Tuesday, January 31, 2017

iBoy (2017)


iBoy (2017)


Netflix Movie
Crime / Science Fiction

டாம், பதின்ம வயது மாணவன். ஒரு திருட்டு கும்பலிடமிருந்து தப்பித்து ஓடும்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தனது செல்போனில் போலீஸை அழைத்து பேசியவாறே ஓடுகிறான். துரத்தியவர்களில் ஒருவன் அவனை சுட்டதில் அந்த செல்போனில் இருந்த சில முக்கியமான உபகரணங்கள் மூளைக்குள் பதிந்து விடுகின்றன. அந்த விபத்திற்கு பிறகு சில நாட்கள் கோமாவிலிருந்தவனின் நினைவுகள் திரும்புகிறது. ஆனால், தன்னை வித்தியாசமாக உணர்கிறான். அவனால் தன்னுடைய செல்போனை தொடாமலேயே அதனை இயக்க முடிகிறது. அதில் வரும் மெசேஜ்களை பிரித்து படிக்க முடிகிறது. அது கண் முன்னே ஒரு விசுவல் எழுத்துக்களாக விரிகிறது. இன்டர்னெட் உபயோகத்தையும் ஒரு சினிமா போல கண் முன்னால் பார்க்கவும், உபயோகிக்கவும் முடிகிறது. அவனது செல்போன் மட்டுமின்றி மற்றவர்களது செல்போன்களையும் இவ்வாறாக இயக்க முடிகிறது. மேலும் தன்னால் எல்லா எலெக்ட்ரானிக் கருவிகளையும் தனது மூளையின் நினைப்பாலேயே, கிட்டத்தட்ட டெலி சிக்னல்களை அனுப்பி இயக்க முடிகிறது. காற்றில் அலையும் மின் அலை வரிசைகளையும், செல்போன் சிக்னல்களையும் படிக்க முடிகிறது.

இது அவனுக்கு வரமா, சாபமா? அவனை துப்பாகிக்கியால் சுட்ட முகமூடிக் கும்பல் யார்? அவர்களது தலைவன் யார்? டாமின் இந்த சக்தியைக் கொண்டு அவன் என்ன ஆனான்? என்பதை ஒன்றரை மணி நேர சைன்ஸ் ஃபிக்சன் ஆக்சன் படமாக நெட்பிளிக்ஸில் வெளியிட்டிருக்கிறார்கள்.

படத்தில் என்னைக்கவர்ந்த பாஸிட்டிவ் விசயங்களை முதலில் பார்ப்போம்.

இதைப் போன்ற சைன்ஸ் ஃபிக்சன் படங்களுக்கு திறம்பட படமாக்கப்பட்ட சினிமாட்டோகிராபியும், கண்ணை கட்டும் விஷுவல் எபெக்ட்ஸும் ரொம்பவே முக்கியம். அது இந்தப் படத்தில் நன்றாகவே ஒத்துழைத்திருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியும் ஒளிப்பதிவும் The Punisher (2004) படத்தின் இரவு நேர ஆக்சன் காட்சிகளை ஒத்திருந்தது. அதேபோல விசுவல் எபெக்ட்ஸ் – டாமின் மூளையில் பதிந்திருக்கும் செல்போன் உபகரணங்கள் அவனது கண் முன்னால் படமாக விரியும் விசயங்கள் அனைத்தும், அப்படியே அயன்மேன் படத்தில் டோனி ஸ்டார்க்கிற்கு ஜார்விஸ் காட்டும் வித்தைகளோடும் ஜாலங்களோடும் ஒத்திருந்தது. மேலும் லூஸி படத்தில் ஸ்கார்லெட்டினால் செய்ய முடிந்த சாகசங்களுக்கும், டாமின் சாகசங்களுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் – லூஸியால் மூளையின் செயல்திறன் ஒவ்வொரு சதவிகிதம் உயர உயர அதன் படிநிலைகளும் வளர்ந்து கொண்டே செல்லும். ஆனால் டாம், செல்போன் மற்றும் சேட்டிலைட் இதன் இரண்டு செயல்திறனையும் அதன் கன்ட்ரோல்களையும் மட்டுமே கொண்டுள்ளவன். Limited Powers. அந்த சிக்னல்களால் என்னென்ன சாகசம் புரிய முடியுமோ அதை மட்டுமே செய்ய முடியும். ஆனால், படம் பார்க்கும் போது அயன்மேனும், ஜார்விஸும், லூஸியும் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இனி இந்தப் படத்தின் நெகட்டிவ் சமாச்சாரங்களைப் பார்ப்போம்.

