Monday, March 30, 2026

Seetharam Benoy: Case No.18

Seetharaam Benoy: Case No.18

அப்டின்னு ஒரு கன்னடப்படம். சரி நான் தமிழ் டப்லதான் பாத்தேன். ஆரம்பத்துல ஒருவாட்டி நல்ல மழை நாள்ல அமேசான் ப்ரைம்லதான் பாத்தேன். ஆனா இப்ப அகஸ்மாத்தா, யூட்யூப்ல முழுப்படமும் இருக்கறதா காட்டிச்சு. அதனாலதான் ரெண்டாவது வாட்டி மூனு வருசம் கழிச்சுப் பாத்தேன். அப்ப இருந்த அதே திரில் ஃபீல் இப்பவும் கிடைச்சது. நடிகர்கள்னு பாத்தா, அவர் ஒரு சவுத் இண்டியன், கூகுள் பண்ணதுல விஜய் ராகவேந்திரான்னு காட்டிச்சு. அவ்ளோதான் சீதாராம் பினோயா நடிச்ச நடிகரைப் பத்தித் தெரிஞ்சிகிட்டேன். இதுக்கு முன்னாடி எந்தப் படத்துல நடிச்சிருக்காரு என்ன ஏதுன்னெல்லாம் தெரிஞ்சிக்க ஆர்வமில்லை. ஏன்னா, கதை மட்டுமே இதுல பிரதானமா இருந்ததால, நடிகர்களைப் பத்தித் தெரிஞ்சிக்கறதுல ஆர்வம் போகல. அதனால நேரடியா படத்துக்குள்ள போயிடுவோம் வாங்க.

கதைப்படி, நகர்ப்புறத்துல இருந்து, மலைக் கிராமம் ஒன்னுக்கு மாத்தலாகி வற்றாரு சீதாராம் எஸ்.ஐ. வந்தன்னிக்கே ஒரு அதிருப்திகரமான சம்பவம். அவருக்குன்னு குவார்ட்டர்ஸ் பழுதாயிருந்ததால வாடகை வீடு ஒன்னை டிப்பார்ட்மெண்ட் ஒதுக்கியிருக்க, அதுல கொள்ளைச் சம்பவம் ஒன்னு நடக்குது. வந்த ரெண்டாவது நாளே. இதனால மக்கள் எல்லாரும் அதிருப்தியாக, தன்னையே காப்பாத்திக்கத் தெரியாத காவல்துறை எப்டி மக்களைக் காப்பாத்தும்ங்கற மனக்குறைதான். இதனால ரொம்பவே மனசொடஞ்சு போற சீதாராம், அது யார் என்னன்னு தேட ஆரம்பிக்கிறாரு. இதை யாரால செஞ்சிருக்க முடியும்ங்கறதை ஈஸியா கணிச்சிடறாரு. அதுவே நமக்கு ஒரு இன்வால்வ்மெண்டை படத்துல கொடுக்குது. அதாவது திருடங்க யாரா இருக்க  முடியும்ங்கறதை அவரால யூகிக்க முடியுது. அதாவது பெயர்களை வச்சில்ல. தொழிலை வச்சு. ஏன்னா, மத்த காவலதிகாரிகள் எல்லாரும், இதை வேற ஊர் ஆளுங்கதான் செஞ்சிருக்க முடியும்ன்னு நினைக்கறாங்க. காரணம் நடந்த எந்த கொள்ளைச் சம்பவங்கள்லயும், ஒரு சின்ன தடயமும் கிடைக்காததனால. ஆனா சீதாராம், இதை உள்ளூர் ஆளுங்களாலதான் ஈஸியா செய்ய முடியும், காரணாம், அவங்கதான், ஈஸியா வீடை நோட்டம் ப்விட்டு அதோட அமைப்பு இப்படி இருக்கும். வீட்டுல இந்த சமயங்கள்ல எல்லாரும், தூங்கிட்டோ, வெளியவோ போயிருப்பாங்கன்னு அவங்க சந்திருக்கற சமயத்தை கணிக்க முடியறது இந்த ஊர் ஆளுங்களாலதான் அப்டின்னு. அதை அவர் சொல்லும்போதே அதுக்குண்டான ஆளுங்களையும் நமக்குத் தெளிவா காட்டிடறாங்க.

அப்புறம் அதுல என்ன பெருசா இருக்குது, கொள்ளையடிச்சவங்களைக் காட்டியாச்சு, அடுத்து என்ன அவங்களை எப்படிக் கண்டுபுடிக்கிது காவல்துறைன்னுதான மீதிக்கதை?

