The Invisible Man (2020)
Horror / Thriller
இந்தப்
படமும் The Lodge (2019) மற்றும் Vivarium (2019) போலவே படத்தின் இறுதிவரை
நம்மை குழப்பத்திலேயே வைத்திருக்கப் போகும் ஒரு கதையமைப்புள்ளதுதான்.
சிஸிலியா
(Cecilia) தனது கணவன் அட்ரியனின் (Adrian) கொடுமை தாங்காமல் அவனிடமிருந்து
தப்பி ஓடி விடுகிறாள். மொத்தமாக தனது கணவனால் தேடவே முடியாத ஒரு நாட்டுக்கு தப்பி ஓடி
வந்து தனது நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருக்கிறாள். அவளது நண்பன் ஜேம்ஸ் லேனியர்
(James Lanier) சான் பிரான்சிஸ்கோவில்
காவல்துறையில் டிடெக்ட்டிவாக பணிபுரிந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு மனைவியில்லை.
அவனுக்கு கல்லூரி செல்லும் வயதில் சிட்னி லேனியர் (Sydney Lanier) என்றொரு மகள் மட்டுமே உண்டு.
இவர்களது
வீட்டில் வந்த பிறகும் சிஸிலியாவிற்கு அட்ரியனைப் பற்றிய பயம் போகவில்லை. அதனால், அந்த
வீட்டை விட்டு வாசல் தாண்டி வெளியே வருவதில்லை. நியூஸ் பேப்பர் எடுக்க வெளியில் வரக்
கூட பயம். எங்கே அப்படி வந்தால் அவளது கணவன் அவளைத் துரத்திக் கொண்டு இங்கேயும் வந்து
வெளியில் காத்திருந்து தன்னை மீண்டும் அந்த வீட்டுக்கு இழுத்துக் கொண்டு சென்று போய்க்
கொடுமைப் படுத்துவானோ என்ற பயம்.
போலிஸிலெல்லாம்
அவனைப் பற்றி சொல்லி தப்பிக்க முடியாது. அவன் மிகப் பெரிய கோடீஸ்வரன். அவள் அந்த வீட்டிருந்து
தப்பி வெளியே வரவே பல சிசிடிவிக்களையும், கதவுகளின் பின் நம்பர்களையும், மிகப் பெரிய
காம்பவுண்ட் சுவர்களையும் தாண்ட வேண்டியிருந்தது. அதற்குள்ளாகவே அலாரம் ஒலித்து அவன்
எழுந்து வர தாவுடா செவல தாவு என்று காம்பவுண்ட் தாவி வந்திருந்தாள். ஆக லீகலாக அவனிடமிருந்து
தப்பிக்க முடியாது.
அப்படி
என்ன கொடுமைகள் செய்கிறானென்றால், அவன் ஒரு டாமினண்ட் கேரக்டர். எப்போதும் அவனின் கண்ட்ரோலிலேயே
இவள் இருக்க வேண்டுமென்று மிரட்டிக் கொண்டே இருப்பான். அவன் கட்டளைப்படி நில் என்றால்
நிற்க வேண்டும். படு என்றால் படுக்க வேண்டும். சிரி என்றால் சிரிக்க வேண்டும். போதும்
என்றால் சிரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அழுவதற்கெல்லாம் அவன் கட்டளையிட்டிருந்தால்
அழுது கொள்ளலாம். அப்படி ஒரு கண் கண்ட கணவன். அவனிடம் சிக்கிச் சின்னாபின்னமாவதை விட
சாகும்வரை, அவன் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வதே மேல் என்று
வந்து விட்டாள்.
அப்படி
தப்பித்து ஓடி வந்துவிட்ட பிறகாவது நிம்மதியாக இருக்கிறாளா என்றால் அதுதான் இல்லை.
இங்கேயும் அவனை நினைத்து பயத்துடனேயே பொழுதைக் கழிக்கிறாள். அப்படி ஒரு நன்னாளில் அவளுக்கு
ஒரு கடிதம் வருகிறது. அவள் எங்கே இருக்கிறாளென்றே யாருக்கும் தெரியாத சமயத்தில் அவளுக்கு
அட்ரஸ் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி ஒரு கவர் வந்தால் அவள் அதிர்ச்சியடைவாள்தானே? ஆடியே போய்விட்டாள்.
கடிதத்தைப்
பிரிக்கும்போது இவளை இங்கே கொண்டு வந்து சேர்த்த இவளது தங்கை ஹரியட்டும் (Harriet) வந்து சேர்கிறாள். உன்னிடம் ஒரு
முக்கியமான விசயம் சொல்ல வேண்டும் அதிர்ச்சியடையாதே உன் கணவன் இறந்து விட்டான் என்று
ஒரு செய்தியை காண்பிக்கிறாள். சிஸிலியா குழப்பத்துடனே அந்தக் கவரையும் பிரிக்கிறாள்.
அதில் அவளது கணவனின் இளைய சகோதரன் - வக்கீலாக இருப்பவன், அட்ரியனின் சொத்துக்களில்
இவளுக்கும் பங்கிருப்பதாக எழுதி அதைப் பெற்றுக் கொள்ள நேரில் வருமாறு அழைத்து எழுதியிருந்தான்.
கணவனும்
இறந்து விட்டான். சொத்தும் கிடைத்தது. மகிழ்ச்சியின் எல்லைக்கே அவளை அந்த இரு செய்திகளும்
இட்டுச் செல்கிறது.
திகட்டத்
திகட்ட ஒரு திடீர் ஆனந்த வாழ்க்கையில் நிம்மதியாக வெளிப்புறங்களுக்கு சென்று வருகிறாள்.
ஆனால்,
அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி அவளை ஆட்டிப் படைக்க ஆரம்பிக்கிறது. இவளிடம் மட்டும்
அந்த அமானுஷ்யம் கண்ணாமூச்சி ஆடுகிறது.
அது
சிஸிலியாவின் ஹாலூஸினேசனா? இல்லை வேறு ஏதாவது பேயா? இல்லை இவளது கணவனின் ஆவியா? என்று
அவளும் குழம்பி நம்மையும் குழப்புகிறது இந்த The
Invisible Man திரைப்படம்.
இந்தப்
படத்தின் தலைப்பைக் கேட்டதும் Hollow Man
ஞாபகத்திற்கு வந்தால் நான் பொறுப்பல்ல நண்பர்களே.