உண்மையில் ஒரு நவீன யுக சூப்பர்ஹீரோவுக்கான களம். அதை வைத்து விளையாடியிருக்கலாம். பரபர ஆக்சன் படமாக ஆக்கியிருக்கலாம். ஆனால், இத்தனை இருந்தும் ஹீரோவை ஒரு சப்பை போலவே படம் முடியும்வரை மொன்னையாக காட்டியது ஒரு பெருத்த ஏமாற்றம். அதே போலவே ஆக்சன் காட்சிகளும். சுமாரான காட்சிகள். வில்லனின் கதாபாத்திரமும் அப்படியே ஹீரோவைப் போல மொக்கையாகவே வடிவமைக்கப் பட்டிருந்தது ஏமாற்றம் நம்பர் 2. ஹீரோ செய்யும் சாகசங்களெல்லாம் எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ, சவுன்ட் சிஸ்டத்தில் வால்யூம் ஏற்றவும் இறக்கவும் அதனை வெடிக்கவும் செய்யும் சாகசங்களை மட்டுமே படம் முழுக்க டாம் ஒரு அற்புதம் போல செய்வதாகக் காட்டி முடித்தது ஏமாற்றம் நம்பர் 3. (மேலே நான் பாஸிட்டிவ் விசயங்களாக குறிப்பிட்டது அனைத்தும் விசுவல் எபெக்ட்ஸ் பற்றிய விவரணைகள். அதெல்லாம் எக்ஸ்பெக்டேசன்ஸ் அளவுதான். ஆனால் படத்தில் உள்ள ரியாலிட்டி இதுதான்). படத்தில் வரும் வில்லனின் அடியாட்கள் முழுவதும் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். அத்தனை பேரும் ஆயுதங்களை சர்வ சாதாரணமாக கையாள்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய… சரி வேணாம் விடுங்க.

எல்லாவற்றையும் தாண்டி இந்தப்படத்தைப் பார்க்கலாமா? கலாம். பார்க்கலாம். பார்க்கவும்.

நன்னி
நமஸ்கார்

(பி.கு: ஹீரோயின் கேம் ஆப் துரோன்ஸ்ல நடிச்சவங்களாமே. சொல்லிக்கிட்டாங்க)

Sleep Tight (2011) - ஸ்பானிஷ்


Sleep Tight (2011)

ஸ்பானிஷ்
Horror / Thriller

ஒரு திங்கள் கிழமையில் கதை ஆரம்பிக்கிறது.

சீஸர், கதையின் பிரதான கதாபாத்திரம். படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறான். உடன் அவனது மனைவி படுத்திருக்கிறாள். குளியலறையில் பல் விளக்குகிறான். ஆனால், அங்கே இருப்பது ஒரே ஒரு டூத்ப்ரஸ் தான். குளித்து ரெடியாகி லிப்ட்டில் கீழ் தளத்தை வந்தடைகிறான். அந்த அபார்ட்மென்டின் கண்காணிப்பாளர் இருக்கையில் வந்து அன்றைய நாளைத் தொடங்குகிறான். லிப்ட்டிலிருந்து வரும் அந்த அபார்ட்மென்ட் வாசிகளிடம் பணிவான தனது அணுகுமுறையில் கால வணக்கம் சொல்லிக் கொண்டே அவர்களது கம்ப்ளைன்ட்டுகளையும், இதர தேவைகளையும் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கே இறங்கி வரும் ஒரு சிறுமி, அவனிடம் வந்து உரிமையாக பணம் வாங்கிக் கொண்டு செல்கிறாள். அவள் செல்வதற்கு முன்னர், தான் கொண்டு வந்த பால் பாட்டிலைக் குடித்து வேண்டுமென்றே அவனது மேசையில் முழுவதையும் துப்பி விட்டு செல்கிறாள்.

லிப்ட்டிலிருந்து சீஸரின் மனைவி கிளாரா வருகிறாள். அவன் அவளிடம் நடந்து கொள்ளும் விதத்திலிருந்து ஒரு விசயம் தெளிவாகிறது. அது அவனது மனைவியோ, கேர்ள் ப்ரெண்டோ அல்ல என்பது.

பிறகு ஏன் அவள் அவனோடு படுக்கையில் ஒன்றாக படுத்திருந்தாள்? இப்போது ஏன் அவள் அந்த குடியிருப்பு வாசிகளைப் போல அவனுக்கு உறவற்றவள் போல நடந்து கொள்கிறாள்?

இரவு அவனது வேலை முடிந்ததும் அந்த அபார்ட்மென்டில் மேல் பகுதியில் இருக்கும் அவனது வீட்டுக்கு செல்கிறான். குளித்து முடித்து மீண்டும் வெளியில் எங்கோ கிளம்புகிறான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் அதே அபார்ட்மென்டில் 5B க்கு செல்கிறான். காலையில் அவன் படுத்திருந்த அதே படுக்கையறை. ஆனால் காலையில் படுத்திருந்ததைப் போல அல்லாமல் அந்த கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொள்கிறான்.

கிளாரா வருகிறாள். தனது வாழ்க்கையில் சந்தோசமான ஒரு இரவில் தனிமையில் ஆடிப் பாடுகிறாள். இரவு உணவை முடித்து விட்டு வந்து உறங்குகிறாள்.

