Thursday, January 22, 2026

Salute - காலத்துக்கும் புடிச்ச படம்

சல்யூட்

அப்டின்னு ஒரு 2022ல வந்த மலையாளப் படத்தைப் பத்திதான் இந்தப் பதிவு. இவனுக்கு வேற வேலையில்லன்னு நினைச்சா, இப்டியே யூடர்ன் போட்டு உங்க வேலையைத் தொடரலாம். ஏதாவது சொல்லிக்கிற மாதிரி எழுதிருப்பான்னு நம்பறவங்க தொடர்ந்து வாசிக்கலாம். ஏன்னா இந்தப் படம் ஓடிடில ரிலீஸான நாள்ல இருந்து, இப்ப வரைக்கும்ஒருப்ப இதை பார்த்தாலும் அடுத்தடுத்த நாட்கள்ல கொறஞ்சது மூனு வாட்டியாவது பாத்துட்டுதான், அடுத்த படங்களுக்கே போறேன். அந்தளவுக்கு இந்தப் படத்துல என்னமோ இருக்குன்னு நெனச்சுப் பாக்க ஆரம்பிச்சு, இந்த முறையும் மூனுவாட்டி பாத்த கையோட எழுதற பதிவுதான் இது. வாங்க படத்துக்குள்ள போலாம்.

படம் ஆரம்பிக்கிற மொத ஃப்ரேமே தேசிய நெடுஞ்சாலையில கார்ல அர்ஜுன் கருணாகரன் கார்ல போற மாதிரிதான். தான் இதுக்கு முன்னாடி எஸ்.ஐயா வேலை பாத்த ஸ்டேசன்ல, ஒரு கொலை கேஸையும், இன்னொரு டிரங்க் அண்ட் நெக்லிஜன்ஸ் கேஸையும் விசாரிச்சு சேகரிச்ச ஃபைல்ஸ் வேணும்னு கேக்கறதுல இருந்துதான் கதையே ஆரம்பிக்கிது. ஆரம்பத்துல அது ரொம்ப சாதாரணமா கடந்து போற விசயமாத்தான் காட்டப்படுது. ஆனா அதுக்குப் பின்னாடி உள்ள, வொர்க் பிரஷர், பொலிட்டிக்கல் பிரஷர், கடமை தவறுதல், துரோகம், பொய்கள், ஈகோன்னு பல விசயங்கள், நமக்கு இந்தக் காட்சிகள்ல துணை நடிகர்களா நடிச்சிருக்கறவங்களோட உடல்மொழி மற்றும் ரியாக்சன் மூலமா நமக்கு புரிய வைக்கப்பட்டுகிட்டே காட்சிகள் நகருது. இத்தனைக்கும் அந்தக் கொலைகள காட்சி வழியா நமக்கு காட்டாம, அப்டி ஒன்னு நடந்திருக்குன்னு நமக்கு மனசுல பதிய வச்சிடறாங்க. உண்மையான கொலையாளி பிடிபடல. நம்ம தேவைக்கும், மெத்தனத்துக்கும் ஒரு அப்பாவிய குற்றவாளியாக்கி பலிகடாவாக்கிட்டோம்ங்கற ஒரு குற்ற உணர்ச்சி தான் மொத்தக் கதையிலயும் அர்ஜுனை இயக்கிகிட்டே இருக்கு. அது எப்டின்னா ரெண்டு வருசம் லாங் லீவ்ல அந்த ஊர், அந்த ஸ்டேட் எல்லாத்தையும் விட்டுட்டு தூரமா நார்த் இண்டியா வரைக்கும் ஓட வச்சிடுது. 

திரும்பவும் அர்ஜுன் கதைக்குள்ள வந்தாகனும். அப்பத்தான் கதை நகரும். அதுக்கு ஒரு அண்ணன் பொண்ணு கல்யாணமும் அவ மேல உள்ள பாசமும் ஒரு காரணமா அமைச்சது ஒரு நல்ல ரீசன். ஏன்னா அண்ணனைத் திரும்ப சந்திக்க முடியாதுங்கறதுதான் முக்கியக் காரணம். தன்னோட அண்ணன் அர்ஜுன் கருணாகரனோட டாமினேசன் தான் அந்தக் கொலை கேஸ்ல அப்டி ஒரு குற்றத்தை செய்ய வச்சதே. அப்ப அந்தக் கேஸ்ல இருந்து ஓடனும்ன்னா ஸ்டேசன்ல எழுதிக் குடுத்த லீவ் லெட்டரே போதுமே. ஏன் ஸ்டேட்டை விட்டே ஓடனும்ங்கறதுக்கு ஒரு உறுதியான காரணம். அண்ணன் அஜித் தான் இதுக்கு சூத்திரதாரியே. நமக்கு இதுல முக்கியமா புரிய வேண்டியது, அந்தக் கொலைக் குற்றமும், அந்தக் கொடூர வலியுடன் கூடிய காட்சிகளல்ல. அந்த கேஸை முடிச்சாகனும்னு ஊர் மக்கள் செஞ்ச ஆர்பாட்டமும், அரசியல்வாதிகளோட பிரஷ்சரும் தான். அதுவும் தேர்தல் சமயம். இந்த நேரத்துல ஆளும் கட்சி போய் வேற கட்சி வந்துட்டா தங்களோட வேலையும், மரியாதையும் போயிடும்ங்கற அடிப்படை பயம். அதனால அப்டி ஒரு தப்பை, வொர்க் எதிக்ஸ்ங்கற பேர்ல, குற்ற உணர்ச்சியே இல்லாம, ஒரு அப்பாவி ஆட்டோக்காரனை கொலையாளியா போலிஸே ஃப்ரேம் பண்ணுற கொடூரத்தை செய்ய வைக்குது. இதுல கூடவே இருந்து ஒரு அம்பா செயல்பட்டவன்தான் இந்த அர்ஜுன் கருணாகரன்னாலும், அந்தக் குற்ற உணர்ச்சி அவனுக்கு ஒர் முக்கியமான விசயத்தைப் புரிய வைக்குது. அது என்னன்னா, ஆயிரம் குற்றவாளிகள் பிடிபடாமக் கூட இருக்கலாம். ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. இதுதான் இந்தக் கதையோட அடிநாதமே!

