாமும் அதனோடு மயங்கலாம்.

நண்பகல் நேரத்தில், சுந்தரம் மயங்குவதற்கு முன்னதான ஒரு காட்சி.
சுந்தரம் மிகுந்த குழப்பத்திலிருப்பான். தன்னை யாருமே ஊரில் ஏற்றுக் கொள்ளவில்லை. நாவிதர் மலைச்சாமி இறந்து போயிருப்பார். ஊரின் பொட்டல் காட்டில் கோவில் கட்டுமானங்கள் நடந்து கொண்டிருக்கும். எப்போதும் தானில்லாமல் உணவு உண்ண விரும்பாத மகள் முத்துவோ, தனக்கு முன்னரே மதிய உணவு உண்டிருப்பாள். அண்ணனோ தன்னை யாரோ போல வீட்டிற்குள் வந்து திட்டி விட்டு செல்வான். தனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்கிற பெருங் குழப்பத்தில் பாட்டியுடன் திண்ணைப் படியில் அமர்ந்திருப்பான்.
பாட்டியோ, டிவியில் பழைய சினிமா வசனத்திற்கு சிரித்துக் கொண்டிருப்பாள். அவளைத் திரும்பி ஒரு சில விநாடிகள் பார்த்தவன், அவளருகே இருந்த கொட்டைப் பாக்கை எடுத்து அவளது கைகளில் திணிப்பான். அதைக் கிழவி, சந்தோசமாக சிரித்துக் கொண்டே வாங்கி வாயில் திணித்துக் கொள்ளும். அதுவே அவனுக்குப் போதுமான ஒரு ஏற்பாக இருக்கும்.
எழுந்து வாசலை நோக்கி நடப்பான். வாசல் வழியாக வந்த வெளிச்சம், வீட்டுச் சுவற்றில் வலது பக்கமாக படிந்திருக்கும். அதில் வாசலுக்கு நடந்து செல்லும் சுந்தரத்தின் நிழல் படிந்து நிற்கும். வாசல் வரை சென்றவன் சற்று முன்னதாக நின்று விடுவான். அவனது நிழலும் நிற்கும். திரும்பி வீட்டை ஒரு முறை பார்ப்பான். நிழலும் திரும்பிப் பார்க்கும். பிறகு ஒரு வெறுமையுடன், வாசலை நோக்கித் திரும்புவான். நிழலும் திரும்பும். வாசலைக் கடந்து வெளியே சென்று விடுவான். ஆனால், அந்த நிழல் சுவற்றிலேயே தங்கி, சுந்தரம் வெளியே செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும். அவன் முற்றிலுமாக வெளியே சென்று காட்சியிலிருந்து நீங்கி விடுவான். நிழல் இன்னும் நீங்காமல் அங்கேயே நின்று கொண்டிருக்கும்.
நண்பகல் நேரத்து மயக்கம் -
மீண்டும் ஒரு நல்ல்ல்ல்ல சினிமா
❤💐

No comments:

Post a Comment