இவ்வளவு நேரம் கட்டிலுக்கடியில் மறைந்திருந்து இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த சீஸர் சைத்தான், அடியில் மறைந்தபடியே மேல் நோக்கி ஒரு கண்ணாடியை வைத்து அவள் உறங்கி விட்டாளா என்பதைக் கன்பார்ம் செய்து விட்டு மூக்கையும் வாயையும் மறைக்கும் ஒரு முகமூடியுடன் வெளியே வருகிறது. கைக்குட்டையால் அவளது மூக்கைப் பொத்துகிறது. உறக்கத்திலேயே கிளாரா மயங்கிச் சரிகிறாள்.

இது Mientras duermes (alias) Sleep Tight (2011) என்ற ஸ்பானிஷ் படத்தின் ஐந்து நிமிடக் கதை மட்டுமே. அங்கிருந்து சீட்டின் நுனிக்கு நகர ஆரம்பிக்கும் நாம் இறுதி நொடிக்குள் பத்து விரல் நகங்களையும் கடித்துத் துப்பியிருப்போம். Don’t Breath-க்கெல்லாம் அப்பன் இந்தப் படத்தின் கதை. படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் இந்த இரண்டுதான். ஆனால், கண்டிப்பாக தவறவே விடக் கூடாத அருமையான த்ரில்லர் ட்ராமா. ஹாரர் என்றும் சொல்லலாம். கதையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியாத அழகான, அருமையான திக் திக் திகில் திரைக்கதை. Rec சீக்குவலை எழுதி இயக்கிய Jaume Balagueró – வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் இது. இந்தப் படம் பார்ப்பதானால் ஹெட்போன் உபயோகிக்கவும். பின்னணி இசையின் மிரட்டலை துல்லியத்துடன் கேட்டு ரசிப்பதற்கும், தர்ம அடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும். (For your safety).

நாளை சந்திப்போம்.

Monday, January 30, 2017

Detour (2016)



Detour (2016)

Thriller


ஹார்ப்பர், சட்டம் பயிலும் மாணவன். தனது தாய் கோமாவில் ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள். அவனது தாயாரின் கணவன் வின்சென்ட் குடிபோதையில் சென்று தாறுமாறாக கார் ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என்று அவன் மேல் வெறுப்போடும், தாயாரின் கோமாவினால் சோகத்தோடும் திரிபவன்.


ஒருநாள் பார் ஒன்றில் சரக்கடிக்கும் போது, உண்டான தகராறு ஒன்று நட்பாக மாறுகிறது. அவன் பெயர் ஜானி ரே. அவனிடம் முதல் பாராவில் உள்ள தன்கதையை சொல்லுகிறான். ஜானி, வின்சென்ட்டை கொல்கிறேன். அதற்கு 20000 டாலர்கள் தர வேண்டும் என்று சொல்லுகிறான். காலையில் எழுந்து முந்தைய நாள் இரவில் நடந்ததை யோசித்த போது அவன் ஜானியிடம் தன்னைப் பற்றி உளறியது ஞாபகம் வருகிறது.

ஹாஸ்பிட்டலில் இருந்து அவனது தாயாருக்கு உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைவதாக செய்தி வருகிறது. அதே சமயம் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. வெளியே ஜானியும் முந்தைய இரவில் அவன் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கொலைகாரியும், பார் டான்சருமான செர்ரியும் நின்றிருக்கின்றனர். ஹார்ப்பர் அதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியடைகிறான். ஜானி ஹார்ப்பரிடம் 20000 டாலர் கொடுக்கச் சொல்லி மிரட்டுகிறான். ஹார்ப்பர், தான் குடிபோதையில் உளறியதாக எடுத்துச் சொல்கிறான். ஆகவே வின்சென்ட்டை கொல்ல வேண்டாம். அது தனது பிரச்சினை என்றும் கூறி கதவை சாத்துகிறான். ஆனால், ஜானி மற்றவர் சொல்வதை கேட்கும் ஆள் கிடையாது. கதவை உடைத்துக் கொண்டு வந்து அவனை மிரட்டுகிறான். வேறு வழியில்லாமல், வேகாஸுக்கு சென்று வின்சென்ட்டை கொல்லுவதற்கு சம்மதித்து அவர்களோடு பயணிக்கிறான்.

ஜானி ரே, வின்சென்ட்டை கொன்றானா? அவர்களது பயணம் எப்படிப்பட்டது? ஜானியுடனும், செர்ரியுடனும் சென்ற ஹார்ப்பரின் நிலை என்னவானது என்பதே மீதிக்கதை.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தேன். மேற்கூறிய பத்து நிமிடத்திற்கான கதை மட்டுமே மெதுவாக நகர்ந்தது. ஆனால், அதன் பின்னர் கதையின் ஓட்டம் ப்ப்ப்பா மலைக்க வைத்து விட்டது.

