Thursday, April 30, 2020

Fragile (2005) - ஸ்பானிஷ்





Fragile (2005)


ஸ்பானிஷ்
Horror / Thriller


2005ன்னா கொஞ்சம் பழசுதான். பலர் பார்த்திருக்கக் கூட வாய்ப்பிருக்கு. ஆனா, நான் நேத்து நைட்டுதான் பார்க்க முடிஞ்சது. வொர்த்தா? பயந்தனா? கதை எப்படி? வாங்க பார்க்கலாம்.

ஹாரர் படம் பார்க்க ஆரம்ப்... பேய்ப்படம்னு ஸ்டைலா சொல்லு மேன். சரி. பேய்ப்படம் பார்க்க ஆரம்பிச்சாலே நம்ம வெளியுலக நினைப்புக்கள் எல்லாத்தையும் நம்மையும் அறியாம அனிச்சையா மறந்துட்டு அந்தப் படம் ஓடுற ஸ்க்ரீன் மேல மட்டுமேதான் நம்ம கான்சென்ட்ரேசன் இருக்கும்ங்கறத கவனிச்சிருக்கீங்களா? நேத்துத்தான் அதை நான் கவனிச்சேன். டோட்டலா முழு கவனமும் படத்துலதான் இருந்தது. மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பும் கூட வந்து தொத்திக்கும். தைரியமா பயப்பட மனசு தன்னை தயார்படுத்திக்கறதுக்கான சிம்ப்டம்ஸ் இதெல்லாம்.

(இல்லயில்ல. போர்ன் பாக்குறப்ப இருக்கற குறுகுறுப்பு அனிச்சை செயல்களெல்லாம் வேற டிபார்ட்மெண்ட். அது வேற இது வேற - எப்படியும் இதுக்கு ஒரு கமெண்ட் வரும்ங்கற அவதானிப்புலதான் இந்த டிஸ்கிளைமர் ப்ராக்கெட்)

கோட்டை மாதிரியான வெளித் தோற்றமுள்ள ஒரு ஹாஸ்பிட்டல். அதுல அஞ்சு வயசு, ஆறு வயசு சின்னக் குழந்தைங்களுக்கு மட்டும் வரக் கூடிய, மூச்சுத் திணறல், ஹார்ட் அட்டாக்,  டிஸ்லெக்ஸியா மாதிரியான வைத்தியம் பாக்குறாங்க. அதாவது கவனிப்புகள் அதிகம் தேவைப்படுற குழந்தைங்களுக்கான வைத்தியம் பாக்கற ஹாஸ்பிட்டல். அந்தக் குழந்தைங்களோட பெத்தவங்க கூட எப்பவாச்சும்தான் வந்து அந்தக் குழந்தைங்கள பாக்க விசிட் பண்ணுவாங்க. ஆப்படியாப்பட்ட ஆஸ்பத்திரி. பழைய படம் வேறயா... ஹாஸ்பிட்டல் லைட் க்ரீன் ஆம்பியன்ஸ் ஸ்க்ரீன்ல நம்மள அப்டியே உள்ளாற இழுத்துடுது. அந்த ஹாஸ்பிட்டல்ல குழந்தைங்கள கவனிச்சிக்க புதுசா ஒரு நர்ஸ் வர்றாங்க. அவங்க பேரு Amy.

வந்ததுக்கப்புறம் சில அப்நார்மல் சம்பவங்கள் நடக்குது. ஏமி அங்க வர்றதுக்கு முன்னாடி அந்த வேலையில இருந்த நர்ஸ் பேரு சூசன். அவ கவனிச்சிகிட்டிருந்த ஒரு பையனோட காலுல இருந்திருந்தாப்ல முட்டிக்கி கீழ ஃப்ராக்ச்சர். அத ட்யூட்டி டாக்டர் ராபர்ட்டும் சூசனும் சரியாக்க ட்ரை பண்ணிட்டிருக்கும் போதே ரொம்ப விநோதமா அந்தப் பையனோட கால் ஃப்ராக்ச்சருக்கு ரெண்டு மூனு இன்ச் தள்ளி இன்னொரு ஃப்ராக்ச்சர். மேஜிக் மாதிரி. அந்தப் பையனோட எக்ஸ்ரே ரிப்போர்ட்ல பாத்தா ரெண்டு ஃப்ராக்ச்சரும் நிஞ்சா கத்திய வச்சி ஃப்ரூட் ஸ்லைஸ் பண்ண மாதிரி இருக்கு. இந்த சீன் பாக்கறப்ப எனக்கே எலும்பெல்லாம் கூசிருச்சு.

இந்த சம்பவத்துக்கப்புறம் சூசன் அந்த வேலைய விட்டே போயிடறாங்க. அந்த எடத்துக்குத்தான் ஏமி வர்றாங்க. அவங்க வந்த பின்னாடி குழந்தைங்களோட ரொம்ப அன்பா பழகறாங்க. கவனிச்சிக்கறாங்க. ஆனா, அந்த எடமே எதோ ஒரு மர்மத்த ஒளிச்சி வச்சிகிட்டு கண்ணாமூச்சி ஆடுற மாதிரி ஏமிக்கு ஃபீலாகுது. ஏன்னா ஏமி பாக்குறது நைட் ஷிப்ட். பேய்ப்படம், ஹாஸ்பிட்டல், ரோஸ்மேரி’ஸ் பேபி லைட் க்ரீன் ஆம்பியன்ஸ், புது நர்ஸ், நைட் ஷிப்ட் - இதுக்கு மேல வேற என்னங்க வேணும் ஒரு பேய்ப்படத்துல கதைய நகர்த்தறதுக்கும் நம்மள பயமுறுத்தறதுக்கும்! டைரக்டர் அடிச்சி ஆடிருக்காரு.

யாரந்த டைரக்டர்னு தெரியுமா? REC sequels, Sleep Tight போன்ற படங்களோட இயக்குநர் Jaume Balagueró. நாம இத எழுத்துக் கூட்டிப் படிச்சா ஜாமி பாலகுருன்னு படிப்போம்ல? ஸ்பெய்ன்ல ரொம்ப பேமஸான இயக்குநர்னு நண்பர் ஒருத்தர் சொன்னாரு.

அந்த மர்ம ஃபீலுக்கப்புறம் ஏமிக்கு நடந்ததெல்லாம் சொல்றத விட, அவங்க ப்ளஸ் நம்ம கண்ணு முன்னாடி குழந்தைங்களோட எலும்பு படக் படக்னு முறியறத பாக்குறப்ப - முதுகுத்தண்டுல ஜில்லுன்னு ஐஸ்கட்டி வச்ச மாதிரி ஃபீலாகும் பாத்துக்கங்க.

பாருங்க. கண்டிப்பா பார்க்கலாம். குழந்தைங்க தவிர்த்திருங்க. நிச்சயமா அவங்களுக்கானதல்ல. நான் தனி இருட்டு ரூம்ல நைட்டு 12 மணிக்கு மேலதான் இந்தப் படத்தைப் பாத்தேன். இனிமே அதையே எல்லா படத்துக்கும் ட்ரை பண்ணலாம்னிருக்கேன். நல்ல திகில் எபெக்ட். The Wailing எல்லாம் broad daylight-ல தான் பாத்தேன். அதுக்கே கிருட்டு கிருட்டுன்னு கண்ண சொழட்டி கிறுகிறுக்க வச்சிருச்சு. அந்தளவுக்கு இந்தப்படம் இல்ல. ஆனா இது நல்ல ஸ்க்ரீன்ப்ளே. அதை கண்டிப்பா நீங்க படம் முடியும்போது உணருவீங்க.

இந்த அஞ்சு நாள்ல நிறைய படங்கள் தொடர்ச்சியா பார்த்தேன். ஆனா அதைப்பத்தி Last in First out (LIFO) மெத்தட்ல எழுத ட்ரை பண்றேன்.

மீண்டும் சந்திப்போம்.


Friday, April 24, 2020

Julia's Eyes (2010) - ஸ்பானிஷ்



Julia's Eyes (2010)


ஸ்பானிஷ்
Thriller / Horror

அநேகமா பேஸ்புக்ல உள்ள என்னோட நண்பர்கள் மத்தியில இந்தப் படத்தை இவ்ளோ லேட்டா பாக்குற ஆள் நானாத்தான் இருப்பேன்னு நெனைக்கிறேன். அதனால என்னடா திடீர்னு இத்தன வருசம் கழிச்சி வந்து இவன் சிவாஜி செத்துட்டாராங்கற மாதிரி பேசறானேன்னு நினைச்சிக்காதிங்க. எனக்கு இந்தப் படத்த முந்தாநாள்தான் ஒருத்தர் சஜஸ்ட் பண்ணாரு. உண்மையில இந்தப் படத்தைப் பத்தி இதுக்கு முன்னாடி சுத்தமா நான் கேள்விப்பட்டிருக்கல. ஹாலிவுட், கொரியன் தாண்டி அதர் லாங்குவேஜ்ல நான் அதிகமா படங்கள் பாத்ததில்ல. Hidden Face, Goodnight Mommy, Timecrimes, Sleep Tight, The Fury of a Patient Man, Tale of Tales படங்கள் மாதிரி நான் பார்த்த அதர் லாங்குவேஜ் படங்களோட லிஸ்ட்ல நம்பர்ஸ் ரொம்பவே குறைவு.

கதையில, சாரான்னு சமீபத்துல கண் பார்வைய தொலைச்ச, கூடிய சீக்கிரம் அந்தப் பார்வைய திரும்பக் கிடைக்கறதுக்காக ஆபரேசன் பண்ணிக்கப் போற ஒரு பொண்ணு - தனியா ஒரு வீட்ல வசிக்கிறா -  ஆஹ் அப்பறம். அவ கூட யாருமே இல்லையான்னு பாத்தா, இருக்கான். ஒருத்தன் இருக்கான். அவளுக்கும் அந்த சந்தேகம் இருந்தது. அது எப்பன்னா அவனுக்கு பயந்துகிட்டு அவ தூக்கு மாட்டிகிட்டு சாகலாம்னு கயித்த கழுத்துல மாட்டிகிட்டு ஸ்டூல் மேல ஏறி நின்னுகிட்டிருக்கும் போது, அந்த ஸ்டூல அவன் எட்டி ஒதச்சப்ப. ஓ மை காட் - உண்மையிலயே இது நல்ல திகில கெளப்புற நல்ல ட்விஸ்ட்டுள்ள ஆரம்பம்தான். அதே டெம்போ படத்தோட கடசி வரைக்கும் ட்ராவலாச்சான்னு பாத்தா...

