இங்கிலாந்தில்
குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு காலம் இருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியாகும் லண்டனை
கதைக்களமாகக் கொண்ட படங்களில் காட்டப்படும் கதை நடக்கும் காலம், Victorian Era.
மகாராணி விக்டோரியா
இங்கிலாந்தில் ஆட்சி புரிந்த காலம் (1837 – 1901). குறிப்பிட்ட இந்த காலத்தில் நடப்பதாக
எத்தனை கிளாசிக் படங்களைப் பார்த்திருக்கிறோம் தெரியுமா?
The Prestige (2006)
Murdoch Mysteries (2008– )
The Blue Lagoon (1980)
Bram Stoker's Dracula (1992)
Alice in Wonderland (I) (2010)
Sherlock Holmes (2009)
Victor Frankenstein (2015)
The Elephant Man (1980)
Van Helsing (2004)
The Illusionist (2006)
Sweeney Todd:
The Demon Barber of Fleet Street (2007)
Sherlock Holmes:
A Game of Shadows (2011)
The League of Extraordinary Gentlemen (2003)
The Great Train Robbery (1979)
A Christmas Carol (2009)
Oliver Twist (2005)
Time After Time (1979)
The Jungle Book (1994)
Dorian Gray (2009
The Wolfman (2010)
From Hell (2001)
இது வெறும் சாம்பிள்
லிஸ்ட் தான். ஆனால், மொத்தம் 490 படங்கள் மகாராணி விக்டோரியா காலத்தை மையப்படுத்தி
எடுக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்திற்கு ஒரு பொற்காலமாகவும் குறிப்பிடப்படுகிறது.
நாம் படித்த பெரும்பாலான கதைகளும் இந்த காலங்களில்தான் எழுதப்பட்டது.
மேலேயுள்ள சாம்பிள்
படங்களின் பட்டியலை கவனித்தால் ஒரு விசயம் புரியும். இதில் ஹாரர் வகைப் படங்களும்,
சைக்கோ கில்லர்களின் படங்களும், சூப்பர் நேச்சுரல் கதைகளும், சூனியக்காரிகளின் கதைகளும்
தான் அதிகப்படியாக இருக்கும். பெரும்பாலும் grimy England கதைகளே அதிகம். தூசும் தும்புமாக
இருண்மை மற்றும் பனி படர்ந்த இங்கிலாந்தை பின்னணியாகக் கொண்டு அதில் ரத்தம் தெரிக்க
தெரிக்க பேய்க்கதைகளாக எழுதி / எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள். இதில் உண்மையாக உலாவிய
மனிதர்களைப் பற்றிய கதைகளும் படங்களும் அடக்கம்.
ஒவ்வொரு படங்களுமே
தனித்துவம் வாய்ந்தவை. உதாரணத்திற்கு Jack the Ripper என்கிற சைக்கோ கில்லரை மையமாகக்
கொண்ட (மேலுள்ள பட்டியலிலேயே இரண்டு படங்கள் உள்ளது From Hell, Time after Time) படங்கள்.
இங்கிலாந்தில் பல கொலைகளைச் செய்த சீரியல் கொலைகாரனைப் பற்றிய படங்கள் இவை. தொடர்ச்சியாக
இரவுகளில் விபச்சாரம் செய்யும் பெண்களை மட்டும் கொலை செய்து விட்டு மாயமாகி விடுவது
இவன் வழக்கம். (தமிழில் வந்த மன்மதன் படம் இதன் பாதிப்பு தான்) கொல்லும் போது முப்பது
முறைக்கும் மேல் உடலைக் கத்தியால் குத்தி உள்ளுறுப்புக்களை எடுத்துச் செல்வதும், பலியானவர்களின்
முகத்தினை பலமுறை குத்திக் கிழித்து அடையாளம் தெரியாமல் ஆக்கிச் செல்வது அவனது மாடஸ்
ஆப்பரண்டி. இவ்வளவிற்கும் அவன் இன்னமும் யாரென்று கண்டுபிடிக்கப் படவில்லை.
இவன் ஒருவனின்
கதை மட்டுமே இவ்வளவு டெரராக இருக்கிறதே, இன்னும், Dracula, Vampire, werewolf,
Frankenstein, Frankenstein Monsters, witches, lycanthropy, Lucifer கதைகளெல்லாம்
எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும்?
ஒருவேளை இந்த கதாபாத்திரங்கள்
அத்தனையும் ஒன்று சேர்ந்தாற்போல் ஒரு படம் இருந்தால் அது எப்படிப்பட்டதாக இருக்கும்?
அப்படி ஒன்று இருக்கிறதா முதலில்?
ஹா ஹா அப்படி ஒன்று
இருக்கப் போய்த்தானே இப்படி ஒரு பில்டப்பையே கொடுத்திருக்கிறேன்.