முதல் காரணம் Pulp Fiction படத்தின் கதை சொல்லும் முறையில் இந்தக் கதை நகர்ந்தது. அடுத்து ஜானியின் கதாபாத்திரம். அவன் ஒரு மூர்க்கன். அவன் சொல்லுவதை எதிர்த்துப் பேசத் துணிபவர்கள் ரத்தம் பார்க்காமல் போக மாட்டார்கள். அடுத்து என்ன செய்வானோ என்று பீதியைக் கிளப்பும் கதாபாத்திரம். மூன்றாவதாக செர்ரி கதாபாத்திரம். அவள் ஜானியைப் போல மூர்க்கத்தனம் கொண்டவளில்லை. அவளின் முறைகளும் குணங்களும் வேறு. அவளையும் எளிதில் கணிக்க முடியாது. அவளும் அராத்துப் பேர்வழிதான். நான்காவது ஹார்ப்பர் கதாபாத்திரம். அதாவது படம் பார்க்கும் நாம் ஜானியாலும் செர்ரியாலும் எப்படி பதறுவோமோ அதே பதட்டத்தை திரையில் காண்பிக்கும் கதாபாத்திரம். கதையின் நாயகனும் அவனே. ஐந்தாவது, இந்தப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் ஸ்மித். இந்தப்பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறோம். Triangle படம் ஞாபகமிருக்கிறதா? அந்தப் படத்தின் இயக்குநரே தான். படம் முடிந்தபின்பு தான் இயக்குநரின் பெயரையே கவனித்தேன்.

கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய must watch thriller படம். (குழந்தைகள் தவிர்க்க)

எதோ சொல்ல வந்து மறந்து விட்டேன் போல. aah Yes. It’s an wonderful Road Movie. செம!

Tale of Tales (2015)



Tale of Tales (2015)

Fantasy / Drama


பதினாறாம் நூற்றாண்டில் ஒரு ராஜ வம்சத்தில் மூன்று கதைகளின் தொகுப்புதான் இந்தப்படம். உண்மையில், Giambattista Basile என்கிற இத்தாலிய கவிஞர் எழுதிய கதைகளைத் தழுவி கதையமைக்கப்பட்டது.


கதை #1

லாங்க்ட்ரெல்லிஸ் ராஜாவுக்கும் ராணிக்கும் வாரிசுளில்லை. அந்த ஏக்கத்தால் இருவரும் வாடுகின்றனர். மந்திரவாதி ஒருவர், ராஜா தனியே சென்று கடல் மிருகத்தை வேட்டையாடி அதன் இதயத்தை எடுத்து வந்து அதை ஒரு கன்னிப் பெண் தனிமையில் சமைக்க, ராணி அதை உண்டால் அன்றே குழந்தை பிறக்கும் என்று உபாயம் கூறுகிறார். ராஜாவும் அதேபோல வேட்டையாடுகிறார். ஆனால் கடல் மிருகத்தால் தாக்கப்பட்டு இறந்து விடுகிறார். அவர் வேட்டையாடிய கடல் மிருகத்தின் இதயத்தை சிப்பாய்கள் எடுத்து வர, அரண்மனையிலிருந்த சமையல்காரிகளில் கன்னிப் பெண் ஒருத்தி அதனை சமைக்கிறாள். சமைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் கற்பமாகிறாள். ராணி அதை உண்டதனால் அவளும் கற்பமடைகிறாள். அன்று இரவே இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பிறக்கிறது. எலியாஸ் – ஜோனா. அவர்கள் வளர்ந்து பதினாறு வயதான போது, ராணிக்கு ஒரு பிரச்சனை தனது மகன் எலியாஸின் சகவாசத்தால் வருகிறது. அது சமையல்காரிக்கு பிறந்த மகன் ஜோனா.. ராணிக்கு எலியாஸ், சமையல்காரியின் மகன் ஜோனாவோடு பழகுவது பிடிப்பதில்லை. அவனை அடியோடு வெறுக்கிறாள். ஆனால், எலியாஸோ சமையல்காரியின் மகன் ஜோனா மீது உயிரையே வைத்திருக்கிறான். ராணி அவனைக் கொல்லுவதென்று முடிவெடுக்கிறாள்.