அது அப்டியே அவளோட ட்விஸ் சிஸ்டர் யூலியாவுக்கு (Julia-வ யூலியான்னு தான் சொல்லிக்கிறாங்க. ஜூலியான்னு நாமதான் சொல்லிக்கிருக்கோம்) ஹலோ பிரதர்ல வர்ற நாகார்ஜுனாவுக்கு ஆன மாதிரி பீலாகுது. ஒட்டிப் பொறந்த Identical twins-க்கு இந்த மாதிரி நடக்கும்னு ஹலோ பிரதர் படம் பார்த்துத்தான் நான் தெரிஞ்சிகிட்டேன்.

ஆக, அய்யய்யோ எங்கக்காவுக்கு என்னமோ ஆயிப் போச்சுன்னு பதறியடிச்சிகிட்டு, தன்னோட வீட்டுக்காரர் ஈசாக்கோட (Isaac) சாரா வீட்டுக்குப் போயி கதவத் தட்டிப் பாத்தா. ரிப்ளை வரல. (குறிப்பா அவ போன் எதுவும் பண்ணல. நேரடியா கார்ல டீசல போட்டுகிட்டு புருசனோட கெளம்பி வந்துட்டா) கதவ ஒடச்சி உள்ள போயி பாத்தா தூக்குல தொங்கிட்டிருக்கா.

போலீஸ் வருது. விசாரிக்கிது. அந்த வீட்ல எலெக்ட்ரிக்கல் ப்ராப்ளம் இருக்கும் போல. அடிக்கடி மெயின்ல ட்ரிப்பாகி கரண்ட்டு வந்து வந்து போகுமாட்ருக்கு. போலீஸ் வந்து விசாரிச்சிட்டிருக்கையில திடீர்னு ட்ரிப்பாகி கரண்ட்டு வருது. அப்ப கட்டக் கடசியா ஆன் பண்ணி வச்சிருந்த எலெக்ட்ரிக்கல் உபகரணங்களெல்லாம் ஓடத்தான செய்யும். அதான தொன்று தொட்டு வழக்கம். அப்டி ஓடுறப்ப சிடி ப்ளேயரும் ஓட ஆரம்பிக்கிது.

உடனே யூலியா போலிஸ்கார்ட்ட போயி, போலிஸ்க்கார் போலிஸ்க்கார், இந்தப் பாட்டு எங்கக்காளுக்கு புடிக்காது போலிஸ்க்கார். அதனால அவள யாரோ கொல பண்ணிருக்காங்க. அவ பாட்டு புடிக்கலேன்னு சூசைடெல்லாம் பண்ணிக்கிற கேஸில்ல அவ சாவுல சந்தேகமிருக்குன்னு சொன்னா பாருங்க - வொண்டர்புல், பீட்டிபுல், மார்வலஸ், எக்ஸலண்ட் பர்பாமென்ஸ். ச்சும்மா கிழி கிழி கிழி.

இதையாடா இத்தன நாளா தூக்கி வச்சி கொஞ்சிகிட்டு கெடந்தீங்கன்னு தோணுச்சு.

அதுக்கப்புறம் இதே மாதிரி சீன் பை சீன் ட்விஸ்ட்டு ட்விஸ்ட்டு ட்விஸ்ட்டுன்னு நெறய பின்னிக்கிட்டேதான் இருந்தாங்க. ஆனா, மேல சொன்ன லாஜிக்க பாக்கலேன்னா உண்மையிலயே அதெல்லாம் ’அட’ அப்டின்னுதான் இருந்திருக்கும். ஆனா பாதிப்படம் வரைக்கும் இவ்ளோ சஸ்பென்ஸ வச்சிட்டு அதுக்கப்புறம் ஒரு பெரிய ட்விஸ்ட்டு ஒன்னு வச்சாய்ங்க பாருங்க. ஆசம்டா டேய்.

படத்தோட பாதியிலயே வில்லன் யார்னு படம் பார்த்த அத்தன பேருக்கும் தெரிஞ்சிரும். 99.99%. அவன் அந்த 0.01%லயாச்சும் புதுசா யாரையாச்சும் வில்லனா காட்டிற மாட்டாங்களாங்கற நப்பாசையிலதான் மீதிப் படத்த பார்த்திருக்கனும். உண்மையா உங்க நெஞ்சில கைவச்சி சொல்லுங்க ப்ரெண்ட்ஸ், நீங்களும் அந்த 0.01% நப்பாசையிலதான மீதிப் படத்த பாத்தீங்க?

படத்துல இன்னொரு பாராட்டப்பட வேண்டிய ஒரு விசயம். லைட்டிங்! ஆமாங்க உண்மையாத்தான்.

ஹீரோயினுக்கு கண்ண கட்டிருக்காம். அதனால வில்லன் மூஞ்சிய மட்டும் காட்டாம படம் முழுக்க அவ கூடவே அவன சுத்த விட்டு அவன் ஒடம்பெல்லாம் படம் முழுக்க காட்டிட்டு, கிளைமாக்ஸ்ல யூலியா கண்ல கட்ட அவுத்ததுக்கப்புறம் அவன் மூஞ்சிக்கி மட்டும் ஸ்பெசலா ஒரு லைட்டிங் வச்சானுக பாருங்க - இதுக்காடா சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ்னு பாதிப்படத்துக்கு எங்க மாங்கல்யத்த அறுத்துகிட்டு கெடந்தீங்க?

இதுல இன்னொரு அதிமுக்கிய ஸ்பெசல் மென்சன் இருக்கு. படத்தோட புரடியூசர் கியர்மோ டெல்டோரோவாம். அதுக்காக அந்த வில்லனுக்கு, எல்லாரும் மான்ஸ்டர், மான்ஸ்டர்னு பில்டப்பு வேற. டேய் இத இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாதுடா. அவ்ளோ சப்பையா இருந்தாண்டா அவன். அவ்ளோ டொங்கல் மூஞ்சி வில்லனுக்கு. இதுல அவன் கடைசில படபடன்னு டயலாக் பேசறப்ப, சூரி, ப்ளீஸ் ஹெல்ப் மீ ப்ளீஸ் ஹெல்ப் மீன்னு பதட்டமா இங்கிலீஸ் பேசறாப்ல தோனவும் புருக்குனு சிரிச்சிட்டேன்.

ரொம்ப நாள் கழிச்சி மனசு விட்டு சிரிச்சேன். இந்தப் படத்த எனக்கு ரெபர் பண்ண அன்பு நண்பர் சிவராஜுக்கு அநேக கோடி நமஷ்காரங்கள். உபயகுசலோபரி.




Thursday, April 23, 2020

Himalayathile Kashmalan (2017) - மலையாளம்



Himalayathile Kashmalan (2017)

மலையாளம்
Thriller / Comedy

மூனு முட்டாக் கூமுட்டைங்க தன்னோட உயிர் நண்பன காப்பாத்தப் போறதுதான் இந்தக் காதை. அப்பிடி என்ன செஞ்சிட்டான்னு அவன காப்பாத்தப் போறாங்கன்னா,

அய்யோ அத எப்பிடி நாஞ்சொல்லுவேன்…

எக்சாம் எழுதப் போன எடத்துல அந்த ப்ரெண்டு, ஒரு பிகர கரெக்ட் பண்றான். அடுத்த ஷாட்டு, அவ வீட்டு பெட்ரூம்ல. ’வெளக்கணைக்கட்டே’ன்னு அந்த பிகர் கேக்க, தட் தட் தட்ன்னு பிகர் வீட்டுக் கதவ யாரோ தட்ட, என்னடாது சிவ பூஜையில கரடின்னு அந்த ப்ரெண்டு திருதிருன்னு முழிக்க ’அய்யோ, யேட்டன் வன்னு யேட்டன் வன்னு, சீக்கிரமா எங்கயாச்சும் ஒளிஞ்சிக்கடான்னு’ அந்த பிகர் கதற, வேற வழியில்லாம ஜட்டியோட அந்த வீட்டு அன்யூஸ்டு டாய்லெட்ல அவன உள்ளார தள்ளி கதவ சாத்திட்டு, வீட்டுக் கதவ தொறக்குறா அந்த பிகரு.

அவசரத்துல கையில கெடச்சத வாரிச்சுருட்டிக்கிட்டு… ம்ஹும் அவ்ளோவெல்லாம் இல்ல. போன மட்டுந்தான். ப்ரெண்டு கையில அதுல நல்லவேளயா கொஞ்சூண்டு அவுட்கோயிங் பேலன்ஸ் இருக்க, தன்னோட உயிர் நண்பனுக்கு போனடிச்சு காப்பாத்து தெய்வமேன்னு கெஞ்ச, அவனும் வேற வழியில்லாம, பொண்டாட்டிகிட்ட பொய் சொல்லிட்டு, அந்த ராத்திரியிலயும், அவன் ப்ரெண்டுகிட்ட ஹெல்ப் கேக்க,

அந்த ராத்திரியிலயும் கூட தொணைக்கு வர ப்ரெண்டு கெடச்சது கூட பெரிசில்ல. அவன் கூட காரும் செலவுக்கு காசும் தர சம்மதிச்சானே அவன் இவனோட ப்ரெண்டு…

காரு கெளம்புது. கதையும் கெளம்புது செம காமெடியா. படத்தோட பேரு ”ஹிமாலயத்திலெ கஷ்மாலன்”. (ச்சே ச்சே கெட்ட வார்த்தையெல்லாம் இல்லிங்க)

சின்ன படந்தான். ஆனா நெறய கேரக்டர்ஸ். அதுல ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டைப்பு. கிட்டத்தட்ட சுந்தர்.சி டைப்பு படம். அவரு கையில மட்டும் இந்தக் கதை மாட்டிருந்தாலோ, அல்லது கொஞ்சம் தெரிஞ்ச மலையாள காமெடி நடிகர்கள் நடிச்சிருந்தாலோ செமயா ரீச்சாகிருக்கும். ஆனா பாவம் பட்ஜெட் படம் போல. புது நடிகர்கள்ங்கறது கூட பெருசா பிரச்சனையில்லை. இந்த மியூசிக்தான்… அங்கங்க டேய் வாசிங்கடான்னு கெஞ்சனும் போல. ஒரே நைட்ல நடக்கற கதை. ஆனாலும், மெதுவா நிறுத்தி நிதானமா காமெடி பண்ற மாதிரி ஒரு ஃபீல். அதுக்குக் காரணம் மியூசிக் மிஸ்ஸான பீலிங்கிதான்.

மத்தபடி நல்ல எண்டர்டெயினிங் காமெடி மூவி.