ஆம். அப்படி ஒரு
பயங்கரங்களின் கலவையில் ஒன்று இருக்கிறது. ஆனால், அது ஒன்றரை அல்லது மூன்று மணி நேரங்களில்
முடிந்து போகக் கூடிய சினிமா அல்ல. அது ஒரு தொலைக்காட்சித் தொடர்.
PennyDreadful (2014 – 2016)
மொத்தம் மூன்று
சீரிஸ்கள். ஒவ்வொன்றும் தலா 8, 10, 9 எபிசோடுகளைக் கொண்டது.
தொலைக்காட்சித்
தொடர் என்றதும் ‘டிவி நாடகமா? சினிமா அளவுக்கு ஒளிப்பதிவு தரமிருக்காது. அமெச்சூர்
நாடகத்தனமாக இருக்கும்’ என்று முகம் சுழிக்கும் எண்ணம் எனக்கே ஆரம்பத்தில் இருந்தது.
ஆனால், அதெல்லாம் இந்தத் தொடரைப் பார்க்கும் வரைதான். பார்க்க ஆரம்பித்த பிறகு இந்த
சீரிஸின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் செவிட்டிலறைந்து உள்ளீர்த்துக் கொண்டது. கண்ணைப்
பறிக்கும் ஆச்சர்யமான அழகான அற்புதமான ஒளிப்பதிவும், மனதை வருடும், உள்ளுக்குள் உள்ள
பழைய ஞாபங்களைக் கிளறி விடும் பின்னணி இசை. அதேபோலத்தான் மேக்கப்பும் உடைகளும். இதைப்
பார்த்து முடிக்கும் போது மனதிற்குள், நவீன யுக சமாச்சாரங்களை மறந்து மகாராணி விக்டோரியா
காலத்து வீதிகளில் திரிந்து அங்கே உலவும் பேய்க்கதைகளை கண்டு, கேட்டு, பயந்து ஒதுங்கி
ஓடி ஒளிந்து கொண்டது போன்ற சுவாரஸ்யம் கிடைத்தது.
கதை என்று தனிப்பட்டு
கூறுவதானால் இந்தப் பதிவு தாங்காது. ஆகையால், சுருக்கமாக சில அறிமுகங்களை மட்டும் இங்கே
எழுதுகிறேன்.
சர் மால்கம் முரே,
ஒரு ஆய்வுப்பயணி. பயணங்களின் மூலமாக கண்டம் விட்டு கண்டம் சென்று ஒவ்வொரு நாட்டின்
வளங்களைப் பற்றியும், நாகரீக வளர்ச்சியைப் பற்றியும், அரசியல் நிர்வாகம் அறிவுத்திறன்
பற்றியும், ஆராய்ச்சி செய்து தனது நாட்டில் தனது ஆராய்ச்சியின் முடிவை தருபவர். (இந்த
மாதிரி ஆய்வுப்பயணிகளின் மூலமாகத்தான் இந்தியாவைப் பற்றியும் இங்கிலாந்திற்கு தெரிய
வந்திருக்கும்) ஆப்பிரிக்காவில் ஆய்வுப்பயணம் மேற்கொண்ட போது தனது மகனைப் பறிகொடுத்தவர்.
இங்கிலாந்தில் தனது மகளை யாரோ கடத்திக் கொண்டு செல்ல அங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்தக்
கதை. சர் மால்கம் முரேவாக திமோதி டால்டன் (Timothy Dalton) நடித்திருக்கிறார்.
இவர் The Living Daylights (1987), Licence to Kill (1989)
படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர்.
வனெஸா ஐவ்ஸ் ,
மால்கமின் வளர்ப்பு மகள். இவளுக்கு சில சூப்பர் நேச்சுரல் சக்திகள் உள்ளது. ஆனால்,
இன்னதென்று தனித்துக் கூற முடியாது. அது தேவையான சமயங்களில் வெளிப்படும். Tarot
card – களைக் கொண்டு எதிர்காலத்தை கணித்தறியும் fortune reader போல ஆரம்பத்தில் காட்டப்பட்டிருக்கும்.
ஆனால், அதை வைத்து அவளை எடை போட முடியாது. மூன்று சீசன்களிலும் மனதில் நிற்கும் முக்கியமான
கதாபாத்திரம். மிஸ் ஐவ்ஸாக நடித்திருப்பவர் The Dreamers (), Casino Royale () படங்களின்
கதாநாயகி ஈவா க்ரீன் (Eva Green). பென்னி ட்ரெட்ஃபுல் மொத்தமும் இவர்தான் Show
stealer. எப்போதும் போல தாராளமாகவும் நடித்திருக்கிறார்.