கதை #2

அதே வம்சத்தைச் சேர்ந்த ஸ்ட்ராங்க்லிஃப் ராஜா ஒரு womanizer. திருமணமாகாதவர். சதா பெண்களோடு சல்லாபித்துக் கொண்டு திரிபவர். ஆனால், அவர் காணும் பெண்கள் மீது அவருக்கு காதலோ திருப்தியோ இருந்ததில்லை. ஒருநாள் அவரது அரண்மனைக்குட்பட்ட பகுதியில் உள்ள வசிப்பிடத்தில் மங்கலான வெளிச்சத்தில் ஒரு பெண்ணின் பாடலை கேட்க நேர்கிறது. அந்தக் குரல் மீது அவருக்கு பிரியம் ஏற்பட அவளுக்கு சிப்பாய் மூலம் தங்க மாலையைப் பரிசளிக்கிறார். அவள் அதை முகம் காட்டாமலேயே வாங்கிக் கொண்டு சிப்பாயை திருப்பி அனுப்புகிறாள். உண்மையில் அந்த குரலுக்கு சொந்தமானவள் ஒரு வயதான மூதாட்டி. பெயர் டோரா. அவளுக்கு சகோதரி ஒருத்தியும் அவளோடு வசிக்கிறாள். அவள் பெயர் இம்மா. அவளும் வயதான மூதாட்டியே. இருவரும் வெளி உலகத்திற்கு முகம் காட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அன்று இரவு ராஜா டோராவின் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டுகிறார். அவள் உள்ளிருந்தபடியே பேசுகிறாள். வெளியே வர மறுக்கிறாள். ராஜாவிற்கு அவளது குரலைக் கேட்டு ஏற்பட்ட பிரியம், அவள் முகத்தை காணாமல் ஏங்கி ஏங்கி அது கட்டுக்கடங்காத காதலாக மாறி விடுகிறது. அவளோ ஒரு வாரம் கழித்து வந்தால் என் ஒரு விரலை மட்டும் காட்டுகிறேன் என்று திருப்பி அனுப்பி விடுகிறாள். ஒரு வாரத்திற்குள் விரலில் உள்ள சுருக்கங்களை மறைக்க பகீரப்பிரயத்தனம் செய்து பார்க்கிறாள். ஆனால் முடிவதில்லை. ராஜா வருகிறார். விரலைக் காட்டச் சொல்லிக் கேட்கிறார். கதவு சந்து வழியாக விரலை நீட்ட இருட்டில் அந்த விரலை கண்மூடித்தனமாக ரசிக்கிறார். இப்போதே அவளை அனுபவித்தாக வேண்டும் என்கிற காம வெறியில், கெஞ்சுகிறார். டோரா அதற்கு சம்மதிக்கிறாள் ஒரு நிபந்தனையோடு.

கதை #3

ஹைஹில்ஸ் ராஜாவுக்கு மனைவியில்லை. ஒரே ஒரு மகள் மட்டுமே. அவள் பெயர் வயலெட். அவர் மகள் மீது மிகுந்த அன்போடு வளர்த்து வருகிறார். வயலெட்டிற்கு பருவப் பெண்ணிற்கு உண்டான எல்லா எதிர்பார்ப்புகளும் உண்டு. தனது கணவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பட்டியலே உண்டு அவளிடம். ராஜாவுக்கு பூச்சிகளென்றால் மிகவும் இஷ்டம். யாருக்கும் தெரியாமல் ஒரு பூச்சியை வளர்க்கிறார். அதன் மீதும் அளவு கடந்த பிரியத்தைக் கொண்டிருக்கிறார். அது அளவில் மிகப்பெரியதாக வளர்கிறது.. ஒரு நாள் அது இறந்தும் போகிறது. அந்த வேதனையோடு தனது மகளின் சுயம்வரத்தை நடத்துகிறார். அந்த பூச்சியின் தோலை உரித்து தொங்கவிடுகிறார். அது எதனுடைய தோல் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு வயலெட்டை மணம் முடித்து வைப்பதாக போட்டி ஆரம்பமாகிறது.

லாங்ட்ரெல்லிஸ் மகாராணி ஜோனாவைக் கொன்றாளா?, எலியாஸும் ஜோனாவும் என்னவானார்கள்?,

டோராவுக்கும் ஸ்ட்ராங்க்லிஃப் ராஜாவுக்கும் அன்று இரவு என்ன நடந்தது? அவள் கிழவி என்பதை எவ்வளவு நேரம் மறைத்து வைக்க முடியும்? டோராவும் இம்மாவும் என்னவானார்கள்?

ஹைஹில்ஸ் ராஜா நடத்திய சுயம்வரம் என்னவானது? அந்த தோல் எதனுடையது என்பதை யாரேனும் கண்டுபிடிக்க முடிந்ததா? வயலெட்டின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறியதா?

என்பதை ஒரு கதை மாற்றி இன்னொரு கதை என ஒரு தொகுப்பாக ஒரு நாவல் போல நீள்கிறது இந்த திரைப்படம்.

இந்தப்படத்திற்கு imdb யில் 6.4 ரேட்டிங் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஒரு underrated European dark fantasy movie ஆகவே தோன்றுகிறது. இதன் ஒரிஜினல் டைட்டில் il racconto dei racconti (இத்தாலிய மொழி). இதன் இயக்குனர் Matteo Garrone – க்கு இதுதான் முதல் நேரடி ஆங்கிலத் திரைப்படம். மேலும் முதல் பேண்டஸி படமும் கூட. மற்றவைகளெல்லாம் ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்கள். அனைத்துமே நல்ல என்டர்டெய்ன் செய்யக்கூடிய திரைக்கதையைக் கொண்ட படங்களே.