Stranger Things (2016) - Season 1



Stranger Things (2016)


Season 1
Horror


இத ஒரு நண்பர் பாரு பாருன்னு டெய்லி எனக்கு ரெபர் பண்ணிட்டே இருந்தாரு. ஒரு கட்டத்துல Stranger Things பார்க்காத ஆளுங்க கூட எல்லாம் பேசுறதில்லைன்னு கோச்சுக்கவும் செஞ்சாரு. ஆனாலும் நான் இதைப் பார்க்கல. இன்னிக்கி பார்த்துடலாம். நாளைக்கு பார்த்துக்கலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தேன். என்ன காரணம்ன்னா யாராவது இந்தப் படங்களைப் பாருங்கன்னு சொன்னா கண்டிப்பா அதுல ஒரு காரணம் இருக்கும். அந்தப் படங்கள்ல எதாவது ஒரு விசயம் நம்மை உள்ளிழுத்துக்கவும் செய்யும். அந்த உள்ளிழுப்பு காரணிகள்தான் அதைப் பார்க்கனுமான்னு ஒருவித பயத்தையும் உருவாக்கும்.

அது எப்படின்னா, அந்த ரெபர் செய்யப்பட்ட படம் அம்மா செண்டிமெண்ட்ன்னு வய்ங்க. அதைப் பார்த்து நாம ஏன் பீல் பண்ணனும்னு ஒரு பயம் வரும். திரில்லர் ஜானர்ன்னா அந்தப் படங்களோட சஸ்பென்ஸ் என்னவாருக்கும்னு மண்டையைக் குடையும்.
அந்தப்படங்களோட அழுத்தமான அடர்த்தியான கதையோ காட்சிகளோ ( இந்த ரெண்டும் இல்லாம கண்டிப்பா ஒரு படம் ஒருத்தருக்கு சாதாரணமாக பிடிச்சிருக்க வாய்ப்பேயில்லை. அப்படி இல்லாத படத்தை யாரும் ரெபர் செய்யவும் மாட்டாங்க ) நம்ம உணர்வுகளை அசைக்கும் தன்மையுடையவை.

இன்னும் ரொம்ப சிம்பிளா சொல்லனும்ன்னா இன்வால்வ்டாகி அந்தப் படத்தைப் பார்க்கனும்ங்கறது இஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்யறதப் போல. பொதுவா எந்தப்படத்தைப் பார்க்கறதுன்னாலும் என் மைண்டை செட் பண்ணிக்கிட்டுத்தான் பார்ப்பேன். பார்க்குற படம் நம்மை எண்டர்டெயின் செய்யும். அதுல மனம் ஒன்றிப் போய் பார்க்கறதுதான் என் வழக்கம். இதை இவர் இவ்ளோ தூரம் பார்க்கச் சொல்லி வற்புறுத்துறாரேன்னே ஒரு பயம் வந்து இதனாலேயே இந்த சீரிஸை பார்க்கல.

இன்னிக்கி நெட்பிளிக்ஸை நோண்டும்போது இதோட முதல் எபிசோட்ல பத்து நிமிசம் என்னிக்கோ நான் பார்த்ததோட அப்படியே நின்னுகிட்டிருந்தது. மனசு இன்னிக்கி இதைப் பார்த்துடலாம்னு எனக்கு தைரியம் சொல்லிச்சு. ரைட். கிரீன் சிக்னல் கிடைச்சிடுச்சுன்னு பார்க்க ஆரம்பிச்சு மொத்தத்தையும் இன்னிக்கி ஒரே நாள்ல பார்த்து முடிச்சாச்சு. அவ்வளவு என்கேஜிங்கான கதை. இதோட மேக்கிங்கை பத்தி தனி பதிவே போடலாம். ஆனாலும் என் கை சும்மாயிருக்காது. கதையை ஸ்பாய்லராக சொல்லிடும். அதனால அதைப் பத்தி எதுவும் எழுதப் போறதில்லை. நீங்களே பார்த்து அனுபவிங்க. மொத்தம் எட்டு எபிசோட். எட்டிலும் ஒரு சூப்பரான அம்சம், எந்த இடத்திலும் நாம ஒரு நாடகத்தைத்தான் பார்த்துகிட்டிருக்கோம்ங்கற பீலிங்கே வராது.

அடுத்த சீசன்களைப் பற்றிய பதிவுகள் விரைவில் (அதாவது பார்த்து முடிச்சதுக்கப்புறம்)

The Thinning (2016)



The Thinning (2016)


Thriller


நாட்டில் மக்கள் தொகையை குறைக்க அரசு முடிவெடுக்கிறது. மேலும், இதன் மூலம் நாட்டையே 100% கல்வியில் சிறந்ததாக ஆக்க வேண்டி அரசு, பள்ளி கல்லூரி நிர்வாகங்களின் பொறுப்பை ஏற்கிறது. இதன்படி அனைவரும் படித்தாக வேண்டும். கட்டாயக் கல்வி. கட்டாயத் தேர்வு. தேர்வில் வெற்றி பெற்றால் உயிர் வாழலாம். தோல்வியடைந்தால் - மரணம்.

இந்த சட்டம் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பொதுவாக்கப் படுகிறது. அரசியல்வாதியின் மகனானாலும் சரி. தேர்வில் தோல்வியடைந்தால் thinning எனப்படும் ஆட்குறைப்பு சட்டத்தின் படி அடுத்த சில நிமிடங்களில் கொல்லப் படுவார்கள்.

இதற்கென நாட்டின் மொத்த ராணுவத்தையும் பள்ளி, கல்லூரிகளில் காவலுக்கு நிறுத்துகிறது. எக்ஸாம் கன்ரோல் மொத்தத்தையும் ராணுவமே முன்னின்று நடத்துகிறது.

ஆனால், பெயிலானவர்கள் சாவதற்கு ஒப்புக் கொள்வதில்லை. பயந்து கொண்டே தேர்வெழுதி அடுத்த சில நிமிடங்களிலேயே ரிசல்ட்டை அறிவிக்கும் போது ஆர்வத்திற்கு பதிலாக மரண பீதியில் அமர்ந்திருக்கும் திக் திக் நிமிடங்கள். கண்முன்னேயே பெயிலானவர்களை சாகடிக்க தரதரவென இழுத்துச் செல்லும் கொடூரத்தை கண்டு உறைந்து உயிர்வாழும் சக மாணவர்கள்.

இதன் பின்னணியில் உள்ள மர்மங்களும், அரசியலும் திடீர் திருப்பங்கள்.

இதுதான் The Thinning படத்தின் கதை. YouTube Red நிறுவனமும் Legendary நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் ஒன்னரை மணி நேர திரில்லர் படம். படத்தின் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை என்கேஜிங்காக கொண்டு செல்லும் கிரிப்பிங்கான திரைக்கதை ப்ளஸ் படமாக்கப்பட்ட விதம் இரண்டும் அட்டகாசம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா



ஆதலினால் காதல் செய்வீர்

- சுஜாதா

ஜோமோ, அரிஸ், கிட்டா, பார்ஸாரதி அலைஸ் மாமா. இந்த நால்வரும் ஒரு பத்திரிக்கையில் பிரசுரமான காமெடி துணுக்கினால் ஜோமோவுடன் இணைந்த நண்பர்கள். நால்வரும் ஒரே வீட்டில் வசிக்குமளவு அவர்களது நட்பு, நெருக்கம். இந்த நால்வரில் பார்ஸாரதி (பார்த்தஸாரதி அல்ல) மட்டும் திருமணமானவன். அதனாலேயே மற்ற மூவருக்கும் செல்லமாக மாமா! அவன் மனைவி வேறு ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை. இவனுக்கு சென்னையில் வேலை. விடுமுறையில் மனைவியைப் பார்க்கச் சென்று திரும்பும் போது மட்டும் தேன் குடித்த நரியாட்டம் வருவான்.

ஜோலார்பேட்டை மோகனரங்கம் சுருக்கமாக ஜோமோ. விளம்பர நிறுவனத்தில் வேலையிலிருக்கிறான். அங்கேதான் கண்டான் அபி அல்லது அபிக்குட்டி அல்லது அபிலாஷாவை. அவன் முதன் முதலில் கண்டது ஆடையில்லாமல். கடவுளே கடவுளே ரீதியில். அதுவும் அவனது அலுவலகத்தின் ஸ்டூடியோவிலிருக்கும் ஒரு தட்டு முட்டுச் சாமான்களிருக்கும் அறையில். கண்டதும் காதல். ஆனால், அவள் வீட்டிற்குச் சென்று சம்பந்தம் பேசிய போது மட்டும் சரியாகக் காணாமல் அவளது வீட்டு வேலைக்காரியை சம்பந்தம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். காரணம் பெயர்க்குழப்பம். அவளது பெயர் அபிராமி.


அரிஸ். கணிதப் பேராசிரியன். ஒரு புத்தகம் படிக்க நூலகத்தையே வாங்க வேண்டுமா என்று லட்சியத்தோடு வாழ்பவன். அவனை ஹவுஸ் ஓனரம்மாவின் மகள் லின்னி (வயசு பதினெட்டாகிறதென்று நினைக்கிறேன்), கணக்கு டியூசன் படிக்கிறேன் பேர்வழி என்று கணக்குப் பண்ணுகிறாள். அரிஸ் கணக்கு மட்டுமா கற்றுத் தந்தான். உலகத்திலுள்ள எல்லா ‘பி’ கிரேட் நாவலையும் வாசிக்கக் கொடுத்தான். அடல்ஸ் ஒன்லி கவிதை வாசித்தான். அவள் பின்னால் நின்று அணைத்துக் கொண்டு கிதார் நரம்புகளை மீட்டினான். அதில் அவள் வயதுக்குண்டான நரம்பும் சேர்த்து மீட்டியது. பாவம் அரிஸ். அவனைப் பொறுத்தவரை காதல் கத்திரிக்காய், பெண் சகவாசமெல்லாம் சுத்த ஹம்பக். அவன் சகஜமாகத்தான் பழகினான். ஆனால் வந்தது வினை.

கிட்டா. கிருஷ்ணமூர்த்தியின் சுருக்கம். மெடிக்கல் சேல்ஸ் ரெப். மாதத்தில் பாதி நாள் சுற்றுப் பயணத்திலேயே இருப்பான். அப்படி ஒரு முறை மங்களூர் போய் வந்ததில் கான்ஸ்டபிள் ‘கத்தரிக்கோல்’ கஸ்தூரியுடன் காதல். அதுவும் இவன், ஒரு பிராத்தல் கேஸ் ரைடில் அவளிடம் மாட்டிக் கொண்டபோது.

