Saturday, July 4, 2026

டெல்லி கிரைம் - சீசன் 3


Delhi Crime - Season 3

அப்டின்னு ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையா தழுவி எடுக்கப்பட்டு வெளி வந்திருக்கற ஹிந்தி கிரைம் திரில்லர் சீரிஸ். இதோட முதல் சீசனை, நான் சில வருசங்களுக்கு முன்னாடியே பாத்துட்டேன். அதோட கதையும் மேக்கிங்கும் எனக்கு பல ஹிந்தி கிரைம் வெப் சீரிஸ்களைப் பாக்கத் தூண்டியிருந்தது. அதுக்கப்புறம் இதோட ரெண்டாவது சீசனை நான் பாக்கல. நேரடியா மூனாவது சீசனைப் பார்க்க வச்சதுக்குக் காரணம் ஹ்யூமா குரேசி. அட இவங்களுமா? இவங்களும் எதாவது போலிஸா நடிச்சிருப்பங்களோன்னு பாக்க ஆரம்பிச்சேன். ஆனா அதே வர்த்திகா சதுர்வேதி, நீதி சிங் மட்டுமே போலிஸ். இது கதாபாத்திரப் பெயர்கள். நெஜப் பேரு இப்பவும் தெரியாது. தெரிஞ்சிக்குவோம். ஆனா ஹ்யூமா வில்லி. தாங்குவாங்களான்னு பார்த்தா மெரட்டி வுட்டுட்டாங்க. வாங்க அந்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.

கதைப்படி, ஒரு ஆயுதக் கடத்தலைப் பிடிக்க, ரேண்டமா சாலைல ஒரு சோதனைச் சாவடி அமைச்சுட்டு, தன்னோட போலிஸ் குழுவோட காத்துகிட்டிருக்காங்க வர்த்திகா சதுர்வேதி. ஒரு தண்ணி டேங்கர் லாரி வருது. அது போலிஸ் சாவடியைப் பாத்ததும் கொஞ்ச தூரம் முன்னாடியே நின்னுடுது. சோதனைச் சாவடியில இருந்து லவுட் ஸ்பீக்கர்ல வண்டிய விட்டு கீழ எறங்குங்கன்னு அனவுன்ஸ் பண்றாங்க. அதைக் கேட்டு வண்டியில இருந்து ரெண்டு பேர் எறங்கறாங்க. எறங்கினதும் போலீஸை நோக்கிச் சுட ஆரம்பிச்சிடறாங்க. இவங்க சுதாரிச்சு திருப்பிச் சுடவும், அவங்க வண்டி கிட்ட இருந்து காட்டு வழியா சாலைல இருந்து எறங்கி ஓடிடறாங்க. அந்த வண்டிய போலிஸ் நெருங்கி முதல்ல மெட்டல் டிடெக்ட்டர் வச்சு சோதிச்சுப் பாத்தா, வெப்பன்ஸ் எதுவும் இருக்கற மாதிரி தெரியல. பின்ன ஏன் சுட்டுட்டு ஓடிட்டாங்கன்னு சந்தேகப்பட்டு டேங்கர்ல் என்ன இருக்குன்னு பாத்தா, எல்லாம் வயசுப் பொண்ணுங்க. அவங்களக் கடத்திட்டு போறப்ப தான் செக்கிங்ல மாட்டிக்கக் கூடாதுன்னு ஓடினது.

அதுக்கபுறம் இது சம்பந்தமா விசாரணை நடக்க, அதுல கொஞ்சம் சமீபத்துல இதே மாதிரி ஒரு இருபது பொண்ணுங்க கடத்தப்பட்ருக்கறது தெரிய வருது. இப்ப அந்த வுமன் ட்ராஃபிக்கிங் குரூப், இந்தப் பொண்ணுங்கள யார்கிட்டயாவது விக்கறதுக்குள்ள கண்டுபுடிச்சுக் காப்பாத்தனும். இதுதான் கதை. கதையில்ல. உண்மைச் சம்பவங்களின் அடிப்படைல எடுக்கப்பட்டதுதான். சரி, இப்ப போலீஸால ஆல்ரெடி கடத்தப்பட்ட பெண்கள எப்டி கண்டுபுடிக்க முடியும்? என்ன க்ளூ இருக்கு? ஆல்ரெடின்னா எங்கயிருந்து கெளம்பிருக்காங்க, எங்க போய் சேர்ந்திருக்காங்கன்னு எந்த க்ளூவும் இல்ல. இதுல இது ஒரு இண்டர்ஸ்டேட் வழக்கு வேற.

