Wednesday, May 13, 2026

Dept. Q - செம சீரிஸ்

Dept. Q

அப்டின்னு ஒரு பிரிட்டிஷ் கிரைம் திரில்லர் டிவி சீரிஸ். நெட்பிளிக்ஸ்ல இருக்கு. மொத்தம் ஒன்பது எபிசோட் கொண்ட ஒரு வெப் சீரிஸ். எதையாவது பாக்கனுமேன்னு பாக்க ஆரம்பிச்சப்ப அது அப்டியே என்னை உள்ள இழுத்துகிச்சு. சரி அது எப்டியெல்லாம் இருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.

கதைப்படி சம்பிரதாயமான ஒரு ஆரம்பம் இல்ல. டிடெக்டிவ் கார்ல் மார்க்கும், அவரோட பார்ட்னர் எடியும் ஒரு டெட்பாடி உள்ள வீட்டுக்குப் போறாங்க. அங்க அவங்க அதைப் பார்த்துகிட்டிருக்கும் போதே அங்க ஒளிஞ்சிருந்த கொலைகாரன், வெளிய வந்து அவங்க மூனு பேர்த்தையும் சுட்டுடறான். ஆமா மூனு தான். தகவலைக் கொடுத்த கான்ஸ்டபிள் ஆண்டர்சனும் அங்க வெளிய காவலுக்கு இருந்தான். ஆனா இந்த துப்பாக்கிச் சூட்டுல செத்ததும் அவந்தான். கொலைகாரன் சுட்ட குண்டு, எடிய தாறுமாறா தொளச்சுகிட்டு வெளிய வந்து மார்க்கோட கன்னத்துல பாய்ஞ்சு கழுத்து வழியா வெளிய வந்துருது. இதுல எடி பேரலைஸ் ஆகிடறாரு. மார்க்குக்கு பெரிய பிரச்சினை ஒன்னுமில்லைன்னாலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டைப் பத்தி யாராவது பேசினாலே டிப்ரசனுக்குப் போயிடறாரு. அதனால அடிக்கடி யாரையாவது தடாலடியா அடிக்கவும் செஞ்சிடறாரு. அந்தளவுக்கு அந்தச் சம்பவம் அவரைப் பாதிச்சிருக்கு.

இது இல்ல கதை. இப்ப திரும்பவும் டியூட்டியில ஜாய்ன் பண்றாரு மார்க். தன்னைச் சுட்டவனைக் கண்டுபுடிக்கனும்னு. ஆனா தன்னோட வழக்குல தானே ஈடுபடமுடியாதில்லையா அதனால அவரோட திறமைகள வேஸ்ட்டும் பண்ணக் கூடாது, அவரால டிபார்ட்மெண்ட்லயும் பிரச்சினை வந்துடக் கூடாதுன்னு கவர்மெண்டே ஒரு ஏற்பாடு பண்ணுது. அப்டி போலிஸ் டிபார்ட்மெண்ட்டுக்குள்ளயே ஒரு தனி டிபார்ட்மெண்ட் ஏற்படுத்தி அவரை வேலை பார்க்கச் சொல்லுது. அதுதான் டிபார்ட்மெண்ட் கியூ. அதாவது அங்க அவர் மட்டும்தான் இருப்பாரு. அவரைத் தவிர வேற யாருமே இருக்க மாட்டாங்க. ஏன்னா இவர் மத்தவங்க சொல்லுறப்ப முழுசா கேக்கவே மாட்டாரு. இல்லன்னா சொல்ல விட மாட்டாரு. எப்டியிருந்தாலும் எதாவது தப்பா சொல்லிருவாங்கன்னு இவரே அதை முழுசா திருத்தி குறுக்கப் பேசி விதண்டாவாதம் பண்ணி அது பெரிய ஆர்கியூமெண்ட்ல போய்த்தான் முடியும். அது கூட வேலை பாக்குறவங்கன்னு இல்லாம, தன்னோட உயரதிகாரி மொய்ராகிட்ட கூட அப்டித்தான். அதனாலயே இந்த ஏற்பாடு.

அந்த ஆபிஸ் எப்டியிருக்கும்ன்னா, அந்த பில்டிங்லயே கடைசி தரைதளத்துல பொதுக் கக்கூஸ் மாதிரியான ஒரு இடம். மாதிரியில்ல அதேதான். ஆனா அதைக் கூட தன்னோட இடமா மாத்திக்குவாரு. இப்ப கேஸ் வேணுமே. உன்கிட்ட எவண்டா கேஸ் குடுப்பான்னு, எல்லாத்தையும் மேலுள்ள தளங்கள்ல உள்ள ஆபிஸர்ஸ்கிட்டயே தான் கொடுப்பாங்க மொய்ரா. ஆனா இவருக்கு எப்டிப்பட்ட கேஸ்ன்னா, பல வருசமா கெடப்புல கெடக்குற முடியவே முடியாத கேஸ்களையெல்லாம் கொடுத்து அதுல ஒன்ன முடின்னு தள்ளிருவாங்க. மார்க்கும் லேசுப்பட்ட ஆளில்ல. என்னதான் ஆட்டிட்யூட்வாலான்னாலும், தனக்கு வேணும்ங்கறத மொய்ராகிட்ட கேட்டு வாங்கறதுல எக்ஸ்பர்ட்டு. அப்டி அவர் மொதல்ல கேட்டது, இவ்ளோ கேஸ் கட்டுகளையும் படிக்கவே ஒரு அசிஸ்டெண்ட் வேணும்னு. அதுக்கு ஒருத்தன இவன்கிட்ட தள்ளி விடுவாங்க. அதுதான் அக்ரம். இவரோட சைடு கிக். மார்க் கிட்ட பேசுறதே ஒரு பெரிய சவால். அப்டி அவனையே ஆச்சரியப்பட வச்சு அவன்கிட்ட நல்ல பேர் வாங்கி அந்த வேலையில நிரந்தரமாகறளவுக்கு ஒரு ஜித்தன் அக்ரம். அவன் சிரியாவுல போலிஸா இருந்தவன். ஆனா இங்க சாதாரண ஒரு அசிஸ்ட்டண்ட். போலிஸ் கூட கெடயாது. அதுலயே அவன் காட்டுற வேலைப்பாடுகளெல்லாம் அட போட வைக்குற சமாச்சாரங்கள்.