மேற்கண்ட அத்தனை கதாபாத்திரங்களும் மேல் மேற்சொன்ன ஒரே வீட்டில் வந்து பாத்திரங்களை உருட்டினால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருந்தது இந்த “ஆதலினால் காதல் செய்வீர்” நாவலை வாசிக்கும் போது. செம காமெடி நாவல். எழுதியவர், சாட்சாத் சுஜாதா அவர்களே தான். அவர் எத்தனையோ கட்டுரைகள், நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அறிவியல் கதைகளில் பின்னி எடுத்திருப்பார் என்பது நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. அவர் காமெடி ஜானரில் எழுதியதாக நான் இதுவரை கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. பாலக்காடு டு வேலூர் அப் அண்ட் டவுன் இந்த நாவலை ரயிலிலும் பேருந்திலும் வாசித்துக் கொண்டிருந்த போது என்னைப் பார்த்தவர்கள் ‘யாரிவன் சரியான லூஸா இருப்பானோ?’ என்று நினைக்குமளவு நான் பத்திக்கொரு முறை தனியாக விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

இதற்கு மேல் இந்தக் கதையை நான் சொன்னால் சில சிரிப்பு ட்விஸ்ட்டுகளின் சுவாரஸியம் குறையலாம் என்பதால், இம்மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.


Kingsman: The Secret Service (2014)



Kingsman: The Secret Service (2014)

Action / Comedy


பத்து பேர், ஒற்றர்களாக (SPY) பயிற்சியெடுக்க ஒரே அறையில் தங்க வைத்திருக்கிறார்கள். திடீரென்று அந்த அறைக்குள் தண்ணீர் நுழைந்து அதன் நீர் மட்டம் அந்த அறையின் சீலிங் வரை பரவுகிறது. உயிர் தப்பித்தாக வேண்டும். பாதி உறக்கத்தில் திடுக்கிட்டு விழித்து குழப்பத்தில் என்ன செய்கிறோமென்று புரிவதற்குள் மூழ்கி விடுகிறார்கள்.

கதவு?

ம்ஹும் திறக்க மாட்டேன் என்கிறது. அந்த அறையிலிருக்கும் ஷவரைப் பிடுங்கி டாய்லெட் சின்கிற்குள் நுழைத்து தற்காலிகமாக ஆக்ஸிஜன் எடுத்து சுவாசிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது அதிக நேரம் தாங்காது. வெளியேறியே ஆக வேண்டும். அந்த பத்தில் ஒருவன் மட்டும், தப்பிக்கிறான். எப்படி?

மற்றவர்களின் கதி என்னவாகியிருக்கும்?

அதாவது தூக்கத்திலிருக்கும் போது உயிருக்கு ஆபத்து வந்தாலும் ஒற்றன், தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடக்கும் முதற்கட்ட சோதனை அது.

அடுத்த முக்கியமான சோதனை ஒன்றில், பாராசூட் சகிதம் விமானத்திலிருந்து இறக்கிவிடப்படுகிறார்கள். வானில் சுதந்திரமாக மிதந்து கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கும் போது, அவசர அறிவிப்பு ஒன்று வருகிறது. பத்துப் பேரில் ஒரு சிலரின் பாராசூட் மட்டும் வேலை செய்யவில்லை. முடிந்தால் உயிர் பிழைத்துக் கொள்ளவும் என்று. அந்த சோதனையில் தன்னுடைய பாராசூட் வேலை செய்தாலும் செய்யா விட்டாலும், மற்றவர்களையும் காப்பாற்றும் தன்மை இருக்கிறதா என்று நடத்தப் பட்ட சோதனை அது.

இதில் எத்தனை பேர் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது?

இப்படி அடுக்கடுக்கான சோதனைகளில் தோல்வியடைபவர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். அல்லது இறந்து போகிறார்கள். கடைசியில் எஞ்சியிருப்பது மூன்றே பேர். அவர்களும் தங்களது முதல் உளவுப் பணியில் மயக்கமடைந்து எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றனர். விழித்துப் பார்க்கையில் பாதாள ரயில் தண்டவாளத்தில் கட்டி வைக்கப்பட்டிருப்பது புரிகிறது. உடன் இருந்தவர்கள் கொல்லப்பட்டு விட்டனரென்றும், தங்களது உளவு நிறுவனத்தைக் காட்டிக் கொடுத்தால்தான் உயிர் பிழைக்க முடியுமென்றும் மிரட்டப் படுகிறார்கள்.

இங்கேதான் ஒரு ட்விஸ்ட்...

அதுவும் அந்த உளவு நிறுவனத்தின் முக்கியமான சோதனைகளில் ஒன்று. உயிருக்கு பயந்து ரகசியங்களை உளறி விடக்கூடாது என்பதற்காக ஆட்களை வடிகட்டும் முறைகளில் ஒன்று அது.

கடைசி சோதனை.

பயிற்சிக் காலத்தின் ஆரம்பத்தில் ஆளுக்கு ஒரு உயர் ரக நாய் தரப்பட்டிருக்கும். அதற்கு ட்ரெய்னிங் கொடுத்து வளர்க்க வேண்டும். பயிற்சி நடந்த சில மாதங்களில் அந்த நாய்கள், அவர்களின் நண்பனாக மாறியிருக்கும். அல்லவா? 'அவ்வளவுதான். உங்களது சோதனைக் காலம் முடிந்து விட்டது. இந்தா துப்பாக்கி. இனி அந்த நாய் உனக்கு தேவையில்லை. அதை சுட்டு கொன்று விடு' என்று உத்தரவிடப்படுகிறது. சுட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் வேலை காலி. அந்த நாய் பரிதாபமாய் தனது எஜமானனைப் பார்க்கும். உயிர் நண்பனை சுடப் போகிறாயா என்பது போல.

இங்கேயும் ஒரு ட்விஸ்ட். சிக்கலான சூழ்நிலையில் ஒற்றனாகப் பட்டவன் எந்த மாதிரியான வாய்ப்புக்களை பயன்படுத்துகிறான் என்று கண்டறிய நடத்துப்படும் சோதனையின் கடைசிக்கட்டம் அது.

நான் இதுவரை வாட்ச்சிங் மூவி ஸ்டேட்டஸ் போட்டதோடு சரி. எந்தப் படங்களைப் பற்றியும் வாய் திறப்பதில்லை. இந்தப் படத்தை பார்க்கும் போதே இதன் கதையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. ஆகவே இந்தப் பதிவு. இல்லை. மேற்கூறியவைகள் கதை அல்ல. படத்தில் வரும் சில காட்சிகள். அவ்வளவே!

எக்ஸ் மென் : ஃபர்ஸ்ட் க்ளாஸ் படத்தின் இயக்குனர் என்பதால்தான் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அதிலிருந்த ரிச்னஸ் இதிலும் இருக்கிறது. நண்பர்கள் இந்தப் படத்தை தவர விட வேண்டாம் என்று பரிந்துரைக்கிறேன். தைரியமாக குடும்பத்தோடு பார்க்கலாம். டாட்

அப்புறம் ஒரு முக்கியமான விசயம். இந்த சோதனையெல்லாம் முடிஞ்சு கடைசியில நம்ம ஹீரோ மட்டும் எல்லாத்துலயும் பாஸாகிடுவாருன்னு தப்புக் கணக்கு போட்டுடாதிங்க. அவரு பெயிலு. அந்த ஊர்லயெல்லாம் சமச்சீர் கல்வித் திட்டம் இல்ல போல. ஆங் 

Goodnight Mommy (2014) - ஜெர்மன்



Goodnight Mommy (2014)

ஜெர்மன்
Horror / Thriller


இலியாஸ் மற்றும் லூக்காஸ் இருவரும் ரெட்டை சகோதரர்கள். தன் தாயுடன் அவர்களது பண்ணை வீட்டில் வசிக்கின்றனர். அவர்களது தாயார் முகத்தில் ப்ளாஸ்ட்டிக் சர்ஜரி செய்து அந்த கட்டுகளோடு இருக்கிறாள்.
அந்தக் கட்டுகளுக்குள் இருப்பது தங்களது தாயாரின் முகமல்ல என்பது அவர்களது சந்தேகம். அந்த சந்தேகம் வலுப் பெறுவது போல அவள் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகப்படியான கடுமையாக நடந்து கொள்கிறாள். நடுக் கூடத்தில் மீன் தொட்டியில் மீன்களுக்கு பதிலாக கரப்பான் பூச்சி வளர்க்கிறார்கள் சிறுவர்கள். அதுவும் கொச கொசவென. வெளியே காட்டிற்குள் எந்த சிறிய உயிரினங்களைக் கண்டாலும் வீட்டிற்குள் அடைத்து வளர்க்க நினைப்பதை கண்டிக்கிறாள் அவர்களது தாய்.
அதனால் அவள் மீது காண்டாகும் லூக்காஸ், அவள் தூக்கத்தில் இருக்கும் போது கரப்பான் பூச்சியில் ஒன்றை அவளது வாய்க்குள் திணிப்பது, பின்பு அவளது வயிற்றைக் கிழித்து அதற்குள் இருக்கும் கரப்பான்பூச்சிகளை வெளியேற்றுவது என தண்டனை தரப் போவதாக கற்பனை செய்து பார்க்கிறான்.
சில நாட்களில், கட்டுகளை களைந்து பளபளப்பான தனது முகத்துடன் தனது மகன்களிடம் இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டு நிற்கிறாள். ஆனால், அவர்களோ இவள் தமது தாயாரே அல்ல என, அவளது பழைய போட்டோக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தங்களது சந்தேகத்தை ஊர்ஜிதமாக்கிக் கொள்கின்றனர்.
அடுத்த நாள் காலையில் கண் விழித்தவளால் தனது கை கால்களை அசைக்க முடியவில்லை. கட்டிப் போடப் பட்டிருக்கின்றது என்பதை உணர்கிறாள். அதுவும் தனது படுக்கையிலேயே. சிறுவர்களின் சந்தேகம் தான் காரணம். அவள் தங்களது தாயல்ல என்றும் அவளை மிரட்டி அவளை இவள் எங்கே மறைத்து வைக்கிறாள் என்றும் மிரட்ட ஆரம்பிக்கின்றனர்.
இது அனைத்துமே ich seh ich seh (2014) என்ற ஜெர்மானிய திரைப்படத்தின் முதல் அரை மணி நேரக் கதை. ஆங்கிலத்தில் Goodnight Mommy என்கிற சப்டைட்டிலுடன்.
அதற்கு மேல் படத்தில் நடந்தவை அத்தனையுமே விபரீதங்களே... நிச்சயமாக குழந்தைகளுடன் பார்ப்பதைத் தவிர்க்கவும். அது பல (பலான அல்ல) துஷ்ட சம்பவங்களுக்கு வழி வகுக்கும். ஆனால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

Wednesday, April 22, 2020

Door Lock (2018) - கொரியன்




Door Lock (2018)
கொரியன்
Drama / Thriller

க்யூங் ச்சோ மின், ஒரு வங்கியில் பணி புரியும் எக்ஸிகியூட்டிவ். தனியாக ஒரு ப்ளாட்டில் வசித்து வருகிறாள். அவளுக்குத் தன்னை யாரோ எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டே இருப்பதைப் போலவும், எப்போதும் தன்னுடன் யாரோ இருப்பதைப் போலவும் ஒரு இன்செக்யூரான உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.