அப்பதான் டெல்லி டி.சி.பி நீதி சிங் கிட்ட ஒரு வழக்கு வருது. ஒரு பொண்ணு எய்ம்ஸ் மருத்துவமனையில, ரெண்டு வயசுக் கொழந்தைய, அது பயங்கரமா அடி அண்ட் கடி பட்ருக்கற நெலையில கொண்டு வந்து ஹாஸ்பிட்டல் காரிடார்ல, ஒரு ஸ்ட்ரெச்சர்ல போட்டுட்டு, திரும்பிக் கூட பாக்காம ஓடிருக்கான்னு. அந்த எய்ம்ஸ் சிசிடிவி ஃபுட்டேஜ்ல செக் பண்ணிப் பார்க்கவும், அந்தப் பொண்ணு ஒரு ஆட்டோல வந்து எறங்கிருக்கு. அதுவும் மீறிப் போனா பதினாலு வயசு கூட இருக்காது அந்தப் பொண்ணுக்கு. இப்ப போலிஸ் கைல ஆட்டோ நம்பர்ங்கற ஒரு துப்பிருக்கு. அத வச்சு நூல் பிடிச்சிட்டே போக, அது இந்த வுமன் ட்ராஃபிக்கிங் வழக்கோட இண்டர் க்ராஸ் ஆகுது. ரெண்டு வழக்கையும் இப்ப ஒரே டீமாக்கி தேடிக் கண்டுபுடிச்சது தான் மிச்சக் கதையும் நிஜ வழக்கும். கதைப்படி அந்த ரெண்டு வயசுக் கொழந்தையோட பேரு நூர். ஆனா நிஜ சம்பவத்துல, எய்ம்ஸ் மருத்துவமனைல கொண்டு வந்து, இந்த நிலைல சிகிச்சைக்காக போடப்பட்ட கொழந்தையோட பேரு ஃபலக். கூகுள் பண்ணிப் பாருங்க. ரொம்பக் கொடூரமான பல தகவல்கள் இருக்கும்.

வர்த்திகா சதுர்வேதியா நடிச்சிருக்கறது ஷிஃபாலி ஷா. இவங்க நடிப்பு முதல் சீசன்லயே நம்மள ரொம்பக் கவர்ந்துடும். இப்ப இந்த மூனாவது சீசன்லயும் ரொம்ப ரெஸ்பான்சிளான நடிப்பு. அந்த டி.ஐ.ஜி கதாபாத்திரத்துக்கு அவ்ளோ மரியாதையும் நம்பும்படியாவும் இருக்குதுன்னா அதுக்கு அவங்களோட கண்களும் ஒரு முக்கியக் காரணம். சில சீன்ஸ்ல அவங்க போலீஸா அதை ஹேண்டில் பண்ணாம, ஒரு பொறுப்புள்ள வெகுஜனத்தோட பார்வைல டி.ஐ.ஜி உடுப்புக்குண்டான பொறுப்போட ஹேண்டில் பண்ணியிருக்கறது மிகச் சிறப்பு. இந்த டெல்லி கிரைம் வெப் சீரிஸ்ல எவ்ளோ பாராட்டினாலும் அதுக்கு இவங்க நடிப்பு, அவ்ளோ யதார்த்தமா இருந்தது ஒரு முக்கியக் காரணம். இவங்க கூட ஏ.சி.பியா நடிச்சிருக்கற நீதி சிங் கேரக்ட்டரையும் சேர்த்தே ஆகணும். தராசுல ஒரு பக்கம் வர்த்திகான்னா மறுபக்கம் நீதி. சில சீன்ஸ் எல்லாம் குறிப்பா அந்தக் குழந்தை நூர்க்காக இவங்க ஒடஞ்சு அழறது, நூர்க்கு ஐ.சி.யூவுல ட்ரீட்மெண்ட் நடந்துகிட்டிருக்கறப்ப, நடந்துகிட்டிருக்கறப்பன்னா, ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல, அந்தக் கொழந்த எய்ம்ஸ்ல கொண்டு வந்து போடப்பட்ட அந்த எல்லா நாட்கள்லயுமே இண்டன்சிவ் கேர் யூனிட்ல தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