அடுத்து ரோஸ். அவளும் அதே ஆபிஸ்ல ஒரு ஸ்டெனோ மாதிரியான வேலைதான் இப்பத்தைக்கு. ஆனா இதுக்கு முன்னாடி கிரைம் சீனுக்கெல்லாம் போய் டிடெக்ட்டிவா இருந்தவதான். ஒருவாட்டி ஒரு வயாசன ஜோடியை காரை ஏத்தி ஆக்சிடெண்ட் பண்ணிக் கொன்னுட்டதால, இவளயும் டீப்ரமோட் பண்ணி ஸ்டெனோவாக்கி வச்சிருப்பாங்க. அவளுக்கு மார்க்கைப் பத்தி நல்லாவே தெரியும். ஆனா அவளுக்கு பழையபடி டிடெக்ட்டிவ் வேலை பாக்க முடியாததால, சகித்துத் தொலையிறேன், ஆனா என்னை மார்க்கோட கியூ டிப்பார்ட்மெண்ட்டுக்கு அனுப்புங்கன்னு கேட்டி வாங்கிட்டு வருவா. இப்ப டீம் செட்டாகிருச்சு. ஒருத்தருக்கொருத்தர் ஒத்துமை இல்லைன்னாலும், இதான் டீம். இந்த டீம்ல இன்னொருத்தரும் கேமியோ பண்ணுவாரு. அது யார்ன்னா, பேரலைஸாகி காலை அசைக்க முடியாம ஆஸ்பத்திரியில கெடக்குற எடி தான். அடிக்கடி தன்னோட நண்பனைப் போய்ப் பாக்குற மார்க்கும் ரோஸும் அவன்கிட்ட இந்தக் கேஸைப் பத்திப் பேசிப் பேசி அவனும் இன்வால்வாகி அவனும் அவங்களுக்கு உதவிகரமா தகவல் குடுத்துகிட்டிருப்பான். ஆகா இதெல்லாம் ஓகே, ஆனா கேஸ்?

அப்டி அவங்ககிட்ட வலுக்கட்டாயமா திணிக்கப்பட்ட பல வழக்குகள்ல ஒரு கேஸை யதார்த்தமா சமாளிப்புக்காக அக்ரம் சொன்ன பொய்தான் மெரிட் லிங்கார்ட் தொலைஞ்சு போன வழக்கு. அதுதான் இந்த கதையே. மெரிட் ஒரு வழக்கறிஞர். அவங்களைக் கொல்ல பல எதிரிகள் ஆல்ரெடி நிறைய பேர் முகாந்திரத்தோட இருக்காங்க. ஆனாலும் அந்த வழக்கு பெருசா முன்னேறாம அவங்களுக்கு என்ன ஆச்சுன்னே தெரியாம நாலு வருசமா அந்த ஃபைலை கரையான் அரிச்சுகிட்டிருக்க கெடப்புல கெடக்கு இந்தக் கேஸ். நாலு வருசமாயிருச்சு. தொலஞ்சு போறதுக்கு முன்னாடி, அவங்க ஒரு வழக்குல தோத்துப் போனதால, ஒரு மாறுதலுக்காக, தன்னோட இளைய சகோதரன் வில்லியம் லிங்கார்டைக் கூட்டிக்கிட்டு ஒரு ஷிப்புல டைம் பாஸ் பண்ணப் போறாங்க. போன எடத்துல வில்லியம் கோச்சுக்கிறான். அவனால பேசவெல்லாம் முடியாது. மன வளர்ச்சி பாதிப்படைஞ்சவன். அப்போ அங்கிருந்த எல்லா சிசிடிவிலயும் அவங்க சண்டை போட்டது இருக்கு. ஆனா அவ தண்ணியில கீழ விழுந்ததாவோ கப்பல்ல இருந்து இறங்கினதாவோ இல்ல. இதான் கேஸ்.

மார்க் அண்ட் அக்ரமோட யூகப்படி, அவள் உயிரோடயும் இருக்கலாம், இல்லேன்னா இல்லாமலும் இருக்கலாம்ங்கறது தான். இந்த அடிப்படையில இந்தக் கேஸ் அவங்க டிபார்ட்மெண்ட்டையே மண்டையை உடைக்க வச்சு, கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா பல உண்மைகளை வெளிய கொண்டு வருது. இந்த ஒன்பது எபிசோடும் முடிஞ்சதுக்கப்புறம் எனக்கு அடடா இப்பவே முடிஞ்சிருச்சேன்னு ஒரு ஃபீலை ஹெவிய்யா கொடுத்துட்டு அடுத்த சீசனை எதிர்பார்க்க வச்சிடுச்சுங்கறது மறுக்க முடியாத உண்மை. அடுத்த சீசன் வந்தா நிச்சயம் பாக்கனும். அதுக்கு முன்னாடி இந்த சீசனை தனியா பாருங்க. நிச்சயம் உங்களுக்கும் புடிக்கும்.  குடும்பங்கள் தவிர்க்கவும். 

வர்ட்டா!

No comments:

Post a Comment