இரவு பணி முடிந்து ப்ளாட்டிற்கு வரும்போது தனியாகத்தான் லிப்ட்டில் வருவாள். ஆனால், அவளோடு யாரோ உடன் பயணிப்பதைப் போலவே நினைத்துக் கொண்டும் பயந்து கொண்டும் இருக்கிறாள்.

அவளது வீட்டின் கதவில் உள்ளது ஒரு நம்பர் லாக் பூட்டு. கிட்டத்தட்ட Flip Open cordless phone model போல இருக்கும். அதை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் ஏற்கனவே யாரோ திறக்க முயற்சித்திருப்பதைப் போலவே அவளுக்குத் தோன்றும். அந்த பில்டிங் ஜானிட்டரை அழைத்துக் கேட்ட போதும் அவன் யாராவது குடித்து விட்டு இந்த மாதிரித்தான் எல்லா வீட்டுப் பூட்டையும் தவறுதலாகத் திறக்க முயற்சித்துவிட்டு சென்று விடுவார்கள். பயப்பட ஒன்றுமில்லை என்று கூறுகிறான்.

ஒருநாள் அவள் வீட்டின் உள்ளே நுழைந்து கதவைச் சாத்திய சில நிமிடங்களில் யாரோ கதவை பலமாகத் திறக்க முயற்சி செய்கிறார்கள். யார் என்கிற இவளது கேள்விக்கும் கதவின் மறுபுறம் இருந்து பதிலெதுவும் வரவில்லை. கதவின் Peep hole வழியாக பார்த்தபோது அங்கே எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுக்கத்துடனே கதவைத் திறந்து பார்த்தால் அந்தக் காரிடாரிலேயே எவரும் இருக்கவில்லை. ஆனால், இவளது கதவின் முன்பு ஒரு சிகரெட் துண்டு கிடக்கிறது. அதை எடுத்துக் கொண்டு போலிஸிடம் புகார் செய்கிறாள். ஆனால், சாட்சியங்களோ, சேதமோ, களவோ எதுவுமில்லாததால் அவர்கள் கம்ப்ளைண்ட் எடுக்க மறுத்து விடுகிறார்கள்.

இது ஒருமுறையல்ல. பலமுறை.

இவளது வங்கியில், பணமிட வரும் வாடிக்கையாளர்களிடம் குழைவாகப் பேசி இன்ஸ்யூரன்ஸ் விற்க வேண்டும். அதுதான் அவளது வேலை. அப்படி ஒருநாள் ஒரு வாடிக்கையாளரிடம் பேசுகையில் இவள் தன்னை Flirt செய்வதாக எண்ணி அவன் காபி ஷாப்பிற்கு அழைத்து, இவள் வரமாட்டேன் என்று சொல்லி பெரிய சீனாகி விடுகிறது. அதன் பிறகு அவன் இவளை வெளிப்படையாகவே பின்தொடர ஆரம்பித்து அடிக்கடி இவளிடம் வந்து கையைப் பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளில் மிரட்டுகிறான்.

அப்படி ஒருசமயம் அவன் மிரட்டிக் கொண்டிருக்கையில், இவளது மேனேஜர் அந்த வழியாகக் காரில் சென்று கொண்டிருந்தவர் இவளைப் பார்த்து இறங்கி வந்து காப்பாற்றி அழைத்துச் சென்று வீட்டில் விடுகிறார். அவள் வீடு நுழைந்து சில நொடிகளில் எப்போதும் போல தடதடவென கதவு தட்டப்படும் ஓசை. யாரென்று பார்த்தால், அவளது மேனேஜர். இவளது மணிப்பர்சை காரில் மறந்து விட்டுவிட்டதை தருவதற்காக வந்திருந்தார். மேலும் தான் கைகளைக் கழுவ வேண்டும் என அவளது பாத்ரூமை உபயோக்க வேண்டும் என்று கேட்கிறார். இவள் தயக்கத்துடனே உள்ளே அனுமதிக்கிறாள்.

அவர் கைகழுவிக் கொண்டிருக்கும்போது தான் இவளுக்கு ஒன்று உறைக்கிறது. தான் இந்த பில்டிங்கில் வசிப்பதே இவருக்கு இப்போதுதான் தெரியும். ப்ளாட் எண்ணை இவள் சொல்லியிருக்கவில்லை. எப்படி இவர் சரியாக நம் ப்ளாட்டிற்கு வந்தான் என்று சந்தேகம் வரவே, இதை அவரிடமே கேட்டும் விடுகிறாள். அவர் அதற்கு பதில் சொல்லத் திணற ஆரம்பித்த சில நொடிகளில் இவளுக்கு விசயம் புரிந்து விடுகிறது.

அவரை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு குடுகுடுவென ஓடிப்போய் போலிஸை அழைத்து வருகிறாள். கதவைத் திறந்து பார்த்தால், கதவில் அவனது கழுத்திலிருந்து டையால் (Tie) கட்டி வைத்தபடி அவர் இறந்து போயிருக்கிறார். உடலெல்லாம் ரத்தம். யாரிடமோ போராடித் தோற்றுப் போய் பரிதாபமாய் இறந்திருக்கிறார். உண்மையில் யாரோ அவரை பலமாகத் தாக்கிக் கொன்றிருக்கிறார்கள்.

போலீஸ் இவளை நாடகமாடுகிறாள் என்று அரெஸ்ட் செய்கிறது. ஆனால், இவள் அந்தக் கொலையைச் செய்யவில்லை. செய்தது யார்? இவளது பயம் உண்மையா? நாடகமா? உண்மையில் இவள் பயப்படுவது போலவே உண்மையில் யாராவது இருந்தால், அது யார்? அவன் ஏன் இப்படி இவளைப் பின் தொடருகிறான் என்பதை Door Lock (2018) என்கிற கொரியன் படத்தில் காண்க.

ஆக்சுவலாக இது ஸ்பானிஷ் படமான Sleep Tight (2012) இன் அதிகாரப்பூர்வ ரீமேக். 



அதற்காக படத்தை அப்படியே ஃப்ரேம் பை ஃப்ரேம் ரீமேக் செய்யவில்லை. அந்தக் கதையைத் தழுவி, அதிலிருக்கும் முக்கியமான Theme-ஐ மட்டும் எடுத்து கொரியன் ஸ்டைலில் மிரட்டியிருக்கிறார்கள். ஷ்பானிஷ் படத்தைப் பார்த்திருந்தாலும், இது மொத்தமாக வேறு கதை என்பதால் கடைசி வரை அதே திரில். என்னைக் கேட்டால் அதை விட சிறப்பாக எடுத்திருக்கிறார்கள் என்று கூறுவதை விட, இரண்டுமே வேற வேற லெவல் என்று கூறுவேன்.

கிளைமேக்ஸிற்கு முன்பு திக்கென்ற ஒரு திகில் சீன் இருக்கிறது. பார்ப்பவர்களை டர்ராக்கி விடும்.

கண்டிப்பாக பார்க்கலாம். குழந்தைகள் தவிர்க்கவும்.

Now You See Me (2013) & (2016)




திகட்ட திகட்ட ஒரு பிரம்மாண்டமான மேஜிக் ஷோ பார்த்த அனுபவம் கிடைத்தால் எப்படியிருக்கும்? அதோடு சேர்த்து கண்கட்டு வித்தைகளும், திடீர் திடீர் ட்விஸ்ட்டுகளும் இருந்தால்? போனஸாக, ஒவ்வொரு முறை அந்தப் படத்தைப் பார்க்கும்போதும் ஒவ்வொரு மாதிரியான வித்தியாசமான பர்ஸ்பெக்ட்டிவ்வில் படம் நம்மை அசத்தினால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு படம்தான் Now You See Me (2013).

முதல் முறை பார்க்கும் போது Four Horsemen நடத்தும் மேஜிக் ஷோவின் ஆடியன்சாக

இரண்டாவது முறை அதில் மறைந்திருக்கும் ஐந்தாவது நபராக

மூன்றாவது முறை Four Horsemen செய்யும் தந்திரங்களை உடைத்து உலகுக்கு அறிவிக்கும் மார்கன் ப்ரீமேனாக

நான்காவது முறை அந்த Four Horsemen ஆகவே மாறி படத்தோடு ஒன்றிப் போயிருப்போம்.

இதெல்லாம் முதல் பாகத்தை பார்த்த போது ஒவ்வொரு முறையும் கிடைத்த புதுப் புது அனுபவங்கள். இதுதான் படத்தில் மறைந்திருக்கும் ரகசிய லேயர்கள். இதுதான் இந்தப் படத்தோடு ரிலீஸாகியிருந்த Man of Steel, Fast and Furious 6, Iron Man 3, Star Trek into Darkness படங்களின் வசூலுக்கு நிகராக இருந்து வெற்றி பெற வைத்தது.

உண்மையில் இது ஒரு ரிவென்ஞ் மூவி. ஆனால், ஆரம்பத்திலிருந்தே படம் பார்க்கும் நமது கண்கள் கட்டப்பட்டு அதற்கான க்ளூஸ் இருந்தும் கிளைமேக்ஸ் வரை வேறு பாதையில் நம்மை டைவர்ட் செய்து இறுதியில் நம்மை டேய் இது அத்தனையும் இவனை பழிவாங்கறதுக்குத்தானாடா என்று உணர வைத்து அட போட வைத்திருக்கும்.