எனக்கு இந்தப் படத்தை பலமுறை பாக்க வச்சதுக்கான முதல் காரணம், நல்லா வெள்ளையா கலரா இருப்பான், ஒரு முப்பத்தஞ்சுல இருந்து நாப்பதுக்குள்ள இருப்பான்,  ஆறடிக்கு மேல இருப்பான், இன்னும் சொல்லனும்ன்னா இடது கையில ஒரு நீளமான வெட்டுக்காயத் தையலோட வடு இருக்கும். இது, இது, இதுதான் அந்த முதல் காரணம், ஒவ்வொருவாட்டி படத்தைப் பாத்து முடிச்சதும், "சரி இன்னொரு வாட்டி பாப்போம், அப்டி யாரைக் காட்டிருக்கானுகன்னு" அப்டின்னுதான். அப்டி ரெண்டாவது முறையும் படத்தை முதல் ஃப்ரேம்ல இருந்து, அந்த அடையாளமுள்ள ஆளைத் தேடித் தேடி, சில சமயங்கள்ல பல காட்சிகள, பின்னாடி மறுபடியும் ஓட்டி பாத்து தொடர்ந்து தோல்வியில முடிஞ்ச கதைதான் எனக்கு. ஆனாலும் இந்த முறை ஒருத்தனைக் கண்டுபுடிச்சேன். அதைப் பத்தி அப்புறம் பேசலாம்.

அதைவிட முக்கியமா இந்தப் படத்துல வர்ற வில்லன். அது சர்வ நிச்சயமா நாம அஜித் தான். அது சரியான ஒரு பாத்திர வடிவமைப்பு. அளவெடுத்து செஞ்ச மாதிரி ரெடிமேட் கேரக்ட்டர் மனோஜ் கே ஜெயனுக்கு. அதைவிட முக்கியமா தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு ஆள்ன்னா அந்தக் கொலைகளைச் செஞ்சவன்தான். அவனைத்தான் கடைசிவரைக்கும் யார்ன்னே காட்டாம செத்துட்டான்னு எண்டு கார்ட் போட்டுட்டானுகளே அப்றம் எப்டி அவன் ஒரு வில்லன்? சரிதான். ஆனாலும் அவன்தான் வில்லன். எத்தனையோ மோசடிகள் கொலைகள்னு தன் முகத்தையோ, பெயரையோ வெளிக்காட்டிக்காத நபர்தான் வில்லன். அவனுக்கும் அர்ஜுனுக்கும் நடுவுல நடக்குற அந்த தேடுதலுக்கும், அந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கும் காரணமே அவன் தான். இன்னொரு முக்கியமான விசயம், இந்த மாதிரி ஆட்கள் உருவாகக் காரணம், அறிவியலை நம்பாம மூடநம்பிக்கைய நம்புறவங்க. அதே மாதிரி அர்ஜுன்கள் உருவாகக் காரணம், கடமை தவறுறதை கெத்து, புத்திசாலித்தனம்னு குற்ற உணர்ச்சியே இல்லாம பண்ற அதிகாரிகள்தான். 

இதுதான் இந்தப் படத்துல நான் புரிஞ்சுகிட்ட விசயம். மத்தபடி இந்தப் படம் ஒரு அருமையான அன்சால்வ்டு கிரைம் மிஸ்டரி. எல்லாக் காட்சிகளும் அர்ஜுனுக்கு தெரிய வர்றப்பதான் ஆடியன்சான நமக்கும் தெரியவரும். அதாவது, அர்ஜுனோட பாய்ண்ட் ஆஃப் வியூலதான் மொத்தக் கதையும் நகரும். அந்தக் கொலைகளோ, மோசடிகளோ காட்சிகளா காட்டப்படாததுக்கும், அதைச் செஞ்ச ஆளை யார்ன்னே காட்டாம விட்டதுக்குமான செமயான உறுதியான காரணம். 

பல படங்களைப் பாத்தா பிடிக்கும். ஆனா ஒரு சில படங்களை மட்டும்தான் காலத்துக்கும் பிடிக்கும். அப்டி எனக்குப் பிடிச்ச ஒரு படம்தான் இந்த சல்யூட்!

அந்தக் கொலையாளி யார்? அப்டி ஒருத்தனைக் காட்றாங்க. ஆனா அவனுக்கு ஆறடி இருக்கும். ஆனா கையில வடு இருக்கற மாதிரியோ, வயசைச் சொல்ற மாதிரியான ஃப்ரேம் டைமிங்கோ இல்லாததனால அதை அப்டியே விட்றலாம்னாலும், எதுக்கு சம்பந்தமே இல்லாம அவன் ஸ்டேசனுக்கு அவன் வர்றதா காட்டனும், அவனை அர்ஜுன் போயிடுன்னு சொல்லனும்?

No comments:

Post a Comment