இந்த வருட ஆரம்பத்திலிருந்து தினசரி ஒரு படமாவது பார்த்துவிடுவது என்று முடிந்தவரை அதை செய்து கொண்டும் இருக்கிறேன். ஆனால், அதனை ஒரு அறிமுகப்பதிவாக எழுதத்தான் முடிவதில்லை. முடிந்தவரை அதனையும் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். மேற்கூறிய கதைகள் கதாபாத்திர அறிமுகங்களே. கதையையே சொல்லிவிடும் ஸ்பாய்லர் அல்ல. இந்தப்படமும் சற்றே நீளமானதும் கூட. மொத்தம் 2:15 மணி நேரம் ஓடக்கூடியது. தாராளமாகப் பார்க்கலாம். போரடிக்காது. எனக்கு ரெண்டேகால் மணி நேரம் போனதே தெரியவில்லை. படம் பார்த்து சில காட்சிகள் மூன்று நான்கு நாட்களுக்கு மனதை விட்டு அகலவே இல்லை. (குழந்தைகள் தவிர்க்க)

Passengers (2016)



Passengers (2016)


Science Fiction / Adventure


(கீழே உள்ள எதுவும் ஸ்பாய்லர் அல்ல. அது கதையில் வரும் பதினைந்து நிமிட காட்சிகளே. இருந்தாலும் ஒரு முன்னெச்சரிக்கை ஸ்பாய்லர் அலெர்ட்டுடன்.)


புதிய கிரகத்தில் காலனியை அமைப்பதற்காக 5000 பேர் கொண்ட விண்கலம் ஒன்று கிளம்புகிறது. அந்த விண்கலம் அந்த புதிய கிரகத்தை சென்றடைய 120 வருடங்களாகும். ஸ்லீப் மோடில் பயணிப்பதால் அவர்களால் அதே வயதுடன் சென்று அந்த புதிய கிரகத்தில் தங்களது புதிய வாழ்க்கையை ரெஸ்யூம் செய்ய முடியும்.

30 வருடங்கள் தாண்டிய நிலையில், விண்கலத்தின் எஞ்சினில் ஏற்பட்ட சிறிய கோளாறினால், ஜிம் ப்ரெஸ்டனின் ஸ்லீப்பிங் சேம்பர் செயலிழக்கிறது. அவன் விழித்துக் கொள்கிறான். ஆரம்பத்தில் புரியாமல் விழித்தாலும் அவன் ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர் என்பதால், அந்த சேம்பரை மீண்டும் ஸ்லீப் மோடுக்கு மாற்றி உறங்க வேண்டுமென்றால், முறையான அனுமதி தேவை என்பதை புரிந்து கொள்கிறான். அனுமதையைப் பெறுவதற்கான அறையின் கதவு உறுதியான இரும்பினால் ஆனது. அதனை உடைத்து உள்ளே செல்ல முயற்சி செய்கிறான். முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்கிறான். முடியவில்லை. முயற்சித்துக் கொண்டே இருக்கிறான். ஒரு வருடமாக… அவனால் அதை உடைக்கவே முடியாது என்பதை உணர்கிறான்.

அந்த விண்கலத்தில் அனைத்து வசதிகளும் உண்டு. சினிமா தியேட்டர், நீச்சல் குளம், ஹோட்டல், பப், ரெஸ்டாரென்ட், பேஸ்கட்பால் கிரவுன்ட், தனித்தனி அறைகள் அனைத்தும் உண்டு. அத்தோடு பார் வசதியும் உண்டு. பார்டென்டராக ஒரு ஹ்யூமனாய்ட் இருக்கிறது. அது ஒரு ஆண் ஹ்யூமனாய்ட். சாதாரண மனிதர்களைப் போல நாம் சொல்லும் விசயங்களை நினைவுகளில் வைத்துக் கொண்டு சகஜமாக சரளமாக உரையாடும். ஆனால் அது ஒரு மெஷின். அதனோட நட்பு பாராட்ட முடியாதல்லவா! மீண்டும் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறான். ஒரு வருடத்தை தனிமையிலேயே தொலைக்கிறான்.. அங்கே உள்ள வசதிகளை தனிமைகளை அனுபவித்து யாருமே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறான். முடியவில்லை. மீண்டும் உள்ளேயே சுற்றி சுற்றி வருகிறான். அங்கே சேம்பரில் உறங்கிக் கொண்டிருப்பவர்களில் ஒரு அழகான பெண்ணை காண்கிறான். அங்குள்ள வசதிகளைக் கொண்டு அவள் பெயர் அரோரா லேன் எனவும் அவள் ஒரு எழுத்தாளர் எனவும் அறிந்து கொள்கிறான். அவளது வீடியோ பதிவுகளையும், அவள் எழுதிய கதைகளையும் படிக்கிறான். அவளது பேச்சும், எண்ணங்களும், எழுத்துக்களும் அவள் மேல் காதல் கொள்ளச் செய்கின்றன. அவளை எழுப்ப முடிவெடுக்கிறான்.