சில லாஜிக் பொத்தல்களை மறந்து விட்டு (உண்மையில் அது படம் முடிந்த பின்புதான் நமக்கே எதெல்லாம் லாஜிக் பொத்தல்களென்று புரியும்) பார்த்தால் இது நிச்சயமாக சூப்பர் மேஜிக் ஷோ. ஒவ்வொரு ஃப்ரேமும் நம்மை அசத்திக் கொண்டே இன்னொரு வியப்புக்குள் தள்ளிக் கொண்டிருக்கும். அந்த பிரம்மாண்ட மேஜிக் ஷோக்கள் மட்டுமின்றி, படத்தின் பிரதான நான்கு கதாபாத்திரங்கள் செய்யும் சில மேஜிக் ட்ரிக்குகள்தான் படத்தையே நகர்த்தும் சுவாரஸ்யங்கள்.

The closer you think you are, the less you'll actually see.

அது உண்மைதான். நாம் என்னென்னவெல்லாம் உண்மையென்று நம்பி பார்க்கிறோமோ அதெல்லாம் உண்மையில்லை. உண்மையில் நாம் எதையும் சரியாகப் பார்க்கவேயில்லை. பெருமாளே இல்லிங்க. அப்புறம் எப்பிடி பெருமாளுக்கு மகன் இருப்பான்கற மாதிரி.

நான்கு நபர்கள் அமெரிக்காவின் நான்கு பகுதிகளில் தாந்தோன்றித்தனமாக மேஜிக் என்ற பெயரில் ஊரை ஏமாற்றி பணம் சாம்பாதிக்க செய்யும் ட்ரிக்குகளையும், அவர்களையும் ஒருவன் மறைந்திருந்து கவனித்துக் கொண்டே இருக்கிறான். அந்த நான்கு பேருக்கும் தன் முகத்தைக் காட்டிக் கொள்ளாமலேயே Tarot card மூலம் ரகசிய அழைப்பை விடுக்கிறான். அவர்கள் நால்வரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். ஒரு வருடம் கழித்து அந்த நான்கு பேரும் இணைந்து Four Horsemen என்ற பெயரில் மூன்று பிரண்டமான மேஜிக் ஷோவின் முதல் காட்சியை அரங்கேற்றுகிறார்கள். பாரிஸிலுள்ள ஒரு பேங்குக்கு நியூ யார்க்கில் நடைபெறும் இந்த மேஜிக் ஷோவிற்கு வந்திருக்கும் யாரோ ஒரு நபரை ரேண்டமாக தேர்ந்தெடுத்து டெலிபோர்ட்டேசன் மூலமாக அனுப்பி, அங்கே லாக்கரில் புதியதாக அச்சடித்து அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பணக்கட்டுகளை ஷோ நடக்கும் நியூ யார்க் அரங்கிற்குள் பண மழையாக பெய்ய வைக்கிறார்கள். அது எப்படி சாத்தியம்? இது மிகப்பெரிய கிரைம் அல்லவா? போலீஸ் புடிக்காதா? என்று நமக்கெல்லாம் தோன்றும் அதே நேரத்தில் FBI அவர்களைக் கைது செய்கிறது. ஆனால், அவர்களால் அந்தப் பணத்தை அவர்கள் கொள்ளையடித்ததாக நிரூபிக்க முடிவதில்லை. இப்படியே படம் முழுக்க மூன்று பிரம்மாண்ட மேஜிக் ஷோக்களும் அரங்கேற்றப் படுகிறது. கையும் களவுமாக பிடிக்க முடியாமல் FBI திணறுகிறது. இவர்கள் எப்படி இந்த மாதிரி சாத்தியமேயில்லாத மேஜிக்குகளை அற்புதங்களாக நிகழ்த்துகிறார்கள் என்பதற்கான விளக்கமும், சில சேஸிங்குகளும், மந்திர தந்திர சாகசங்களும், எக்கச்சக்கமான ட்விஸ்ட்டுகளும் கொண்டதுதான் மீதிக் கதை.

இறுதியில் ஒரு வில்லன் பழிவாங்கப் படுகிறான். அத்தோடு முதல் பாகம் முடிவடைகிறது.


Now You See Me 2 (2016)



மீண்டும் அதே வாசகங்கள். The closer you think you are, the less you'll actually see.

கொஞ்சம் மாற்றி If you think you’ve seen it all, take another look.

அடப்பாவிங்களா, ஃபர்ஸ்ட் பார்ட்ல பார்த்த எல்லாமே கப்சாவா, எதுவுமே உண்மையில்லையா? என்று நம்மை புலம்ப வைக்குமளவிற்கு நம் கண்ணைக் கட்டி ஏமாற்றியிருப்பார்கள். முதல் பாகத்துல நீங்க வில்லனா பார்த்திங்களே அவரு வில்லனில்ல. முதல் பாகத்துல நீங்க அஞ்சாவதா ஒரு ஆளை மறைஞ்சிருந்து எல்லா ட்ரிக்கையும் செய்ய வைப்பாரே அவரு உண்மையில அதைச் செய்யல. அவரும் கண்காணிக்கப் படுபவரே.

போன முறை இவர்களால் பழிவாங்கப்பட்ட ஒரு ஆள் மீண்டும் தன் மகனோடு வந்து இவர்களை பழிவாங்குகிறார். இந்த மாதிரி ட்ரிக் செய்யும் நபர்களின் வசத்தில்தான் மொத்த ஷோவும் இருக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் அசிங்கமாகி விடும். அதை நன்கு தெரிந்த அந்த வில்லன் ஏற்கனவே இவர்களோடு இருந்த அனுபவத்தில் இவர்களைக் கடத்துகிறான். அந்த வில்லனாக பேட்மேன் படத்தில் வரும் ஆல்ப்ரெட் தாத்தா மைக்கெல் கெய்னும், அவரது மகனாக மந்திர தந்திர ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் படித்த ஹாரி பாட்டர் டேனியல் ராட்க்ளிப்பும். டேனியை வில்லனாகக் சித்தரித்ததை மட்டும்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முதல் பாகத்தில் நடந்த கொள்ளையடிக்கும் ட்ரிக்குகளை விட அசத்தலான ஒரு ட்ரிக் இதில் இருக்கிறது. அதுவும் ஒரே ஒரு சீட்டுக் கட்டு அட்டையை வைத்து. படத்தின் நீளமான காட்சியும் இதுதான். மொத்தம் பத்து நிமிடங்கள் அந்த ஒரே ஒரு அட்டையை வைத்து. அதைப் பற்றி நோ மூச்!

இதன் மூன்றாவது பாகம் கண்டிப்பாக வரும். ஏனென்றால், இதன் வசூல் அப்படி.

இது ஒரு முறை மட்டும் பார்ப்பதற்கான சீக்குவல் இல்லை என்பதை படம் பார்த்தால் உணர்வீர்கள்.


Tuesday, April 21, 2020

Svaha: The Sixth Finger (2019) - கொரியன்




Svaha: The Sixth Finger (2019)
கொரியன்
Mystery / Thriller

ரு பிரசவம். தாயின் வயிற்றுக்குள்ளிருந்து வெளிவந்த குழந்தையின் வலது காலை யாரோ கொடூரமாகக் கடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த அனைவருக்கும் ஒருவித பயம் வந்து தொற்றிக் கொள்கிறது. உண்மையில் பிறந்தது ஒன்றல்ல. இரட்டை. முதலில் வெளிவந்த குழந்தையை தந்தையிடம் காட்ட மறுத்து விடுகிறார்கள். அது அவ்வளவு கொடூரமாக, கோரைப் பற்களுடனும் உடலெல்லாம் நீண்டு வளர்ந்த முடியுடன் இருக்கிறது. அதைப் பிறந்தவுடன் பார்க்க சகிக்காமல், துணியைப் போர்த்தி மூடி வத்து விடுகிறார்கள். இதுதான் அந்த மற்றொரு குழந்தையின் காலைக் கடித்து சதையை குதறியிருக்கிறது. தாயின் வயிற்றுக்குள்ளே! இரண்டும் பெண் குழந்தைகள்.

அது இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என்றும், அது ஒரு சாத்தான் ஆகையால் யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடுமாறும் தந்தையிடம் கூறுகிறார்கள். ஆனால், அது சாகவில்லை. ஒரு வாரம் கழித்து அதன் தாய் இறந்து போகிறாள். சிலநாட்கள் கழித்து அதன் தந்தையும் தற்கொலை செய்து கொள்கிறான்.

இரண்டு குழந்தைகளையும் அதன் பாட்டனும் பாட்டியும் வளர்க்கிறார்கள். ஒன்று ஊருக்குத் தெரிந்து. மற்றொன்று unregistered child. அப்படி ஒரு குழந்தை இருப்பதே இவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

ஆனால், அவர்களை அந்த ஊர்மக்கள் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. அரசல் புரசலாக அந்த குழந்தையின் உருவ அமைப்பு பற்றி சில வதந்திகள் இருப்பதாலும், அந்தக் குழந்தை எந்த ஊரிலெல்லாம் குடிபெயருகிறதோ அங்கெல்லாம் சிறுமிகள் காணாமல் போவதும் தொடருவதால், ஊரார் அவளைக் கொல்லவும் முயற்சிக்கிறார்கள்.

அவளை வீட்டின் பின்புறத்தில் ஒரு அறையில் சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பதாகவும், ராத்திரியானால், நாய்கள் கோரமாக ஊளயிடுவதாலும், ஆடுகளும் மாடுகளும் நின்ற இடத்திலேயே பொத் பொத்தென்று கீழே இறந்து போவது வாடிக்கையானதாலும், அவளைக் கொல்வதென ஊரார் தீர்மானிக்கின்றனர்.

ஆனால், நாள்பட அவளது சக்திகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவளை அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடிவதில்லை. அவளது அறைக் கதவை நெருங்கும் முன்னரே எக்கச்சக்கமாக பாம்புகளை ஏவி விடுவாள். அவைகள் இவளது அறைக் கதவுக்கு சில அடி தொலைவிலேயே வருபவர்களைக் கடித்துக் கொன்றுவிடும்.

இதனால், ஊரார் அமைதியாக அந்த வீட்டை விட்டு வெகுதூரம் நகர்ந்து சென்று வாழ்கின்றனர்.

ச்யோல்-ஜின், ஒரு கான்க்ரிட் லாரி டிரைவர். அவன் ஒருநாள் இரவு வீட்டுக்கு வந்தபோது, அவனது நண்பன் ஜியோங் ந-ஹான் வந்திருந்தான். அவனிடம் தான் மிகவும் பயந்திருப்பதாகவும், நாம் கொல்லும் குழந்தைகள் இரவில் வந்து அவனிடம் அலறுவதாகவும், அவன் கூறுகிறான். அதற்கு ஜியோங், உனது தாயின் சூடான உணவு உன்னைக் கோழையாக்கி விட்டது. நீ உன் உயிரை மாய்த்துக் கொள். மீதி வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு செல்கிறான்.