இல்லவே இல்லை. அதுக்கப்புறம்தான் நம்மை நிஜமாவே சுத்தல்ல விடுற ஒரு சம்பவம் நடக்குது. அதுல இந்த இரண்டு ஆளுங்களுமே சம்பந்தப்பட, கதை இன்னும் சுவாரஸ்யமாகுது. இதுல கொள்ளைக்காரர்களா நடிச்சவங்க, அதுக்கு ஏத்த சாதாரணா மனிதர்களா தேர்ந்தெடுத்து நடிக்க வச்சது இன்னும் படத்துக்கு ஒரு பலம்ன்னே சொல்லலாம். ரெண்டாவது அந்த லொக்கேசன்ஸ். அது எல்லாமே கேரளப்படங்களுக்கு இணையான அழகான ஊர்ப்புறத்து லொக்கேசன்கள். அதிலேயும், மழை பெய்யும் சமயத்தில் இரவு நேரக் காட்சிகள்தான், பெரும்பாலும் அழகாக அமைந்திருக்கும். இதில் பகல் நேரக் காட்சிகள் கூட கண்ணில் ஒத்திக் கொள்ளும்படி அமைந்தது, ஒரு நல்ல விசயம் என்றேதான் சொல்ல வேண்டும். இரண்டாவது முறை பார்க்கிற எனக்கு ஏற்கனவே கதையும், முடிவும் தெரியும் என்றாலும், என்னை படத்துடன் ஒன்ற வைத்து மீண்டும் ஒரு முறை முழுதாகப் பார்க்க வைத்தது அந்த லொக்கேசன்கள் தான்.

மேற்கொண்டு ஏற்கனவே படம் பார்த்தவர்கள் மற்றும் தொடரவும். அப்படிப் பார்க்காதவர்கள், யூட்யூபிலோ, அல்லது அமேசனா ப்ரைமிலோ முழுப்படத்தையும் பார்த்துவிட்டு வந்து இதனைப் படிக்கலாம். ஸ்பாய்லர் அலெர்ட்.

பதிவு முழுவதுமே ஸ்பாய்லராக இருக்கலாம். இது முக்கியமான ஸ்பாய்லர். அதனாலதான் மேற்கூறிய டிஸ்கிளைமர்.

காவலதிகாரிகளின் மனைவிமார்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். இதுவும் மேற்கூறிய தொடர் கொள்ளைச் சம்பவங்கள் போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கால இடைவெளியில். இதற்கும், அந்தந்த சம்பந்தப்பட்ட காவலதிகாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், இது சைக்கோ கொலைகாரனின் கைவரிசை என்று அந்தந்த காவலதிகாரிகள் நினைக்கிறார்கள். அதுவும் பொய்த்துப் போகிறது. இது சைக்கோ கொலையாளியின் கைவரிசையும் அல்ல. அதையும் சீதாராம் கண்டுபிடிக்கிறார், பழிவாங்கும் முயற்சி என்று. ஏன் என்ற கேள்விக்கான தேடலின்போது அந்தத் தியரியையும் உடைக்குமாறு சில கொலைகள் வேறு சில ஆட்கள் கொல்லப்பட இன்னும் குழப்பமே மிஞ்சுகிறது. காவலதிகாரிகளால் ஒரு இன்ச் கூட முன்னேற முடிவதில்லை அந்த வழக்கில்.

எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையதுதான். ஆனால், தனித்து துண்டாக இப்போதைய சம்பவங்களை மட்டும் மனதில் கொண்டு நோக்கும் போது, மொத்த பயங்கரத்தையும் அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால், பாதிக்கப்படுவதும் பாதுகாப்பதும் ஒரே ஆள்தான் என்பதனால்தான் இந்தப் பிரச்சினை. அதைக் கண்டு பிடிக்கவும் எக்கச்சக்க வாய்ப்பு உள்ளவர்களும் காவலர்களே என்பதால், எதனால் என்பதற்கும் விடை கிடைக்கிறது. உண்மையில் சீதாராம் வேறு பினோய் வேறு. சீதாராம் காவலர், பினோய் வில்லன் அவ்வளவுதான் கதை. யார் அந்த பினோய் என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் இத்தனைக்கும் விடை சுவாரஸ்யமாக நகர்கிறது.

இப்போது இரண்டாவது பாகம் தயாராகிக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. அப்படி வந்தால் பார்ப்பது நிச்சயம். ஏனென்றால் இது மிகவும் நல்ல திரில்லர் படம். தவற விட வேண்டாம் மக்களே!

அடுத்த பதிவில் ஒரு படத்துடன் சந்திக்கிறேன் நண்பர்களே! வர்ட்டா!

No comments:

Post a Comment