Saturday, June 13, 2026

த்ரிடம்

த்ரிடம்

அப்டின்னு ஒரு மலையாள கிரைம் இன்வெஸ்ட்டிகேசன் திரில்லர் படம். நடிகர்கள்னு பாத்தா, பூதகாலம் அண்ட் இஷ்க்ல நடிச்ச ஷேன் நிகம் மற்றும் பல மலையாளத் துணை நடிகர்கள். இதுல நடிச்ச பலரையும் இதுக்கு முன்னாடி நான் பாத்த பல மலையாளப் படங்கள்ல பாத்திருந்தாலும் பேர் தெரியாது. இதுக்காக கூகுல் பண்ணி லிஸ்ட் போட்டு பாத்தியா எனக்கு எல்லாரையும் தெரியும்னு சொல்லிக்கவும் மனசாட்சி இடம் கொடுக்கல, நீ இன்னும் அமெச்சூர்தான். பெரிய ரைட்டர் மாதிரி பீத்திக்காதன்னு தோனுச்சுங்கறதால நேரடியா இந்தப் படத்தைப் பார்த்த அனுபவம் எப்படி இருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.

கதைப்படி இடுக்கியில உள்ள ஒரு மலைக் கிராமத்துல சப் இன்ஸ்பெக்ட்டரா ட்யூட்டியில ஜாய்னாக கதையின் நாயகன் விஜய் வர்றாரு. அந்த ஸ்டேசனுக்குன்னு இன்ஸ்பெக்டர் கிடையாது. அதனால வயசு கம்மியா இருந்தாலும் சப் இன்ஸ்பெக்டரா வந்த விஜய்க்கு ஏக மரியாதை. அந்த ஸ்டேசன்ல இப்ப இவர்தான் சுப்பீரியர். வயசும் கம்மி. ஸ்ட்ரெய்ட்டா எஸ்.ஐ போஸ்ட்டிங். அதனால அந்த ஸ்டேசன்ல சீனியர் எம்ப்ளாயி கிருஷ்ணன்ங்கறவரோட சஜசன்படிதான் நிறைய ப்ரோட்டோகால்ஸை ஃபாலோ பண்ணிட்டிருக்காரு. அவர் ரொம்ப நல்லவர். அவர்கிட்ட எதுனாலும் கேட்டுக்க அப்டின்னு இதுக்கு முன்னாடி போலிஸா இருந்து ரிட்டயர்டான விஜயோட தாய்மாமன் ஃபோன்ல சொல்லிருப்பாரு.

அங்க ட்யூட்டியில ஜாய்ன் ஆனப்பலேர்ந்து அங்கயே போலிஸா வேலை பாக்குற ரம்யா அண்ட் வித்யாங்கற ரெண்டு பொண்ணுங்கள்ல வித்யா மட்டும் விஜயை முழுங்கற மாதிரி பாத்துகிட்டே இருக்காங்க. படம் பாக்கற நமக்கு சரி இது லவ் ட்ராக்லயோ அல்லது அதைச் சார்ந்த ட்ராக்லயோ மேற்கொண்டு படம் போயிடுமோன்னு நிச்சயமா தோன வச்சிடும். என்ன ஆச்சு அதுக்கப்புறம்? இது நாள் வரைக்கும் இந்த ஸ்டேசன் லிமிட்டுல பெருசா எந்தக் கேஸும் பதிவாகல. சிம்பிளா சொல்லப் போனா ரொம்ப அமைதியான ஊர். அந்த ஒரு காரணத்தாலதான் இதுவரைக்கும் அரசாங்கமும் இந்த ஊர் ஸ்டேசனுக்கு இன்ஸ்பெக்டர் அப்டின்னு யாரையும் நியமிச்சிருக்கல. அப்ப எதுக்கு ஸ்டேசன் அந்த ஊருக்கு? அப்டின்னு தோனுறது சகஜம் தான். இப்ப அந்த ஊர்ல யாராவது பாஸ்போர்ட் எடுக்கனும்னாலோ எதாவது குற்ற சம்பவங்களோ நடந்துடாம தடுக்கனும்ன்னா போலிஸ் வேணுமே. அதுக்காகத்தான். அமைதியான ஊர்ன்னாலும் காவல் அவசியம்.

இந்தப் பதிவைப் படிச்சிகிட்டிருக்கறவங்க எல்லாருக்கும் காவல்துறையோட முக்கியத்துவம் நிச்சயம் புரிஞ்சிருக்கும் ஆல்ரெடி.