பாஸ்டர் பார்க், மற்ற பாதிரியார்கள் போல சுவிசேஷ கூட்டங்கள் நடத்தி பாவமன்னிப்பு தரும் நார்மல் பாதிரியார்கள் அல்ல. மதத்தின் பெயரால் போலியாக மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் திருட்டு மற்றும் போலிச் சாமியார்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதுதான் அவரது வேலை. கிட்டத்தட்ட ஒரு டிடெக்ட்டிவ் மாதிரி.

அப்படி ஒரு புத்த மத சாமியாரினி ஒருவரை டார்கெட் செய்யும் போது, சில விநோதமான ஒரு வரலாறு பற்றித் தெரிய வருகிறது. அதில் புத்தரைச் சுற்றி நான்கு இந்திய தேவர்களும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாத்தானைக் கொல்வதாகவும் படங்களும் அதன் வரலாரு கொண்ட ஒரு புத்தகமும் கிடைக்கிறது.

உண்மையில், புத்த மதத்தில் சாத்தான்களே கிடையாது. இது யாரோ இடைக்காலத்தில் எழுதியது. ஆனால், அதில் எழுதியிருப்பது போல ஒரு ரகசியக் கூட்டம் உண்மையில் இயங்கி வருவதையும், அவர்கள் கொலைகளைத் தொடர்ந்து செய்து வருவதையும் பார்க் கண்டுபிடிக்கிறார்.

ஆனால், அவர்கள் எங்கிருக்கிறார்கள்? யாரந்த புத்த முனிவர்? அவரைப் பாதுகாக்கும் நான்கு ராஜாக்கள் யார்? ஒரு க்ளூவும் இல்லை.

சியோலில் உள்ள ஒரு டனல் (Tunnel) வாயில் சுவற்றில் ஒரு பிணம் புதைக்கப்பட்டது போலிஸிற்கு தெரிய வருகிறது. அதை உடைத்து எடுத்தபோதுதான் அது ஒரு சிறுமியின் உடல் என்று தெரிய வருகிறது. அவளது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தபோது, அவளது வாய்க்குள் சில மந்திரித்த பீன்ஸ்களும், ஒரு தாயத்தும் வைத்து எதோ மதச்சடங்கைப் போல பலி கொடுத்திருப்பது தெரிய வருகிறது.

அந்தச் சிறுமி யார்? அவளைக் கொன்றது யார்? பாஸ்டர் பார்க்கின் கதை என்னவானது? அந்த நான்கு ராஜாக்களை நெருங்கினாரா? ச்யோல்-ஜின் என்னவானான்? தனது உயிரை மாய்த்துக் கொண்டானா? அந்த இரண்டு பெண் குழந்தைகள் என்னவானார்கள்? என்பதை Svaha: The Sixth Finger (2019) படத்தில் காண்க.

படம் ஆங்காங்கே மெதுவாகச் செல்வது போலத் தோன்றினாலும், வொர்த்து தான். ஹாரர் படமாக இருந்தாலும், அடிக்கடி பின்னால் வந்து நின்று பயமுறுத்தும் பேய்களோ, பழிவாங்கும் ஆவிகளோ இல்லை. ஆனாலும் பயப்பட வைத்திருக்கிறார்கள். உண்மையில் கதையைமிஸ்டீரியஸாகவும், ஒரு டிடெக்ட்டிவ் நாவலைப் போலவும் நகர்கிறது.

கொரியன்களின் மண்டைக்குள் மட்டும் எப்படி இத்தனைக் கதைகள் உதிக்கிறது? அதுவும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக? ஆச்சரியமான மண்டையர்கள்.

கண்டிப்பாகப் பார்க்கலாம். நெட்ப்ளிக்ஸில் அவைலபிள்.

Monday, April 20, 2020

Jurassic Park (1993) - ஹாலிவுட்டின் கதவு.




ஜுராஸிக் பார்க் என்கிற படம் 1993இல் வெளியானதுதான் பலருக்கு ஹாலிவுட் என்றொரு சினிமா உலகம் இருப்பதை உணர வைத்தது. பலருக்கு அதுதான் முதல் ஹாலிவுட் அல்லது முதல் ஆங்கில சினிமா. அதற்குப் பின்னர் ஆங்கில சினிமாக்களின் தொழில் நேர்த்தி மற்றும் அதன் வளர்ச்சியோடு சேர்ந்து நாமும் வளரத் தொடங்கி விட்டோம். இன்றெல்லாம் நாம் ஜானர் பிரித்து படங்களை பார்க்கும் அளவிற்கு வளர்ந்து அதற்கு ரிவ்யூ எழுதும் அளவிற்கு உயர்ந்து சாமானியனும் ரேட்டிங் கொடுக்கும் அளவிற்கு மாறி நிற்கிறோம். ஆனால், இத்தனைக்கும் ஹாலிவுட் என்கிற கதவைத் திறந்து நம்மை உள்ளிழுத்துக் கொண்ட ஒரு வாசல் ஜுராஸிக் பார்க்-காகத்தான் இருக்கும். (பெரும்பான்மையானோருக்கு).

இந்த ஜுராஸிக் பார்க் முந்தானாள் கதையெழுதி நேற்று படமாக்கப் பட்டு, இன்று ரிலீஸான சாதாரணப் படம் அல்ல. உண்மையில் இதன் கதை 1993 லிருந்து சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் மைக்கெல் க்ரிச்டனின் (Michael Crichton) மூளையில் உதித்த ஒரு கரு. அதை அவர் எழுத ஆரம்பித்து முடிப்பதற்குள் பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன. அந்த நாவலின் மீது இம்ப்ரெஸ்ஸான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அதைப் படமாக எடுப்பதற்குள் படாதபாடு பட்டார் என்ற உண்மை இன்றளவிற்கும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மைக்கெல் க்ரிச்டன் இந்த நாவலை ரிலீஸ் செய்வதற்கு முன்னரே ஜுராஸிக் பார்க் படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. நாமெல்லாம் நினைப்பது போல படத்தில் வந்தது கிரிச்டன் எழுதிய கதை அல்ல. பிறகெப்படி அவருக்கு டைட்டிலில் கிரெடிட் கொடுக்கப்பட்டது?

உண்மையில் கிரிச்டன் எழுதிய கதையில் டைனோசர்கள் என்றொரு இனம் இருந்ததாகவும், அதை இன்ஜென் கார்ப்பரேசன் (InGen Corp) என்ற ஒரு பயாலாஜிக்கல் தொழிநுட்ப நிறுவனம் டெஸ்ட் டியூப் மூலமாக டினோசர்களை மறு உருவாக்கம் செய்கிறது. மேலும் டினோசர்கள் உலவும் ஒரு தீம் பார்க்கை ஹவாய் தீவில் நிறுவுகிறது. தீம் பார்க் என்றால் குழந்தைகளெல்லாம் அந்த பெரிய பெப்பெரிய கோவக்கார டி-ரெக்ஸ் மீது ஏறி சவாரி செய்வதாகவும் எழுதியிருந்தார்.

மொத்தமாக இதில் ஒரு இராம.நாராயணன் டச் தெரிகிறதா!

இதைத்தான் அவ்வளவு கஷ்டப்பட்டு இதற்கு கிரிச்டனும் டேவிட் கோயெப்பும் (David Koepp) இணைந்து திரைக்கதை எழுதி மிகப்பெரிய பட்ஜெட் செலவு செய்து படமெடுத்தனர். எடுத்தவரை எல்லா ரீலையும் ஓட்டிப் பார்த்த ஸ்பீல்பெர்க், ‘இது ஜெயிக்காதுஎன்ற உண்மையை உணர்ந்து எல்லா கோட்டையும் அழித்து மீண்டும் புதுதாக ஒரு திரைக்கதையை மாற்றி, ‘அது நம்மள நோக்கித்தான் வருது, எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்கபாணியில் ஒரு ஜுராஸிக் பார்க்கை எடுத்தார். அதுவும் ஒருமுறை அல்ல. இரண்டு முறை. அவர் இதை படமாக எடுத்து முடிப்பதற்குள் எத்தனை பிரச்சினைகளை சந்தித்தார் என்பதை ஒரு பட்டியலே இடலாம்.

அவை...

1) திரைக்கதை உரிமம்

ஜுராசிக் பார்க் என்கிற நாவலை மைக்கெல் க்ரிச்டன் எழுதி வெளியான போது அதன் உரிமையை வாங்குவதற்கான போட்டி பல ஸ்டூடியோக்களுக்கு இடையே கடுமையாக நிலவியது. Warner Brothers, Columbia Pictures, 20th Century Fox போன்ற ஸ்டூடியோக்களும், Tim Burton, Richard Donner, Joe Dante போன்ற இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது ஆர்வத்தை தெரிவித்திருந்தனர். இந்தப் ஆர்வப்போட்டிப் பட்டியலில் இன்னொரு நிறுவனமும் இருந்தது. இவர்களையெல்லாம் தாண்டி அந்த நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப் பட்டதன் பின்னால் ஒரு சிறு சம்பவம் உண்டு.

மைக்கெல் க்ரிச்டன் இந்த நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது இவரது ER என்கிற நாவலின் அடிப்படையில் ஒரு தொலைக்காட்சித் தொடர் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் ஒரு தயாரிப்பாளராக இருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் இந்த ஜுராசிக் பார்க் நாவலைப் பற்றி கூறியிருந்தார். அந்தக் கதையினைக் கேட்ட ஸ்பீல்பெர்க், இது சாதாரண மான்ஸ்டர்களின் கதையைத் தாண்டிய வேறொரு தளத்திற்கான கதை என்று தனது கருத்தினை தெரிவித்திருந்தார். அது க்ரிச்டனை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

இந்தக் கதை உரிமப் போட்டி நிலவிக் கொண்டிருந்த போதே யுனிவர்சல் நிறுவனம் ஒரு முடிவு செய்து வைத்திருந்தது. இந்தக் கதையின் உரிமம் கிடைத்து அதைப் படமாக்குவதானால், அதன் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மட்டுமே என்பதுதான் அது. ஏனென்றால், அதற்கு முன்னரே ஸ்பீல்பெர்க் யுனிவர்சல் நிறுவனத்திற்காக 24 படங்களில் இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும். பணியாற்றியிருந்தார். அதில் Jaws (1975), Raiders of the Lost Ark (1981), E.T. The Extra-Terrestrial (1982), Indiana Jones and the Temple of Doom (1984), Indiana Jones and the Last Crusade (1989), Hook (1991) போன்ற படங்களில் அவரது தொழில்நேர்த்தி அவகளை மிகவும் கவர்ந்திருந்தது. அதே போல ஒரு ஆடியன்ஸாக மைக்கெல் க்ரிச்டனையும் அது அவரது ரசிகனாக்கியிருந்தது. ஆகவே 5 லட்சம் டாலர்களுக்கு ஜுராசிக் பார்க் நாவலின் அடாப்ட்டேசன் உரிமம் யுனிவர்சல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

2) ஹவாய் தீவு

நாவலின்படி கதை கோஸ்டா ரிக்கா (Costa Rica) என்கிற தனித் தீவில் நடப்பதாகத் தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கான செலவுகளை விடவும், ஹவாய் தீவில் இருந்த ஒரு சிறு தனித் தீவான கவ்வாயில் (Kaua'i) படப்பிடுப்பு நடத்துவது பெருமளவு செலவுகளைக் குறைக்கும் என்பதால், அங்கே ஜுராசிக் பார்க் செட் அமைத்து படப்பிடிப்பு தொடங்கியது.