தலைல பலமா அடிபட்டிருக்கு. மூச்சு விட சிரமம். ரெண்டு கன்னங்கள்லயும் ஒரு அடல்ட்டோட பற்கள் ஆழமா கடிச்ச காயங்கள். இல்ல ஏன்? குழந்தைகளோட கன்னத்துல முத்தம் கொடுக்கறதே வைரஸ் கிருமிகள் பரவும் அப்டின்னு டாக்டர்ஸ் அட்வைஸ் பண்ணது எப்டின்னா, நம்ம முகம் கைகள் எல்லாம் சுத்தமா இருந்தாத்தான் குழந்தைய தொடவே செய்யனும்னு. ஆனா கன்னத்துல பல்லு ஆழமா பதியிறளவுக்குக் கடிக்கிறதெல்லாம், ச்சைக் என்ன மாதிரியான குரூரம் இதெல்லாம்? இவ்வளவையும் தாண்டி உயிருக்குப் போராடிகிட்டிருந்த அந்தக் குழந்தைக்கு ரெண்டு வாட்டி ஹார்ட் அட்டாக் வந்திருக்கு 😢 அதுவும் ரெண்டு வயசுல. என் அனுபவப்படி இப்டி ஒரு நியூஸையோ, காட்சியையோ கேட்டதில்ல, பாத்ததில்ல. நெனைக்கவே மனசு பதறுது. அயம் சாரி, மூனாவது ஹார்ட் அட்டாக்ல அந்தக் கொழந்த உயிர் போயிடுச்சு.

ஆல்ரெடி இந்த சீசனைப் பாத்திருந்தா ஓகே. ஆனா இனிமே பாக்க நினைக்கிறவங்க மனசைக் கல்லாக்கிகிட்டுப் பாருங்க. இந்த சீன் யாரா இருந்தாலும் அவங்க மனச அசைச்சுப் பாத்துரும். அதுக்கு இளகிய மனம் படைத்தவர்களாத்தான் இருக்கனும்னு அவசியமில்ல. மனுசன்னா இந்த உணர்வெல்லாம் அடிப்படை. இதுவே இப்டின்னா தாய்லாந்துல விக்கப்பட்ட பெண்கள் நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இதுல ஹ்யூமா குரேசி நடிச்சிருக்கற அந்த கேரக்ட்டர் தான், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாம பொண்ணுங்கள தாய்லாந்துல லட்சங்களுக்கு ரேட் பேசி நல்ல வேலை வாங்கித் தரேன்னு ஆசை வார்த்தை சொல்லி கடத்திட்டுப் போய், அவங்கள விக்கிறது. நல்லா யோசிச்சுப் பாருங்க. பஸ்ல கூட்டமா இருந்தாலே நம்மால மூச்சு விட முடியாது. இதுல இந்தப் பொண்ணுங்கள ஒரு எடத்துல இருந்து மத்த எடங்களுக்கு கடத்திட்டுப் போறதெல்லாம், டேங்கர்ஸ்லயும் கண்டெய்னர்கள்லயும். நம்மள அப்டி யாராச்சும் கூட்டிட்டுப் போறதா இருந்தா போவமா? அந்தப் பொண்ணுங்க என்ன ஆடுகளா இல்ல மாடுகளா?

இதெல்லாம் கதையா நான் எடுத்துக்கல. நெஜத்துல நடந்தது, நடக்கறது தான 😳 இத நான் ஏன் இவ்ளோ எமோசனலா எடுத்துக்கறேன்னா, வுமன் ட்ராஃபிக்கிங்னு மட்டும் இல்லாம பல மோசமான குற்றங்கள் எங்கயோ இல்ல, நம்ம தமிழ்கூறும் நல்லுலகில் அருகிப் பெருகினதைக் கேக்க, பாக்க, படிக்கச் சகிக்காமயும், டெல்லி கிரைம்ஸ் மாதிரி பிற்காலத்துல சென்னை கிரைம்ஸ்னு ஒரு வெப்சீரிஸோ படமோ உருவாகாமல் போகக் கடவது.

மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம் ப்ரெண்ட்ஸ். வரேன்!

No comments:

Post a Comment