ஒருவேளை அவளை உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டால், அவளாலும் மீண்டும் ஸ்லீப் மோடுக்கு செல்ல முடியாது. விண்கலம் புதிய கிரகத்தை சென்று சேர்வதற்குள் இருவரும் வயதாகி இறந்து போகலாம். அல்லது தள்ளாத வயதில் சென்று சேரலாம். எப்படி இருந்தாலும் அரோராவை எழுப்புவதென்பது கொலை அவளை கொலை செய்வதற்கு சமம்.

ஜிம் அரோராவை எழுப்பினானா?, அவர்களால், அந்த ஸ்லீப்பிங் சேம்பர் பிரச்சனையை சரி செய்ய முடிந்ததா? ஆரம்பத்தில் விண்கலத்தில் ஒரு கோளாறு ஏற்பட்டதே அதை அவர்களால், கண்டறிந்து சரி செய்ய முடிந்ததா?, அந்த கதவினை அவர்களால், திறக்க முடிந்ததா?, அவர்கள் அந்த புதிய கிரகத்தை சென்றடைந்தனரா? என்பதனை 3D அரங்குகளில் காண்க.

ஜிம் ப்ரெஸ்டனாக, கார்டியன் ஆப் த கேல்க்ஸியில் ஸ்டார் லார்டாக நடித்த கிறிஸ் பிராட்டும், அரோராவாக எக்ஸ்மென்னில் மிஸ்டிக்காக நடித்த ஜெனிபர் லாரன்ஸும், பார்டென்டர் ஹ்யூமனாய்டாக அண்டர்வேர்ல்டில் லூஸியனாக நடித்த மைக்கெல் ஷீனும், அழுங்காமல் குலுங்காமல் தூங்கிக் கொண்டே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய 4998 துணை நடிகர்களும், அது போக பிரம்மாண்ட விசுவல் எபெக்ட்டில் உருவான ஒரு விண்கலமும் கொண்ட, ரொமாண்டிக் சைன்ஸ் பிக்சன் அட்வென்ச்சர் படம் தான் #Passengers (2016).

இந்தப்படத்தில் பார்ட்டென்டருடன் ஜிம் பேசிக் கொள்ளும் காட்சி The Shining (1980) படத்தை ஞாபகப்படுத்தியது. அதேபோல பல காட்சிகள் 2001: Space Odyssey படத்தை ஞாபகப்படுத்தியது. இன்ஸ்பயர் செய்யப்பட்டது என்பதை பின்னர் நெட்டில் நோண்டி தெரிந்து கொண்டேன். நல்ல ஜாலியான என்டர்டெய்ன்மென்ட் படம். படுக்கையறைக்காட்சிகளும், இதர பதர காட்சிகளும் கசமுசாவென ஆங்காங்கே உள்ளதால், குழந்தைகள் தவிர்க்க. உண்மையில் 3டி-யில் ஜெனிபர் லாரன்சை காண்பதென்பது இறைவன் கொடுத்த வரம்.


ARQ (2016)



ARQ (2016)



Science Fiction / Thriller



ரென்டன் (Renton) படுக்கையிலிருந்து கண் விழிக்கிறான். அப்போது சரியாக காலை 6:16 AM. அருகில் படுத்திருக்கும் தனது மனைவி (Hannah) ஹன்னாவை பார்க்கிறான். பெட்ரூம் கதவு பலத்த சத்தத்துடன் உடைக்கப்படுகிறது. முகமூடியணிந்த மூன்று பேர் நுழைந்து அவர்கள் இருவரையும் அடித்து தரதரவெனெ இழுத்துச் செல்கின்றனர். அவர்களிடமிருந்து ஆவேசமாக விடுபட்டு படிகளில் உருண்டு சுவற்றில் தலை மோதி இறந்து விடுகிறான். பட்டென்று மீண்டும் நினைவுகள் திரும்ப அதே படுக்கை, அதே 6:16AM க்கு கண் விழிக்கிறான். இம்முறை அவன் மனைவியை உசார்படுத்த முனைந்து தோற்று அவர்களிடம் சிக்கி மீண்டும் இழுத்துச் செல்லப்பட…

அது ஒரு டைம் லூப் என்பது இதை வாசித்தவர்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். யெஸ். இது ஒரு டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்ட Triangle (2009), Edge of Tomorrow (2014) படங்களைப் போன்றதொரு நெட்பிளிக்ஸ் படம். ரென்டனாக The Flash சீரிஸில் Deathstorm ஆக நடித்திருக்கும் Robbie Amell நடித்திருக்கிறார். நான் ரொம்ப நேரமாக ஆரோ சீரிஸில் ஆரோவாக நடித்த ஆளோ என்று குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். இருவருக்கும் ஒரே மாதிரியான முகச் சாயல். மற்றவர்களெல்லாம் யாரென்று அவ்வளவாக தெரியவில்லை.