படத்திற்கான ப்ரீப்ரொடக்சன் வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட இரண்டு முழு வருடங்கள் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. அதில் டைனோசர்களின் சிஜிஐ உருவாக்கம் அதன் அசைவுகள், டைனோசர் டம்மிகள் போன்றவை மொத்தமும் செய்து முடிக்கப்பட்டிருந்தது. ஸ்பீல்பெர்க்கைப் பொருத்தவரை டம்மியாகவே இருந்தாலும் அதன் முழு உருவ அளவிற்கே (Life Size) சூட்டிங்கில் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தான் இந்தப் படத்திற்கான வேலையிலேயே இறங்கினார். டைனோசர்களின் லைப்சைஸ் டம்மிகள் படப்பிற்கு ரெடி. ஆனால் அதன் அசைவுகள் ஸ்பீல்பெர்க்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த ரப்பர் பொம்மைகள், தொள தொளவென அங்கும் இங்குமாக சம்பந்தமில்லாமல் அசைவது துருத்திக் கொண்டு தனியாகத் தெரியவே அது படம் பார்ப்பவர்களின் மனதில் நிச்சயமாக சிரிப்பையும் அருவருப்பையுமே வரவைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டார். ஆகவேதான் சி.ஜி.ஐயில் அதனை மீண்டும் உருவாக்கம் செய்து திரையில் உலவ விட்டார். அதன் அசைவுகள் மிகவும் திருப்தியான பின்னரே 24/08/1992 இல் சூட்டிங் தொடங்கப்பட்டது.

3) திரைக்கதை மாற்றம்

பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் மனதில் ஒரு மிகப்பெரிய அச்சம் குடிகொண்டது. எடுத்தவரை படத்தை போட்டுப் பார்த்த பின் இது நிச்சயமாய் வொர்க்-அவுட்டாகாது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். கதாசிரியர் மைக்கெல் க்ரிச்டனையும், டேவிட் கோயெப்பையும் அழைத்து விசயத்தைக் கூறினார். அவர்களும் ஒத்துக் கொள்ளவே மொத்தக் கதையும் மாற்றியமைப்பட்டது. யுனிவர்சல் நிறுவனமும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டது.

என்ன, புரியவில்லையா? நாம் பார்த்த ஜுராசிக் பார்க் கதை அதன் இரண்டாவது வர்சன். அதன் முதல் வர்சனில், ஜுராசிக் பார்க் என்பது குழந்தைகள் டைனோசரின் முதுகில் ஏறி சவாரி செய்வதாகவும், டைனோசரும், குழந்தைகளும் ப்ரெண்ட்லியாக இருப்பதாகவும் திரைக்கதை எழுதப்பட்டு அது படமாக்கப்பட்டிருந்தது.

அதுதான் ஸ்பீல்பெர்க் பயந்த விசயம். மனிதர்களும், டைனோசர்களும் எப்படி ப்ரெண்ட்லியாக இருக்க முடியும்? இருக்கலாம். முடியும்தான். சைவ டைனோசர்கள், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத டைனோசர்களைக் கொண்டு அவைகளும், மனிதர்களும் ப்ரெண்ட்லியாக இருக்குமாறு படமாக்க முடியும்தான். அதைத்தான் செய்திருந்தனர். ஆனால், இந்தத் தாவரப் பட்சிணி டைனோசர்களை மட்டுமே வைத்து, அந்தக் கதையை படமாக வெளியிட்டால், அது வெறுமனே ஒரு டாக்குமெண்டரியாக வேண்டுமானால் இருக்கலாம். மாறாக ப்ளாக் பஸ்டர், வசூலெல்லாம் கிடைக்காது. அதன் பிறகுதான் கதைக்குள் டி.ரெக்ஸ், ராப்ட்டர் போன்ற அசைவ பட்சிணி டைனோசர்களின் ஆதிக்கம் கதைக்குள் பெருமளவு புகுத்தப்பட்டது.

ஆக, நாம் பார்க்கும் இந்த ஜுராசிக் பார்க் படமானது, அதன் இரண்டாவது வர்சன்.

4) எதிர்பாராத பெருத்த சேதம்

மூன்று வாரங்களில் படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், ஒரு பெரும்பிரச்சினை வந்தது. இன்னும் ஒருசில பேட்ச்-அப் காட்சிகளும் ஒரு முக்கியமான காட்சியை மட்டுமே படமாக்க வேண்டியிருந்த நிலையில், செப்டம்பர் 11, 1992 அன்று இனிகி (Hurricane Iniki) புயல் ஹவாய்த் தீவை கடந்தது.


 மொத்த செட்டும் பாழ்.

எடுத்தவரையான பிலிம்ரோல்களும், படப்பிடிப்பு உபகரணங்களும் இரவு வேளையாகவும், அதுவும் சூட்டிங் திட்டமிடப்படாத இரவு வேளையாகவும் இருந்ததனால் அவைகள் சேதம் எதுவுமின்றி தப்பிப் பிழைத்தது. உயிர்சேதங்களும் எதுவுமில்லை. அனைவரும் தீவில் உருவாக்கப்பட்டிருந்த ஹோட்டல் அறைகளில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பித்திருந்தனர்.

5) அந்த ஒரு காட்சி

இனிகி புயலுக்கு முன் ஒரு காட்சி மட்டும் பாக்கி இருந்ததாகக் கூறியிருந்தேன் அல்லவா? அது எந்தக் காட்சி தெரியுமா?

இடைவேளைக்கு (இந்தியாவைப் பொறுத்தவரை அது இடைவேளைக் காட்சி) முன்னர் பெரிய டி.ரெக்ஸ் டைனோசரிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் அந்த இரு சிறார்கள் சாலையிலிருந்து வேலியை உடைத்துக் கொண்டு காரோடு சேர்ந்து பாதாளத்தில் விழுந்த பின் அந்தக் கார் உயரமானதொரு மரத்தில் மாட்டிக் கொள்ளுமல்லவா? அதுவரை படமாக்கப் பட்டிருந்தது. அதிலிருந்து கார் கீழே தரையில் தலைகுப்புற விழும் காட்சி - அது மட்டும்தான் பாக்கியிருந்தது.


உண்மையில் கார் மரத்தில் மாட்டிக் கொள்ளும் காட்சி எடுக்கப்பட்டிருந்தது உண்மையான மரத்தின் மேல். புயல் விளைவித்த சேதங்களில் அந்த உயரமான மரமும் காணாமல் போயிருந்தது.

பிறகு வேறு வழியில்லாமல் அதனை அந்த கவ்வாய் தனித்தீவின் அருகிலிருந்த ஓஹு (Oahu) தீவில் அந்த மரத்தைப் போலவே செயற்கையாக மரத்தின் செட் அமைக்கப்பட்டு பின்பு அந்தக் காட்சி முழுமைப் படுத்தப்பட்டது.


6) The Power of Cinema

ஆக, ஏற்கனவே ஒருமுறை இயற்கை படைத்து பிறகு அவைகள் ட்ரையல் அண்ட் எரர் என்று இயற்கையே அழித்த, டைனோசர்களின் மீள் உருவாக்கத்தை இயற்கையே விரும்பவில்லை போலும். எனினும், நமக்கு ஒரு விசயம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்கிற விதி இருந்தால் அது நம்மை எப்படியும் விட்டுப் போகாது, அல்லவா! மனிதனின் முயற்சியால் அவை மீண்டும் உலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஜுராசிக் பார்க் படத்தின் மூலம்.

என்னதான் அவை நாவலாக முதலில் வெளிவந்திருந்தாலும், படமாக எடுக்கப்படாமல் போயிருந்தால்?

நிச்சயமாக டைனோசர்களைப் பற்றி இவ்வளவு விசயங்கள் நாம் அறிந்திருப்போமா என்பது சந்தேகம்தான். The Power of Cinema!

இந்தப் படம் வெளிவராமல் விட்டிருந்தால், ஹாலிவுட் அறிமுகம் நமக்கு இன்னும் தாமதப்பட்டிருக்கும். இதற்கு முன்னரும் சில படங்கள் வந்திருந்தாலும், அவைகள் பெற்றோர்களால் தணிக்கை செய்யப்பட்டு, அவர்களால் அனுமதிக்கப் பட்ட பிறகே பார்க்க முடிந்தது. மேலும் இந்தப் படத்தை எங்கள் ஊரில் இருந்த அத்தனை பள்ளிகளும் தலா ஒரு காட்சி என்று ஒவ்வொரு நாளும் தங்களது மாணவர்களை சாரை சாரையாக ஜுராசிக் பார்க் படத்தைக் காண அழைத்துச் சென்றது. நானும் அப்படித்தான் இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்தேன்.


பின் குறிப்பு : இதற்கு முன்னரே யாத்ரீகன் என்றொரு அறிவியல் எழுத்தாளர் பாக்யாவில் தொடராகவே ஜுராசிக் பார்க்கைப் பற்றி எழுதி அது புத்தகமாகவே வெளியாகிவிட்டது. இருபது வருடத்திற்கு முன்னரே. இப்போது நான் எழுதியிருக்கும் இந்தப் பதிவானது அந்தப் புத்தகத்தில் இருந்த சில விசயங்களின் சிறு தொகுப்புதான்.


ஆக நண்பர்கள் எவரிடமாவது அந்தப் புத்தகம் இன்னும் இருந்தால், அதைக் குப்பையில் இட்டுவிடாமல் எனக்கு அளித்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.