ஈதன் ச்சான்ட்லர்,
ஒரு அமெரிக்கன் ஷார்ப் சூட்டர். இங்கிலாந்தில் ஒரு முக்கியமான காரணத்திற்காக பெயர்
மாற்றம் கொண்டு இந்தப் பெயரில் ஒளிந்து கொண்டிருப்பவன். கதையின் முக்கியமான கதாபாத்திரங்களில்
ஒருவன். இவன் எப்படிப்பட்டவன் என்று மேற்கொண்டு சொல்ல முடியாது. ஈதனாக நடித்திருப்பது
Pearl Harbor (2001), Black Hawk Down (2001) படங்களில் நடித்த Josh Hartnett. ஆறடி
மூன்றங்குலத்தில் ஒரு ஆஜானுபாகுவான துப்பாக்கி வீரன். குதிரை மட்டும்தான் மிஸ்ஸிங்.
விக்டர் ஃப்ராங்கன்ஸ்டைன்,
ஒரு mad scientist. டாக்டரும் கூட. இந்த பெயரை வேறு எங்கோ கேட்ட ஞாபகம் வருகிறதா? யெஸ்.
இந்தப் பெயரில் எக்கச்சக்கமான படங்கள் உண்டு. அதே டாக்டர் தான். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும்
ஆராய்ச்சியை செய்பவர். உண்மையில் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் மேரி ஷெல்லி
என்கிற எழுத்தாளர். அவர் எழுதிய நாவல் ஒன்றில் தொடங்கி இன்றும் பல படங்களிலும் தொடர்களிலும்
இந்த பெயரும் கதாபாத்திரமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப் பட்ட சிறப்பு மிக்க
ஒரு பெயருள்ள கதாபாத்திரத்தில் City of Ember (2008), The Lone Ranger (2013) படங்களில்
நடித்த Harry Treadaway உயிர் கொடுத்திருக்கிறார்.
செம்பியன், ஆப்பிரிக்காவைச்
சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன். சர் மால்கம் முரேவின் பணியாளன். அமைதியானவன்.
ஆனால் முரட்டு ஆசாமி. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் Danny Sapani. இவர் நடித்திருக்கும்
ஒரு படத்தின் பெயரைச் சொன்னால், வேண்டாம் அதில் இவரது கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னாலே
யாரென்று நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆபரேசன் D தெரியுமா? யெஸ், சிங்கம் 2 இல்
வில்லனாக நடித்த டேனி இவர்தான். ஆனால், இதில் மிக முக்கியமான சூப்பரான ஒரு கதாபாத்திரம்.
இந்த ஐந்து கதாபாத்திரங்களும்
ஒரு டீம். ஒவ்வொருவரும் தனித்தனி பிரச்சினைகளைக் கொண்ட, ஒருவரையொருவர் நம்பாத ஒரு டீம்.
தனித் தனியே ஒருவருக்கொருவர் ஏய்த்துக் கொண்டும் துரோகம் செய்து கொண்டும் அதை மற்றவர்கள்
முன்னிலையில் மறைத்துக் கொண்டும் வாழும் ஒரு டீம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ட்ராக்காக
கதைகளாக பிரிந்து மீண்டும் இவர்கள் சர் மால்கம் முரேவின் தலைமையிலான ஒரு டீமாகவும்
இயங்குவதுதான் இந்த சீரிஸின் கதைச் சுருக்கம்.
ஒவ்வொருவரின் கதையும்
ஒரு பயங்கரத்தை நோக்கி நகர்ந்து பரபரப்பாகும் சமயத்தில், அதன் முடிவு எப்படி இருக்குமோ
என்று சீட்டின் நுனிக்கி நகரும் வேளையில் அந்தக் காட்சியை அப்படியே நிறுத்தி மற்றொருவரின்
கதை மற்றிரு பயங்கரத்தை நோக்கி நகரும். இது நமக்கு திரிஷ்யம் படத்தில் காட்டப்பட்ட
திரைக்கதை நகர்த்தல் உத்தி தான். ஆனால், அதில் திரைப்படம் என்பதால் காட்சிகள் மாறும்
வேகம் அதிகமாக இருக்கும். இதில் கொஞ்சம் பொறுமையாக பரபரப்பை நெருங்கும்.
ஹாரர் வகை ரசிகர்களுக்கும்,
டார்க் டேல்ஸ் வகை ரசிகர்களுக்கும் இது ஒரு நல்ல விருந்து. முதல் சீசனை எவ்வளவு பயங்கரமாக
இருந்ததோ, அதைவிட நூறு மடங்கு பயங்கரமாகவும் இதன் இரண்டாவது சீசன், அட போட வைக்கும்
திருப்பங்களோடும் இருந்தது
நியூடிட்டி காட்சிகளும்,
பகீர் பயங்கரக் காட்சிகளுக்கும் குறைவில்லை என்பதால் குழந்தைகள் தவிர்க்க.
நன்னி
நமோஸ்கார்.