அப்டிப்பட்ட இந்த ஸ்டேசன்ல விஜய் எஸ்.ஐயா சார்ஜ் எடுத்த சில நாட்கள்லயே அந்த ஊர்ல ஒரு மனிதனோட கை மட்டும் துண்டா வெட்டப்பட்ட நிலையில கிடைச்சு அதைத் தொடர்ந்த போலிஸ் தேடல்ல பக்கத்துலயே புதையுண்ட நிலையில அதோட டெட் பாடியும் கிடைக்குது. இந்த லெவல்ல போலிஸ் ஸ்டேசன்லயும் சரி அந்த ஊர்லயும் சரி எல்லாருக்கும் ஷாக். நம்ம ஊர்லயா அப்டின்னு. இதுல இந்த வேலையிலயே, ஏன் போலீஸாவே முன் அனுபவம் இல்லாத எஸ்.ஐ விஜய் தலையில இந்தக் கேஸ். குருவி தலையில பனங்காய் மாதிரிதான். அதைத் தொடர்ந்த ரெண்டு மூனு நாட்கள்லயே அந்த ஊர் ஃபைனான்ஸ் கம்பெனியில ஒரு லாக்கர் பீரோவே கொள்ளையடிக்கப்படுது. அந்த ஊருக்கு ஷாக் மேல ஷாக். வெய்ட்டீஸ். அதைத் தொடர்ந்த ரெண்டு மூனு நாட்கள்ல இன்னொரு டெட்பாடி ஆத்துல கை கால்கள் கட்டப்பட்ட நிலையில கிடைக்கிது.

இந்த ரெண்டு கொலைகளும் ஒரே பேட்டர்ன்ல செய்யப்பட்டிருக்கு. அதாவது ஒடம்புல அங்கங்கே அடிவாங்கி முறிஞ்சு போயிருக்கற எலும்புகளும், தலையில அடிபட்டு இறந்த விதமும் ஒன்னு போலவே இருக்க, ரெண்டு கொலையும் ஒரே ஆள்தான்ங்கற முடிவுக்கு விஜய் வர்றாரு. இப்ப மேல இருந்து விஜய்க்கு பிரஷ்சர். ஆல்ரெடி அவரோட சுப்பீரியர்ஸும் சரி, இந்த ஊர் மக்களும் சரி அனுபவமில்லாத எஸ்.ஐன்னு தான் இவரை அணுகறாங்க. ஆனா விஜய்க்கு என்னடா பண்றதுன்னு ஒரே கொழப்பம். இந்த பிரஷ்சர் ஒரு கட்டத்துக்கு மேல இதுவரைக்கும் கண்டுபுடிச்சத வச்சே அந்தக் கேஸை முடி இல்லன்னா ஒரு வாரக் கெடுவுல உண்மையான குற்றவாளிகளைப் புடிச்சாகனும்னு ஒரு ப்ரஷ்சர். இல்லன்னா இவரைத் தூக்கிட்டு வேற ஒரு அனுபவமுள்ள ஒரு ஆளை அந்த போஸ்ட்ல அங்க ரெக்ரூட் பண்ணிருவாங்க. விஜய் இந்த ஒரு வாரக் கெடுவுல என்ன பண்றாருங்கறதுதான் படத்துல நம்ம எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குற விசயம்.

படம் முடிஞ்சதுக்கப்புறம் தான் நம்ம கண்கள்ல கட்டப்பட்டிருந்த கட்டுகள் அவிழ்க்கப்படுது. அதுக்கப்புறம் நம்ம இதுவரை பார்த்த இந்தப் படத்துல காட்டப்பட்ட காட்சிகள் மேல நம்ம பார்வையே மாறுது. அந்த ஊர் அமைதியான ஊரெல்லாம் இல்ல. குற்றங்களே நடக்காத ஊர்ங்கறதெல்லாம் சுத்த ஹம்பக். அப்டி ஒரு ஸ்டேட்டஸை வலியவெல்லாம் திணிச்சிருக்கல. பதியப்படவே இல்லன்னா எப்டி குற்றங்கள் தெரியவரும். அதுவும் அது சின்ன மலைக் கிராமம். எதுக்கு டென்சன்னு ஸ்டேசன் வரையிலயே பேசி ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல முடிச்சிக்கறதால அது எஃப்.ஐ.ஆரா பதியப்படாது. இப்பவரைக்கும் மெய்ண்டெய்ன் செய்யப்பட்ட ஒரு நிலை, விஜய் அந்தப் போஸ்ட்டிங்ல வந்ததுக்கப்புறம் நடக்க ஆரம்பிக்கிது. உண்மையில ஒரு வழக்கை எப்டி அணுகனும்ங்கற அனுபவம் அந்த ஸ்டேசன்லயும், அந்த ஊர்ல உள்ள மக்கள்கிட்டயும் தான் இல்ல. அவங்க அதுக்கெல்லாம் பழக்கப்படாம அண்டர்ஸ்டாண்டிங்லயும், குற்றங்களைக் கடந்து போய்கிட்டும் இருந்திருக்காங்க.

இந்த மொத்த அழுத்தம் கூடிய கேரக்ட்டர்ல ஷேன் நிகம் செமயா நடிச்சிருக்காரு. உண்மையில இதுவரைக்கும் நடிச்சுகிட்டிருந்தவங்க யார்ன்னு நமக்குப் புரிய வச்சதுதான் அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ். இப்ப என்ன மலையாள சினிமாவின் கிரீடத்தில் இன்னுமொரு வைரம்னு சொல்லிக்கலாமான்னு தோன வச்சதே செம படம்னு சொல்லிக்கப் போதுமானது. மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

வர்ட்டா!

No comments:

Post a Comment