ARQ என்பதன் விரிவாக்கம் Automatic Repeat Query. இதை ரென்டன் தனது வீட்டிலுள்ள தனது வொர்க் ஷாப்பில் உருவாக்குகிறான். அதுதான் கதையின் முக்கியமான கதாபாத்திரம். அதை திருடத்தான் அந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தன்னையும், தனது மனைவியையும் துன்புறுத்திகிறது என்பதை சில டைம் லூப்பில் ரென்டன் அறிந்து கொள்கிறான். அதை அவர்களிடமிருந்து காப்பாற்றினானா, அவர்களிருவரும் அந்த கும்பலிடமிருந்து தப்பித்தனரா? எதனால் டைம் லூப்பில் சிக்கினான்? அதிலிருந்து மீண்டனரா? என்பது போன்ற கேள்விகளுக்கு குழப்பாமல் திரைக்கதை வேகமாக நகர்ந்து சென்று ஒவ்வொரு முறையும் இதைப் போன்ற ஒவ்வொரு புதிய கேள்விகளை நமக்குள் விதைத்து, அதை அடுத்தடுத்த லூப்பில் வலுப்படுத்தி, எக்கச்சக்க ட்விஸ்ட்டுகளுடன் நம்மை மலைக்க வைத்து, பின்பு ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது ஆச்சரியப் படவும் வைக்கிறது.

வெறும் ஆறே பேர். ஒரே ஒரு வீடு. அவ்வளவுதான். கதை அதற்குள்ளேயே நகர்கிறது. ஆனால் ஆச்சரியமாக அந்த வீட்டின் ஜியாக்ரபி படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் நமக்கு புரிந்து விடுகிறது. இந்த மாதிரியான புரிதல்கள் வெகுசில படங்களிலேயே நமக்கு ஏற்படும்.

உதாரணத்திற்கு Don’t Breathe (2016) போன்ற படங்களில் இது ரொம்ப அவசியம். கதையே அந்த வீட்டிற்குள்தான் எனும்போது அந்த வீட்டின் அமைப்பு, கதாபாத்திரங்களின் அறிமுகங்களின் போதே அதையும் ஒரு கதாபாத்திரமாக படம் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும். அது டோன்ட் ப்ரீத்தில் மிஸ்ஸிங். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. ஆனால், சில பேய்ப்படங்களில் இது அழகாக நமக்குள் ஏற்பட்டிருக்கும். காஞ்சூரிங் சீரிஸிலும், (பார்ட் 2வில் வாரன் தம்பதிகளுடைய வீட்டின் அமைப்பும் கூட எளிதில் ஒருசில காட்சிகளின் மூலம் நன்கு பதிய வைக்கப்பட்டிருக்கும்.) Evil Dead (1981) போன்ற படங்களில் இதை நாம் உணர்ந்திருக்கலாம். நிச்சயம் ‘ஆர்க்’ போன்ற படங்களுக்கு அவசியம். படம் பார்ப்பவர்களுக்கு டைம் லூப் மற்றும் திரைக்கதை குழப்பங்களை மட்டும் கவனிக்க அவகாசமிருக்கும். ட்ரையாங்கில் படத்தில் சில காட்சிகள் மட்டுமே காட்டப்படும் ஜெஸ்ஸின் வீட்டின் அமைப்பும் அந்த எயோலஸ் கப்பலின் அமைப்பும் கூட சில காட்சிகளிலேயே நமக்குள் பதிய வைக்கப்பட்டிருக்கும். இவ்வளவு ஏன்? The Shining (1980) படத்தில் அந்த ஓவர்லுக் ஹோட்டலின் உள் வெளி அமைப்புக்கள் ஞாபகமிருக்கிறதா? அதேதான்.

படத்தைப் பற்றிய டீட்டெயிலிங்கோ, அல்லது வேறு எதாவது டெக்னிக்கல் சமாச்சாரங்களையோ சொல்லுவதானால் படத்தின் சில ட்விஸ்ட்டுகளையே சொல்லுவதற்கு ஒப்பாகும். ஆகவே,

டைம் ட்ராவல், டைம் லூப் கதைகளில் நிச்சயம் இது ஒரு நல்ல என்டர்டெயினிங் படம். இனிமேல் யாராவது நல்ல டைம் ட்ராவல் படங்களை பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்டால் என் லிஸ்ட்டில் நிச்சயமாக முதல் ஐந்து படங்களில் ஒன்றாக ARQ இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய படம் இது. அது ஏனென்று படத்தைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

பட்டென்று மீண்டும் நினைவுகள் திரும்ப அதே படுக்கை, அதே 6:16AM க்கு…